தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்றை படம் பிடித்த அறிஞர்
தொ.பரமசிவன் மறைவு: தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்றை படம் பிடித்த அறிஞர்
தமிழ் பேராசிரியரும் பண்பாட்டு ஆய்வாளருமான தொ. பரமசிவன் திருநெல்வேலியில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70. பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் வியாழக்கிழமை பிரிந்தது.
"தொ.ப" என்று அவருடைய மாணவர்களாலும் வாசகர்களாலும் அழைக்கப்பட்ட தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950ல் பிறந்தவர்.
ஓட்டுநராக இருந்த தந்தை இளம் வயதிலேயே இறந்து விட, தாயின் அரவணைப்பில் தொ. பரமசிவன் வளர்ந்தார்.
மதுரை பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழும் படித்தவர். ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, 1976ல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்தார்.
தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தனைப் பற்றி ஆய்வு செய்யவே அவர் விரும்பினார். ஆனால், அவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வுமேற்கொள்ளும்படி கூறவே, அழகர் கோயிலை தனது ஆய்வுப் பொருளாக அவர் எடுத்துக் கொண்டார்.
அந்தக் கோயில் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வு, ஆய்வு நூல்களின் எல்லைகளை விரிவடையச் செய்தது.
இந்த ஆய்வு பலரால் பாராட்டப்பட்டதையடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழமே அதனை புத்தகமாக வெளியிட்டது. வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்வில், அந்தக் கோயில் கட்டப்பட்ட விதம், அதன் வரலாறு, சம்பிரதாயங்கள் குறித்த தகவல்களே இடம்பெற்றிருக்கும். ஆனால், தொ. பரமசிவன், அழகர் கோயிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவை தனது ஆய்வாக முன்வைத்தார்.
தமிழ் மொழியின் மீதும் பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்தபோதும் தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்காக சமஸ்கிருதமும் பயின்றார்.
அழகர் கோயில் நூலுக்குப் பிறகு வெளிவந்த அவரது "அறியப்படாத தமிழகம்" நூல், அவரை தமிழ் பேசும் பகுதிகள் என்றும் அறியப்பட்டவராக்கியது.
நாட்டார் தெய்வங்கள், பெருந்தெய்வங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், கலை, சாதி ஆகியவை குறித்து தொ. பரமசிவன் முன்வைத்த பார்வை தற்கால தமிழ் உரையாடல்களில் மிக முக்கியமானதாக அமைந்தது.
மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றிய அவர், பிறகு திருநெல்வேலி பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
"பகுத்தறிவாளர்கள் பக்தியைப் பேச மாட்டார்கள். பக்தி இலக்கியம் படிக்க மாட்டார்கள். ஆனால், தொ. பரமசிவன் பெரியாரைப் பற்றியும் பேசுவார், பெரியாழ்வாரையும் பற்றிப் பேசுவார். பல்துறை வித்தகர். மானுடவியல் சார்ந்து இயங்கியவர்கள் தமிழகத்தில் குறைவு. ராகுல சாங்கிருத்தியாயனுக்குப் பிறகு, மயிலை சீனி வேங்கசாமிக்குப் பிறகு தொ. பரமசிவனை நாம் வைக்க முடியும். கடவுள் மறுப்பை மனதில் கொண்டிருந்தாலும் கோயில்கள் குறித்த ஆய்வுகளைச் சிறப்பாக செய்தவர்" என்கிறார் மதுரை தியாகராசர் கல்லூரியில் அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்.
ஒரு முறை தனக்கும் பரமசிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலை நினைவுகூர்கிறார் ஞானசம்பந்தன். "நாங்கள் ஒரு முறை நேதாஜி சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த திண்டுக்கல் முருகன் கோயிலுக்கு வணங்கச் சென்றேன். அவர் வெளியில் நின்று கொண்டிருந்தார். நான் வணங்கிவிட்டு வந்ததும், "முருகன் சிலைக்குக் கீழே கல்வெட்டு உண்டு, பார்த்தீங்களா, இடுப்பில் குறுவாளும் உண்டு. இது நாயக்கர் கால கோயிவில். பாண்டியர் காலக் கோயில் இல்லை" என்றார். நான் கேட்டேன், "நிம்மதியா சாமி கும்பிட விடமாட்டீங்களா? இங்கேயவும் வந்து கடவுள் இல்லைனு சொல்வீங்களா?" என்றேன். அப்போது தொ.ப. சொன்னார், "கடவுள் இல்லைனு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்" என்றார். ஆழமான கருத்துகளை மக்கள் மொழியில் பேசிய நல்லறிஞர் அவர்" என்கிறார் ஞானசம்பந்தன்.
தெய்வங்களும் சமூகமரபுகளும், பண்பாட்டு அசைவுகள், இதுவே சனநாயகம், பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு, சமயம்- ஓர் உரையாடல், தெய்வம் என்பதோர், தொ. பரமசிவன் நேர்காணல்கள் ஆகியவை அவரது நூல்களில் சில.
சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்வில் அதனைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இவரது அழகர் கோயில் நூலை அறிமுகப்படுத்திப் பேசினார்.
பாளையங்கோட்டையில் தன் மனைவியுடன் வசித்துவந்த தொ. பரமசிவனுக்கு ஒரு மகனும் மகளும் உண்டு.
அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவரது மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நேரிலும் சமூக ஊடகங்கள் வாயிலாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நன்றி https://www.bbc.com/tamil
Comments