வி கே ராமசாமி
வி கே ராமசாமி நினைவு நாள் இன்று டிசம்பர் 24
பலருக்கும் நகைச்சுவை நடிகராகவே அறிமுகம் ஆகியுள்ள வி.கே ராமசாமி அவர்கள் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்துள்ளார். அவற்றின் வெரைட்டி ரோல்கள் பற்றிய சிறு குறிப்பு:
பராசக்தி :
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹீரோவாய் அறிமுகமான இந்தப் படத்தின் சர்ப்ரைஸ் வில்லன் வி.கே ராமசாமி. என்றும் மறக்க முடியாத 'பராசகதி'யின் க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் ' என் தங்கை கல்யாணியின் வாழ்க்கையில் குறுக்கிட்ட கயவன் ' என்று சிவாஜி மூச்சுவிடாமல் பேசும் வசனத்தில் வரும் கயவன் வேறு யாரும் இல்லை. வி. கே ஆர்தான். சிவாஜியின் முதல் படத்தில் முக்கியமான வில்லன் இவர் என்பது ஓர் அழகான ஆச்சரியம்.
மெளன ராகம் :
சில இயக்குநர்களுக்கு சில நடிகர்களை மிகவும் பிடித்துவிடும். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் விருப்ப நடிகர் லிஸ்ட்டில் வி.கே. ஆருக்கு எப்போதும் இடமுண்டு. தனது பல படங்களில் அவருக்கு தனி கதாபாத்திரம் தந்து சிறப்பித்தவர். 'மெளன ராகம்' படத்தில் மிகச்சிறு கேரக்டர்தான். இடைவேளைக்குப் பிறகு வரும் இறுக்கமான பகுதியை ரிலாக்ஸ் செய்வது வி. கே ஆருக்கும் இந்தி பேசும் மெக்கானிக் கடைக்காரருக்குமான காமெடி சீன்களே.
வருசம் 16 :
இயக்குநர் ஃபாசிலின் ஃபேவரைட் வி.கே. ராமசாமி. இந்தப் படத்தின் நாயகன் கார்த்திக்கின் தாத்தா கதாபாத்திரத்தில் ப்ரமாதப்படுத்தினார் மனிதர். வேலைக்காரராக வரும் ஜனகராஜும் இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் தியேட்டர் கலகலத்தது உண்மை. வருசங்கள் கடந்தாலும் மறக்க முடியாத படமும் தாத்தாவும்.
ரெட்டை வால் குருவி :
கிட்டத்தட்ட படத்தின் செகண்ட் ஹீரோ. பட ஆரம்பம் முதல் கடைசிக் காட்சி வரை வரும் கதாபாத்திரம். நாயகன் மோகனுக்கு அட்வைஸ் தந்து பல்ப் வாங்குவதாகட்டும், நல்லது செய்யப்போய் அது திரும்பி அவருக்கே வினையாக மாறப் பதறுவதாகட்டும் காமெடியிலும் குண்சித்திரத்திலும் வெளுத்திருந்தார் வி. கே. ராமசாமி. அவருக்கு பாட்டு மட்டும்தான் தரவில்லை பாலு மகேந்திரா. மார்க்கபந்து கேரக்டரும் சட்டென்று நம் நினைவில் வந்து மகிழச் செய்வதே.
ஆண்பாவம் :
இவரின் கேரியரில் முக்கியமான படம். நாயகர்கள் பாண்டியன், பாண்டியராஜனுக்கு அப்பாவாக வந்து படம் முழுவதிலும் ரகளை நடிப்பில் ரவுசு செய்திருப்பார். ராமசாமி டூரிங் டாக்கீஸின் முதலாளியாகவும், அவர் அம்மாவாக நடித்திருக்கும் கொல்லங்குடி கருப்பாயி உடனான அவரின் உரையாடல்களும் என்றும் நினைவில் நிற்பவை. மகனின் அண்ட்ராயரைப் போட்டுவிட்டு வந்து எனக்கும் ஜாலிம் லோஷன் எடுத்துவை என்று போவதெல்லாம் வி.கே. ஆரின் ட்ரேட்மார்க் சிரிப்பு.
அக்னி நட்சத்திரம் :
வருசம் 16 பட வெற்றி ஜோடி மணிரத்னத்தின் இயக்கத்தில் சேர்ந்த படம். படத்துடன் சேராத தனி காமெடி என்றாலும் குத்தாட்டம் பார்க்கப்போய் போலீஸிடம் மாட்டுவதும், ஆபாசப்படம் பார்த்து வீட்டில் எல்லோரிடமும் சிக்குவதும், மனைவியிடம், டிஸ்கோ சாந்தியிடமும் ஒரே சமயம் சிக்கி சின்னாபின்னமாவதும் முதலாளி வி. கே . ராமசாமி அக்னி நட்சத்திரத்தில் கூல் செய்தார்.
அரங்கேற்ற வேளை :
மலையாள இயக்குநர் ஃபாசிலின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் மிக அற்புதமான கதாபாத்திரம் வி. கே ஆருக்கு. நம்பிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நொடித்துப்போன சக்தி நாடக சபா என்ற நாடகக் குழுவை வைத்துக்கொண்டு பிரபு, ரேவதியுடன் காமெடி செய்தாலும் சரிவர இயங்காமல் போன தன் நாடகக் குழுவின் வலியையும் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
இப்படி நகைச்சுவை, குணசித்திரம், வில்லத்தனமான பாத்திரங்களிலும் தனது பெஸ்ட்டை வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் இறந்தாலும் வாழும் வி. கே ராமசாமி என்னும் கலைஞன்.
- கணேசகுமாரன்.
நன்றி: விகடன்
Comments