ஓஷோ

 ஓஷோ பிறந்த நாள் இன்று டிசம்பர் 11


ஓஷோவின் ஆரம்ப வாழ்க்கை முதல் உயில் வரை - 6 தகவல்கள்
துஷார் குல்கர்னி

ஓஷோவின் வாழ்க்கையில் பொதிந்திருந்த அதே அளவு ரகசியம் அவரது மரணத்திலும் மறைந்திருப்பது காலத்தின் நகைமுரண் என்றே கூறலாம்.

அவருடைய மரபு, அவருடைய வாழ்க்கையின் அசாதாரண அம்சங்களில் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்.

1.ஓஷோவின் ஆரம்பகால வாழ்க்கை
மத்தியபிரதேச மாநிலம் குச்வாடாவில் 1931 டிசம்பர் 11ஆம் தேதியன்று பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோஹன் ஜெயின்.

சிறுவயதில் இருந்தே ஊர் சுற்றிப் பார்ப்பதில் மிக்க விருப்பம் கொண்டிருந்ததாக 'Glimpses of a Golden Childhood' என்ற தனது புத்தகத்தில் ஓஷோ குறிப்பிட்டுள்ளார்.

மன ஆரோக்கியத்தை சோதிக்க டிரம்ப் செய்த பரிசோதனையை நீங்களும் செய்யலாமே!
வீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால்
ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா?
ஜபல்பூரில் படிப்பை முடித்த அவர், ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

பல்வேறு மதங்கள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றி அவர் நாடு முழுவதும் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமைத்தன்மையை கொண்டது.

பிரசங்கத்துடன் தியான முகாம்களையும் ஏற்பாடு செய்யத் தொடங்கிய அவர், முதலில் ஆச்சார்யா ரஜ்னீஷ் என்று அறியப்பட்டார்.

விரிவுரையாளர் பணியில் இருந்து விருப்பத்துடன் விலகிய அவர், 'நவசன்யாச' இயக்கத்தைத் தொடங்கினார். அதன்பிறகு தனது பெயரை 'ஓஷோ' என்று அவர் குறிப்பிடத் தொடங்கினார்.

2.அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்
முதலில் அமெரிக்காவிற்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பிறகு அங்கேயே குடியேறி, ஓரேகானில் 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஆசிரமத்தை அமைத்தார்.

அமெரிக்காவிற்கான ஓஷோவின் பயணம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அவருடைய விலையுயர்ந்த கடிகாரங்கள் ரோல்ஸ் ராய் கார்கள், டிசைனர் ஆடைகள் காரணமாக அவர் எப்போதும் விவாதங்களின் மையமாகவே திகழ்ந்தார்.

1985இல் ஓஷோ இந்தியாவிற்கு திரும்பினார்.

3. ஓஷோவின் மரணம்
இந்தியா திரும்பிய அவர், புனேயில் கோரேகாவ் பூங்கா பகுதியில் இருந்த தனது ஆசிரமத்தில் தங்கினார், 1990 ஜனவரி 19ஆம் தேதியன்று காலமானார்.

அவரது மரணத்திற்கு பிறகு புனே ஆசிரமத்தை அவரது நெருங்கிய சீடர்கள் கைவசப்படுத்தினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்து சிலரின் கைவசப்பட்டது குறித்த சர்ச்சைகளும் பெரிய அளவில் எழுந்தது.

ஓஷோவை பற்றி பிபிசியிடம் பேசிய யோகேஷ் தக்கர் இவ்வாறு கூறுகிறார், "ஓஷோவின் எழுத்துக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், எனவே அதுகுறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவருடைய உயில் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறேன்."

ஓஷோவின் மரணச் சான்றிதழை வழங்கிய டாக்டர் கோகுல் கோகாணி, நீண்டகாலத்திற்கு பிறகு தனது மெளனத்தை கலைத்தார். கலைந்த மெளனமோ கலக்கத்தை ஏற்படுத்தியது. தவறான தகவல்களை கொடுத்து மரண சான்றிதழில் தனது கையெழுத்து பெறப்பட்டது என்று அவர் கூறினார்.

4.ஓஷோவின் மரணத்தன்று நடந்தது என்ன?
ஓஷோவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை ஆராயும் 'Who Killed Osho' என்ற புத்தகத்தை எழுதியவர் அபய் வைத்யா. அவர் கூறுகிறார், "1990 ஜனவரி 19ஆம் தேதியன்று டாக்டர் கோகுல் கோகாணி ஓஷோ ஆசிரமத்திலிருந்து அழைக்கப்பட்டார். உங்கள் லெட்டர்ஹெட்டையும், அவசரகால முதலுதவிப் பெட்டியையும் கொண்டு வாருங்கள் என்று அவரிடம் கூறப்பட்டது."

டாக்டர் கோகுல் கோகாணி தனது வாக்குமூலத்தில் இவ்வாறு எழுதினார்: "இரவு இரண்டு மணிக்கு அங்கு சென்றேன், ஓஷோ தனது உடலை தியாகம் செய்கிறார், அவரை காப்பாற்றுங்கள் என்று என்னிடம் அவரது சீடர்கள் கூறினார்கள், ஆனால் அவரிடம் செல்ல அனுமதிக்கப்படவில்லை".

"பல மணி நேரம் நான் அங்கேயே இருந்தேன், அதன்பிறகு அவர் இறந்துவிட்டார் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது, அவரது மரணம் தொடர்பான இறப்பு சான்றிதழ் வழங்குமாறு என்னிடம் கோரினார்கள்."

ஓஷோ எப்போது இறந்தார் என்ற கேள்வியையும் மருத்துவர் கோகுல் எழுப்புகிறார். மாரடைப்பினால் ஓஷோ மரணித்ததாக இறப்பு சான்றிதழில் எழுதுமாறு சீடர்கள் அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

எந்தவொரு துறவியின் மரணத்தையும் விழாவைப்போல் கொண்டாடும் வழக்கத்தை கொண்டது ஓஷோவின் ஆசிரமம். ஆனால், ஓஷோ இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அவரது இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டதும், அவருடைய இறப்பின் கொண்டாட்டமும் சுருக்கமாக இருந்ததும் அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்தது.

ஓஷோவின் தாயாரும் அந்த ஆசிரமத்திலேயே தங்கியிருந்தார். ஓஷோவின் மரணம் பற்றிய தகவல் அவரது தாய்க்கு மிகவும் தாமதமாகவே தெரியப்படுத்தப்பட்டதாக ஓஷோவின் செயலாளராக இருந்த நீலம் பிறகு வழங்கிய ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

ஓஷோவை கொன்றுவிட்டார்கள் என்று நீண்ட காலமாக அவரது தாயார் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார் என்கிறார் நீலம்.

5.ஓஷோவின் உயில்
ஓஷோவின் ஆசிரமத்தின் சொத்துக்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும், புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு 100 கோடி ரூபாய்வரை ராயல்டி கிடைக்கிறது என்கிறார் யோகேஷ் தக்கர்.

ஓஷோவின் பாரம்பரியத்தை கட்டுப்படுத்தும் ஓஷோ இன்டர்நேஷனல், ஓஷோவின் சொத்து உயிலின் அடிப்படையில் கிடைத்ததாக கூறுகிறது.

ஓஷோ இன்டர்நேஷனல் கூறும் உயில் போலி என்கிறார் யோகேஷ் தக்கர். ஆனால் ஓஷோ இன்டர்நேஷனல் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவரது சீடர் அம்ரித் சாதனா, இவை அடிப்படை ஆதாரமற்றவை, பொய்களின் மேல் கட்டமைக்கப்ப்ட்டவை என்று கூறி புறந்தள்ளுகிறார்.

6.ஓஷோவின் மீதான வர்த்தக குறி்யீடு
'ஓஷோ' என்ற வர்த்தக குறியீட்டை ஐரோப்பாவில் பெற்றுள்ள ஓஷோ இன்டர்நேஷனல், ஓஷோ லோட்டஸ் கம்யூன் என்ற மற்றொரு நிறுவனத்திற்கு சவால் விடுத்தது.

அது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றம் இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு ஓஷோ இன்டர்நேஷனலுக்கு சாதகமாக இருந்தது.

ஓஷோ இன்டர்நேஷனலின் பதிப்புரிமை மற்றும் வணிக குறியீடு பற்றிய சர்ச்சைக்குரிய விவாதத்தில், ஓஷோவின் கருத்துக்களை அவரை விரும்பிய மக்களுக்கு தூய வடிவில் வழங்குவதாகவும், அதனால்தான் இந்த உரிமைகளை வைத்திருக்க விரும்புவதாகவும் கூறுகிறது.

ஆனால் பதிப்புரிமை, காப்புரிமை போன்றவை பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும், கருத்துகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் அல்ல என்று ஓஷோவே ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

91 வயது அழகியின் அசாதாரண வாழ்க்கை கதை
புனேயில் உள்ள ஓஷோவின் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் இருந்து ஓஷோவை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

"ஓஷோ ஒருபோதும் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, 1931 டிசம்பர் 11 முதல் 1990 ஜனவரி 19வரை பூமிக்கு வருகை தந்தார்" என்ற வார்த்தைகள்தான் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி