தமிழ் எழுத்தாளர் அமரர் #கல்கி கிருஷ்ணமூர்த்தி

 இன்று விடுதலைப் போராட்ட வீரர், பத்திரிக்கையாளர், தமிழ் எழுத்தாளர் அமரர் #கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள்


கல்கி கிருஷ்ணமூர்த்தி திரு விக அவர்களை மானசீக குருவாய் கொண்டதால் அவரது கல்யாண சுந்தரம் என்ற பெயரின் ‘கல்’ என்ற எழுத்துக்களையும் தனது கிருஷ்ண மூர்த்தி என்ற பெயரின் ‘ கி’ யையும் அதனுடன் சேர்த்துக் கொண்டு கல்கியானார் கிருஷ்ணமூர்த்தி.
இளம் வயதில் மகாத்மா காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.
அவர் தனது பிரமாண்ட படைப்பாகிய பொன்னியின் செல்வனைத் தனது கடைசிக் காலங்களில் எழுதினார்
அவர் தமிழர் வரலாறு மேல் பெருமிதமும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர் . அதன் சான்று அவரது புதல்வனுக்கு ‘ராஜேந்திரன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தார் .
கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன.

.

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி .ஆர். உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.

# காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசி கைதானார். சிறையில் இவர் எழுதிய விமலா என்ற முதல் நாவல், சுதந்தரன் பத்திரிகையில் வெளியானது.

# விடுதலையான பிறகு, திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை செய்தார். இவர் எழுதிய பிரச்சார துண்டுப் பிரசுரங்களைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஎஸ்எஸ் ராஜன், நீ எழுத்துலகில் சாதிக்கவேண்டியவன் என்றார். அவரது ஆலோசனைப்படி நவசக்தி பத்திரிகையில் சேர்ந்தார்.

# புதிதாக தொடங்கப்பட்டஆனந்தவிகடன் இதழுக்கு ஏட்டிக்குப் போட்டி என்ற நகைச்சுவைக் கட்டுரையை அனுப்பினார். பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.வாசனுக்கு அது பிடித்ததால், விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு கிடைத்தது. கல்கி என்ற புனைப்பெயரில் எழுதினார். தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற பெயர்களிலும் எழுதிவந்தார்.

# ராஜாஜியின் விமோசனம் பத்திரிகையின் துணை ஆசிரியரானார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். விடுதலையானதும், ஆனந்த விகடன் பொறுப்பாசிரியரானார். இவரது முதல் தொடர்கதையான கள்வனின் காதலி, திரைப்படத்துக்காகவே இவர் எழுதிய தியாகபூமி நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றன.

# நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகை தொடங்க விரும்பினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய நிதியுடன் கல்கி பத்திரிகை தொடங்கப்பட்டது. இவரது படைப்பாற்றலால் பத்திரிகை விரைவிலேயே அபார வெற்றி பெற்றது.

# ‘மீரா திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன், காற்றினிலே வரும் கீதம் உள்ளிட்ட பாடல்களையும் எழுதினார். தமிழ் இசைக்காக சதாசிவம் - எம்.எஸ். தம்பதியுடன் இணைந்து பாடுபட்டார்.

# 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது பார்த்திபன் கனவு, தமிழின் முதல் சரித்திர நாவல். அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான சிவகாமியின் சபதம், சமூகப் புதினமான அலைஓசை ஆகியவையும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

# 1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது. அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது. கல்கி இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.

# முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்ட கல்கி 55-வது வயதில் (1954) மறைந்தார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,