ரமணமகரிஷி (8)

 ரமணமகரிஷி (8)

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :

பகுதி 8


:


இந்தியப் புனிதத்  தலங்களிலேயே மிகப் புராதன பெருமையுற்றது அருணாச்சலம். "இதுவே மண்ணில் இருதயம்" என்றார் பகவான். " மற்ற யாவற்றையும் பார்க்கிலும் மிக புண்ணியமான இடம் அருணாச்சலம்'' என்கிறது ஸ்கந்தபுராணம் ஆம். இது சிவபெருமானின் பவித்ரமான இருதய மையம். இங்கே எண்ணற்ற துறவிகள் வாழ்ந்திருக்கின்றனர். தங்களுடைய புனிதத்தன்மையை இந்த மலையுடன் கலந்து விட்டிருக்கிறார்கள். பகவானே சொல்லியிருக்கிறார் இது சித்தர்கள் உறையும் இடம். நம் கண்ணுக்குத் தெரியாத போகலாம் ஆனால் அவர்கள் நடமாட்டம் இங்கு இருக்கவே  செய்கிறது  என்பது  உண்மை..இரவில் மலையைச் சுற்றி தோன்றி மறையும்  ஒளிப்புள்ளிகளை கண்டு வியந்தவர்  அனேகம் பேர்.

 தென்கிழக்குச்  சரிவில் உள்ள ஒரு குகையில் தான் பகவான் ஸ்ரீ ரமணர் நீண்ட நாட்கள் தங்கியிருந்தார். அதனை விருபாட்ச குகை என்பார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டில்  விருபாட்சர் என்ற துறவி அங்கு வந்து வசித்ததாகவும் பின்னர்   அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அது ஓம் என்னும் பிரணவ வடிவில் அமைந்திருப்பது ஓர் அதிசயம்.அதை விட ஓம் என்ற நாதம் அங்கே உள்ளே ஒலிப்பது.

பகவான் விருபாட்சி குகையில் தங்கி இருந்த போது,அதன் மீது சொத்துரிமை கொண்ட"  ட்ரஸ்டி "கள்  பகவானை தரிசிக்க வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலித்தார்கள். அதனை ஊக்குவிக்க விரும்பாத ஸ்ரீ ரமணர் அங்கிருந்து அகன்றார்.. அதனை உணர்ந்த ட்ரஸ்டிகள் பகவானை திரும்ப விருபாட்ச குகைக்கு வந்து தங்கி கொள்ளும்படி மன்றாடினார். தாங்கள் இனி யாரிடமும்  கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று உறுதி கூறினர்.

 பகவான் மீண்டும் விருபாட்ச குகைக்கு வந்து தங்கினார். கோடையில் மட்டும் முலைப்பால் தீர்த்த கரையில் உள்ள குகை ஒன்றில் தங்குவார். மிகக்குளு மையான இடம் அது. தூய்மையான நீரும் தடையின்றி கிடைத்தது. ஒரு பெரிய மாமரமும், அதனால் நிழலும் பெரிய அளவில்  இருக்கும்.. பக்தர்களில் இருவர் அந்த குகையை சுற்றி ஒரு சுவர் எழுப்பி,, வாசல் கதவும் போட்டு தந்தனர்.

 மலைவாச காலத்தின் பெரும் பகுதியிலும் பகவான் மௌனத்தையே  கடைப்பிடித்தார். அவரிடமிருந்து வீசிய ஒளியில் நிறைய பேர் அவருடைய பக்தர்கள் ஆயினர்..உண்மை யைத்  தேடுகிறவர்கள்  தாம்  என்றில்லை. பாமர மக்களும் குழந்தைகளும் கூட அவரிடம் வந்து சேர்ந்தனர். குழந்தைகள்          அவரருகே அமர்ந்து கொள்வார்கள். அவரைச்சுற்றி விளையாடுபவர்கள். மகிழ்வோடு  திரும்பிச் செல்வார்கள்.

 ஸ்ரீ ரமணர் தனது சீடர்களுக்காக விளக்கங்களும் அறிவுரைகளையும் வழங்குவது வெகு அரிதாகத்தான். ஆனால் அவருடைய  மவுனத்தால் அவர்கள் பயிற்சி தடைப்பட்டதில்லை அவரது உண்மையான போதனை மவுனத்திலேயே திகழ்ந்தது.

 பகவான் ஸ்ரீரமணரைத் தேடி வந்தவர்களுல் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் பால் பிரிண்டனும் ஒருவர்.

 காஞ்சி பரமாச்சாரியாரை முதலில் சந்தித்த அவர், அவருள் ஏற்பட்ட மனக் குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டுமெனில் ரமணரை சந்தியுங்கள் என்றார் காஞ்சி பெரியவர்.

 அதன்படி, திருவண்ணாமலை வந்து  ரமணரை சந்தித்தார்..

 பகவானின் மௌனம் தனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை இப்படி கூறுகிறார் பால் ப்ரண்டன் அவர்கள்.

ஒருவருடைய கண்களில் இருந்து அவருடைய ஆன்மாவை கண்டுகொள்ள முடியும் என்று   நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் மகரிஷியின் கண் முன்னே நான்  தயங்கினேன். குழம்பினேன்.  திகைப்புற்றேன் என்னுடைய பார்வையை என்னால் திருப்ப முடியவில்லை. நான் அவரிடம்  என்னவெல்லாமோ கேட்கவேண்டுமென்று என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் முன்பாக எதுவும் கேட்கத் தோன்றவில்லை.. அதே சமயம் இருவருக்கும் மௌன வெளியிலே   பரிவர்த்தனை நடந்தது. நான்  எதிர்பார்த்து வந்த கேள்விகளுக்கெல்லாம் மௌன வெளியிலேயே பதில் கிடைத்தது..என்னுடைய பிரச்சனைகள் எல்லாம்  துச்சமாகிவிட்டன.ஒரு பேரமைதி என்னுள் புகுந்து கொண்டது.

 அமைதியற்ற மனங்களுக்கு அமைதியையும், வேதனையுற்ற  இதயங்களுக்கு ஆறுதலையும் பகவான் அருளினார் என்கிறார் பால் பிரண்டன் அவர்கள்.

 பகவான் ஸ்ரீ ரமணர் அவர்களின், இந்த வினோதம் பற்றி"  A    Search  in secret India"
 என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த நூலின் மூலம் ரமணரிஷியின்  மகிமை  உலகம் முழுவதும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது.


 ஸ்ரீ ரமணரை தரிசிக்க வந்தவர்களில்  எச்சம்மாள் ( லட்சுமி அம்மாள்)  குறித்து  நாளைய பதிவு.






முருக. சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி