‘எழுத்தில் ஹிம்சை
திருச்சி பெரியகடைத் தெருவில் இயங்கி வந்த `சிவாஜி’ இதழில், ‘எழுத்தில் ஹிம்சை’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய முதல் சிறுகதை வெளியானது. எஸ்.ரங்கராஜன் என்கிற தனது இயற்பெயரில்தான் அந்தக் கதையை எழுதியிருந்தார் சுஜாதா. அப்போது அவருக்கு வயது 18. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார்.
``கதை வெளிவந்தபோது திருச்சி நகரமே அலம்பிவிட்டாற்போல இருந்தது. அந்த
வட்டாரத்தில் ‘சிவாஜி’ இதழின் காப்பிகள் கடகடவென விற்றுத் தீர்ந்துவிட்டன. எல்லாவற்றையும் நானே வாங்கிவிட்டதால்!” என, தன் முதல் சிறுகதை வெளிவந்ததைப் பற்றி, சுஜாதாவாக மாறிய பிறகு எழுதியிருக்கிறார் எஸ்.ரங்கராஜன்.
``முதல் முறை அந்தக் கதை வெளிவந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவே இல்லை. அந்த சிவாஜி பத்திரிகை பிரதியை எனக்கு இப்போது யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியையும் எனது மகளையும் திருமணம் செய்து தருகிறேன்” என்று தமாஷாகச் சொன்னார் சுஜாதா. ஆனால், அவர் இருக்கும்வரை அவருக்கு அந்தக் கதை கிடைக்கவில்லை என்பதோடு, அவரிடம் ராஜ்யமும் இல்லை; அவருக்கு மகளும் இல்லை.
- பா.சு.ரமணன்
நன்றி: விகடன்
Comments