யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்
யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்
🙏 🙏 🙏 எங்கு நானிருப்பினும்
செய்வதேது ஆயினும்
ஏகனாயிருப்பினும்
கூட்டமோடு ஆடினும்
பொங்கு கோபமாயினும்
பூஞ்சிரிப்பு ஆயினும்
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
நல்லனாய் இருப்பினும்
அல்லவேறு ஆயினும்
கள்ள ஞானப் பொய்மையோடு
காதல் பேச்சு பேசினும்
பள்ளம் பாயும் நீரைபோல
காமவேகம் ஆயினும்
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
கடந்து போன பாதையில்
நடந்து போன வேதனை
கிடங்கு போல பூட்டியே
அடங்கி வாதை செய்யுமே
தடங்கள் யாவும் மாற்றி வைத்து
தம்மை மேலும் ஏற்றியே
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
வாடி நின்ற பூமிபோல்
வானம் பார்த்த ஏரிபோல்
பாடிப்பாடித் தன் இணை
தேடுகின்ற பேடைபோல்
தேடித்தேடி என்னுள்ளே
உந்தன் நாமம் சொல்கிறேன்
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
வாழ்க்கை இங்கு வேதனை
வாய்மையாவும் சோதனை
தாழ்வுறாத வண்ணம் வந்து
எந்தன் நெஞ்சில் தங்குவாய்
சூழ்ந்து வந்த ஊழ்வினை
சுற்றி நின்று தாக்கையில்
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
என்னுள் வந்து தங்கி நீ
இரும்பில் செய்த வாளதாய்
வெண்ணெய் பூசித் தோகையோடு
வீசுகின்ற கருவியாய்
நாணுகின்ற செயல்கள்யாவும்
நான் துணிந்து நிற்கவே
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
சுற்றி நின்ற உறவுகள்
சோம்பலின்றி வாழவும்
பற்றி நின்ற நட்புகள்
பண்பு கூட்டி பேசவும்
கற்றறிந்த சபையிலே
எந்தன் வாக்கு வெல்லவும்
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
பச்சை நெல்லு வயலிலே
வெள்ளை கொக்கு காட்சியாய்
இச்சை கொண்ட என்னுள்ளே
உந்தன் ரூபம் ஜோதியாய்
அச்சு வெல்லக்கட்டியாக
ஆனையாக தோன்றுவாய்
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
செம்மையாய் சிறப்பினோடு
சேர்ந்து வந்த செல்வமாய்
தன்மையாய் தடங்கலின்றி
தாழ்ந்து வந்த மேகமாய்
உண்மையாய் உணர்ச்சியாய்
உயர்வடைந்த காதலாய்
யோகி ராம்சுரத்குமார்
என்னை வந்து ஆளுவாய்
ஆண்டகை அணைத்த கை
அன்பு அன்பு செய்ததை
தூண்டலைத் துளைத்தலைத்
தோன்றி நின்ற ஜோதியை
விண்ட பாலகுமரனிங்கு
எழுதி வந்த பாட்டிலே
யோகி ராம்சுரத்குமார்
நின்று என்றும் ஆளுவாய்
யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்
எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
உடன் பாடியவர், அவரது மகள், செல்வி ஸ்ரீகௌரி
யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்திற்கு வந்த போது பதிவு செய்யப்பட்டது.
---விவேகானந்தன்
Comments