ஞாயிறு திரை மலர்
’ஞாயிறு திரை மலர் 27/12/2020
---------------------------------------------------------------------
“சமூக சிந்தனையாளர் கலைவாணர்” – பானுமதி
நடிகை பானுமதியிடம் ஒருமுறை பொன்மணி வைரமுத்து பேட்டி எடுத்தார். அப்போது கலைவாணர் பற்றி கேட்ட கேள்விக்கு பானுமதி சொன்ன பதில்…
பொன்மணி வைரமுத்து: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளீர்கள், கலைவானரைப் பற்றி சொல்லுங்களேன்.
பானுமதி: அவர் மிகப்பெரிய அறிவாளி, செட்டில் ஓய்வு நேரத்தில் அவரோடு பேசிக்கொண்டு இருக்கும்போதுகூட அவருடைய உரையாடல் ‘சமூகத்தை’ பற்றியதாகத்தான் இருக்கும்…
நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு
------------------------------------------------------------------------------------------------
அனுபவம், இலக்கியம், தாமரை, பேட்டி, மங்கையர் மலர்
மீட்டு வருவேன் மீண்டு வருவேன்!”
சந்திப்பு: அமிர்தம் சூர்யா
தாமரை உக்கிரம்
பாடலாசிரியர் தாமரை 500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதி, கலைஞர், ஜெயலலிதா இருவரிடமும் தமிழக அரசின் விருதினைப் பெற்றவர். சமூக நோக்கோடும் தமிழ் உணர்வோடும் பயணப்படும் தனித்துவமான படைப்பாளி. காதலுக்கு முன்... காதலுக்குப் பின்; திருமணத்துக்கு முன்... திருமணத்துக்குப் பின்; சினிமாவுக்கு முன்... சினிமாவுக்குப் பின் என மூன்று கட்டங்களில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிக் கேட்டபோது, அவரது பதில்கள், தன்னம்பிக்கைப் பாடமாய் விரிந்தது.
நான், புத்தகம் வளர்த்த பிள்ளை. என் தோழமை, பலம் எல்லாமே புத்தகங்கள்தான். வாசிப்பு என்பது எனக்கு மூச்சு விடுதல் மாதிரி. என் வாழ்வின் தன்னம்பிக்கையை நான் புத்தகங்களிலிருந்தும் வகுப்பறையிலிருந்தும்தான் வாங்கிக் கொண்டேன். உண்மையிலேயே அன்று பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக இருந்தனர். பள்ளி ஒழுக்கமாக இருந்தது. இன்று விதிவிலக்காகத்தான் நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள். என் பள்ளியும் பள்ளி ஆசிரியர்களும்தான் என் தன்னம்பிக்கையைத் தட்டித் தட்டிச் செதுக்கியவர்கள
யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் எரிச்சலோடு மனப்பாடம் செய்த திருக்குறளும் தமிழ்ப் பாடங்களும்தான் என் மனதில் ஊன்றி என்னை இப்போதும் வழி நடத்தி வருகிறது என்று சொல்லலாம்," என்று சொல்லிக்கொண்டே வந்த தாமரையை நோக்கி, இந்தத் தன்னம்பிக்கைதான் உங்களின் கசப்பான முதல் காதலிலிருந்தும் முதல் திருமணத்திலிருந்தும் விடுவித்ததா?" என்ற கேள்வித் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். தாமரையின் இதழ்களில் இளம் புன்னகை.
நான் மங்கையர் மலர் வாசகிகளுக்கு என் வாழ்வின் ரணமான பக்கங்களையும் அந்தக் காயங்களை ஆற்றிய தன்னம்பிக்கை மருந்தைப் பற்றியும் பகிரங்கமாய்ப் பறை சாற்ற விரும்புகிறேன். இந்தக் கடுமையான கேள்விகள் என்னை எதுவும் செய்யாது நண்பரே! உங்களுக்குத் தெரியுமா?
கோயம்புத்தூரில் ஒரு முன்னணி தொழிற்சாலையில் முன்னணி பொறியாளர் பணியில் இருந்தேன். காலை 6.30 மணிக்குக் கிளம்பி இரவு நேரங்காலமின்றித் திரும்பும் இயந்திரமாய் இயங்கினேன். கல்லூரியில் என்னுடன் படித்த ஒருவரை விரும்பி இருந்தேன். சாதிகளைக் கடந்து ஆரம்பித்த காதல்
திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே போராட்டம்தான். அவருக்கு வேலை இல்லை. தொழிலதிபராகும் கனவு மட்டும் இருந்தது. அவர் கனவை நனவாக்க நான் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிப் போனேன். என் கனவுகள், ஆசைகளைப் புதைத்து அவருக்கும் சேர்த்து உழைக்க வேண்டியிருந்தது. என் பெயரில் நிறைய கடனும் வாங்கப்பட்டது. மன உளைச்சலோடு துக்கம் கவ்விய நிலையில் என் முதல் திருமணம் தோல்வி அடைந்ததை உணர்ந்தேன்" என்று வெப்பம் கலந்த பெருமூச்சோடு சற்றே நிறுத்தினார் தாமரை.
தோழி, நீங்கள் சொன்ன சம்பவத்தில் தோல்வி என்று இதை எப்படி ஏற்பது? நீங்கள் கொஞ்சம் அதிகமாகக் கற்பனை செய்து கொண்டது போலத் தோன்றுகிறதே?" என்று சொன்னதுதான் தாமதம். கவிஞரின் கண்கள் சிவக்க ஆரம்பித்து செந்தாமரையாகவே மாறிவிட்டது.
ஓஓ! காதலித்து மனைவியான நான் இருக்கும்போதே இன்னொரு பெண்ணை எனக்குத் தெரியாமல் மணந்து, குழந்தை பெற்று இன்னொரு குடும்பம் நடத்தி வருவது தெரிந்தும் அதை நிரூபிக்க முடியாமல் தத்தளித்து மனதுக்குள் அழுது தற்கொலை உணர்வோடு, சம்பாதித்து மட்டுமே போடும் இயந்திரமாய் இருக்கும் பெண் அந்தத் திருமண வாழ்வைத் தோல்வி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இது கொஞ்சம் அதீதமான கற்பனையா? ஆண்கள் மொழியில் இதை வேறு எப்படிச் சொல்வது?" என்றார். அந்தரங்கத்தின் காயம் அறிந்தபின் அந்த வலியை சக மனிதனாய் நாமும் உணரத்தான் முடிந்தது. உங்கள் தன்னம்பிக்கை இதற்கு என்ன தீர்வு தந்தது. உங்கள் வாழ்வை, உங்களின் தனித்துவத்தைப் பிறகு எப்படித்தான் மீட்டெடுத்தீர்கள்?" என்று கேட்டேன்.
ஏழு வருடம் செய்த பொறியாளர் பணியிலிருந்து துணிந்து 93-ல் வேலையை விட்டேன். 94லிருந்து 97வரை முதன்முறையாக நான் எனக்காக வாழ ஆரம்பித்தேன். நிறைய படித்தேன். ஏழு ஆண்டுகளில் விட்டதைப் பிடித்தேன். இலக்கியத்தை இரவு பகலாகக் கரைத்துக் குடித்தேன். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவை மீட்டெடுக்க ஆரம்பித்தேன். ‘கல்கி’, ‘மங்கையர் மலர்’ ‘தினமலர்’, ‘குமுதம்’ ‘தினமணி’ என்று இதழ்களின் போட்டிகளுக்கு - கவிதை, கட்டுரை, கதை எழுதி பரிசுகளை வென்றேன். மாணவ நிருபராக விகடனில் இருந்த நான் மீண்டும் விகடனுக்கு எழுத ஆரம்பித்தேன். சிறந்த கதைக்காக ‘சாவி’யில் ‘தங்கச் சாவி’ பரிசு பெற்றேன். சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை துளிர்விட்டது. பாடலாசிரியராக வேண்டும் என்ற என் சிறு வயதுக் கனவை தூசித் தட்டி எடுத்துக்கொண்டு 97ல் சென்னைக்கு வந்தேன்.
‘சன்’ டீ.வி.க்கு இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தேன். என் மனுவுக்குப் பதிலே இல்லை. அப்போது உறுதிமொழி எடுத்தேன். இதே ‘சன்’ டீ.வி., என்னைப் பேட்டி எடுக்கும் நிலைக்குப் போவேன் என்று. பின்னர் அதுவும் நிகழ்ந்தது.
நான் சென்னைக்குத் தனியாக ஒரே ஒரு பெட்டியுடன்தான் ரயில் ஏறினேன். நான் பிறந்து வளர்ந்த கோவையைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், அந்த ‘கோயமுத்தூரையே என்னைத் திரும்பிப் பார்க்க வைப்பேன்’ என்ற சபதம் அப்படியே புத்தியில் நெருப்பாய்க் கனன்று கொண்டு இருந்தது.
2008ல் தினமலர் வழங்கிய ‘கோவையின் தங்கப் பெண்மணி’ என்ற விருதின் மூலம் அதையும் சாதித்தேன்... இல்லை சாதித்தது சாதிக்க வைத்தது என் தன்னம்பிக்கை" என்று முடித்தார் பாடலாசிரியர் தாமரை.
நீறுபூத்த நெருப்பை ஊதிவிடும் காற்றைப்போல அவிழ்த்துப் போட்டேன் வேண்டுமென்றே ஒரு கேள்வியை. ‘சினிமா அதிர்ஷ்டம்தானே உங்களைப் புகழ் உச்சிக்கு ஏற்றியது. அந்த இடத்திலும் எதுக்குக் கொள்கை கோஷம்னு வீம்புப் பிடிக்கிறீங்க?’ என்றதும்தான் தாமதம்.
மன்னிக்க வேண்டும். அது நல்வாய்ப்பு இல்லை. என் அரிய உழைப்பு. விடாமுயற்சிதான் காரணம். 97லிருந்து 2000வரை திரைப்படத் துறையில் போராடினேன். தேடினேன். தேடிக்கிட்டே இருந்தேன். வாய்ப்பு வராது. வந்தாலும் என் ஆங்கிலம் கலக்காத, ஆபாசச் சொல் இல்லாத பாடல் என்ற கொள்கைக்குப் பாடல் கிடைக்காது. கிடைத்தாலும் பாடல் இடம் பெறாது. இடம் பெற்றாலும் படம் வெளிவராது. படம் வந்தாலும் கைக்குப் பணம் கிடைக்காது. இத்தனைக்கும் நான் இதுவரை கடன் வாங்கியது இல்லை என் வாழ்நாளில். குறைந்த வருமானத்துக்குள் என்னை அடக்கிக் கொண்டு வாழப் பழகினேன்.
2000-ல் கௌதமுடன் வாய்ப்பு வந்த போது ‘மின்னலே’ படத்தின் ‘வசீகரா’ பாடல் என்னைத் தூக்கி நிறுத்தி அங்கீகாரம் தந்தது. மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ததை எதிர்த்து, கணவன் மீது குற்றவியல் வழக்குப் போட்டு சென்னைக்கு அவர்களை இழுத்து, நானே நீதிமன்றத்துக்குத் தனியாகப் போய்ப் போராடி விவாகரத்துப் பெற்றேன்.
பிறகு 2002-ல் தோழர் தியாகுவுடன் திருமணம் நடந்தது. கைக்குழந்தையோடு சினிமா வாய்ப்புக்கு நீங்கள் அலைந்து பாருங்கள். அதன் வலி புரியும். சென்னையில் நான் தனியாக வாழ்ந்தபோது, என் அறைக்கு யாரையும் அழைத்துப் பேச மாட்டேன். என்னைச் சந்திக்க வருபவர்களை அறைக்கு வெளியே பொது இடத்தில் வைத்துத்தான் எச்சரிக்கையோடு பேசுவேன். இதுவரை எந்த வதந்தியும் என் மீது படர்ந்தது இல்லை" என்றபோது கொஞ்சம் ஆசுவாசம் படுத்தியபின் பேசினேன்...
நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறீர்கள்" என்றபடி என் இறுதிக் கேள்விக்கு இடம் விட்டேன்...
வதந்திக்கு உட்படாத உங்கள் வாழ்வில் உங்களது இரண்டாவது மணவாழ்வு ஊடகங்களால் இப்போது ஊசலாடுவது போலிருக்கிறதே. இதை எப்படி எதிர்கொள்வீர்கள்?" என்றேன்.
ஒரு நாள் காலை எழும்போது நேற்று வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, உழைத்த உழைப்பு, வைத்த நம்பிக்கைகள் அத்தனையுமே பொய்யானவை என்ற நிலை ஏற்பட்டால் என்ன வலி ஏற்படுமோ அதுதான் எனக்கும் ஏற்பட்டது. கைகால்கள் மரத்துப் போய் செயல் இழந்த நிலையில்தான் அதையும் எதிர்கொண்டேன்.
திருமணம் என்பது இருவர் சேர்ந்து செய்துகொள்வது. அதைத் திடீரென்று இருவரில் ஒருவர் தன்னிச்சையாக, தனிப்பட்ட முறையில், தன் சொந்தக் காரணங்களுக்காக, உடைத்து வெளியேற முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அப்படித்தான் எனது இந்தப் போராட்டம் எனக்கு இன்னும் பல அனுபவங்களையும் பார்வைகளையும் கற்றுக் கொடுத்துள்ளது. மீட்டு, மீண்டு வருவேன்" என்றார் உக்கிரமாய்.
தமிழகத்தின் ஹிலாரி போல் தெரியும் தாமரை, கிளிண்டன் போல் தோற்றம் காட்டும் தியாகுவையும் சேர்த்தே வெல்ல வேண்டும். இந்த உரையாடலில் தாமரையை மொழிபெயர்த்தால் ‘தன்னம்பிக்கை’ என்றே வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்லா பெண்களுக்குள்ளும் போராடும் ஒரு செந்தாமரை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்ற சிந்தனையோடு விடை பெற்றோம்.
2020ல் தமிழ் சினிமா
2020-ம் ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு விநோதமான ஆண்டாகவே பதிவாகும். கரோனாப் பெருந்தோற்று உலக மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்த அதே வேளையில், திரையுலகத்தின் வரலாற்றையும் திருத்தி எழுதியுள்ளது.
வழக்கத்தை குலைத்துப்போட்ட இந்த ஆண்டில் திரையரங்குகளில் வெளியான படங்கள், ஓ.டி.டி. தளங்களில் வெளியான படங்கள் என 2020-ம் ஆண்டை இரண்டாகப் பிரிக்கலாம். அதன்வழியாக வந்த படங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அலசலாம்.
ஆண்டுக்கு சுமார் 200 தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு சுமார் 8 மாதங்களாகத் திரையரங்குகள் மூடியே கிடந்தன. அதனால் இந்த ஆண்டில் திரையரங்குகளில் எழுபத்தி சொச்சம் படங்களே வெளியாகின.
மேஜிக் நிகழ்த்தாத ரஜினி, தனுஷ்
திரையரங்குகளில் வெளியான படங்களில் பொங்கல் பண்டிகையில் ‘தர்பார்’,‘பட்டாஸ்’ படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ போதிய வரவேற்பைப் பெறாமல் வசூல்ரீதியில் தோல்வியைச் சந்தித்தது. ரஜினி என்ற உச்ச நடிகர் இருந்தும், திரைக்கதையின் சரிவு படத்துக்குப் பாதகமாக அமைந்தது.
பரிசோதனை முயற்சிப் படங்கள், வணிக ரீதியான படங்கள் என இரண்டையும் கலந்துகட்டி கொடுப்பதையே தனுஷ் தன் பாணியாக வைத்துள்ளார். துரை.செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்த இரண்டாவது படம் ‘பட்டாஸ்’. ஆனால், இரட்டை வேடங்களில் தனுஷ் இன்னும் நிறைவான படத்தைக் கொடுக்கவில்லை. அடிமுறைக் கலை என்ற தமிழர்களின் தற்காப்புக் கலை என்கிற அம்சம் மட்டும் ரசிகர்களை ஈர்த்தது. இப்படம் போட்ட முதலீட்டை மட்டுமே எடுத்தது.
வரவேற்பு பெற்ற, பெறாத படங்கள்
‘டகால்டி', ‘நாடோடிகள் 2’, ‘சீறு, ‘வானம் கொட்டட்டும்', ‘மாஃபியா அத்தியாயம்-1’ ஆகிய படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. திரையரங்குகள் திறப்புக்குப் பின்பும் இப்படம் மறு ரிலீஸ் செய்யப்பட்டது. ஓ.டி.டி. தளத்திலும் வெளியானது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘திரெளபதி', ‘ஓ மை கடவுளே', ‘தாராள பிரபு’ ஆகிய படங்கள் ஓரளவுக்கு லாபம் பெற்றன. ‘சைக்கோ', ‘நான் சிரித்தால்’ஆகிய படங்கள் போட்ட முதலீட்டை எடுத்தன.
‘தாராள பிரபு’, ‘வால்டர்’ படங்கள் ரிலீஸான மார்ச் 13-ம் தேதியுடன் திரையரங்குகள் கரோனா பீதியில் மூடுவிழா கண்டன. இந்நிலையில் பெரும்பாலான படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி ரசிகர்களின் திரைப்படப் பசிக்கு தீனி போட்டன.
ஓ.டி.டி. - மாற்றுத் திரை அனுபவம்
'ஓவர் தி டாப்' எனப்படும் ஓ.டி.டி. தளங்கள் கரோனா ஊரடங்கில் பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்குரிய தளங்களாக மாறின. நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ5, டிஸ்னி ஹாட் ஸ்டார், சினி பிளக்ஸ், மூவி இன் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘லாக்கப்’,‘க/பெ. ரணசிங்கம்’ (ஜீ ப்ளக்ஸ் டி.டி.எச்.சில் வெளியாகி பின் ஜீ5 ஓ.டி.டி.யில் வெளியானது), ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நுங்கம்பாக்கம்', 'பச்சை விளக்கு’ ‘சைலன்ஸ்’, ‘வர்மா’, ‘அந்தகாரம்’ உள்ளிட்ட சுமார் 25 படங்கள் வெளியாயின.
ஓ.டி.டி. தளங்களின் மூலம் மாற்றுத் திரை அனுபவம் திரையரங்குக்கான மனநிலையைக் கொடுக்கவில்லை. ஆனாலும், ஓ.டி.டி. தளங்களைப் புறக்கணிக்க முடியவில்லை. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதும் அதற்கான முக்கியமான காரணம்.
ஊரடங்கு முடிந்து, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டபோது சந்தானத்தின் ‘பிஸ்கோத்’, ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட 4 படங்கள் திரையரங்கில் வெளியாகின. அவை ரசிகர்களிடம்
எந்த வரவேற்பையும் பெறவில்லை. அதே வேளையில் ஓ.டி.டி. தளங்களில் வெளியான ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்கள் பண்டிகை காலக் கொண்டாட்ட அனுபவத்தைக் கொடுத்தன.
சமரசம் செய்யாத சூர்யா
தயாரிப்பாளர்கள், சில இயக்குநர்களே ஓ.டி.டி.க்கு எதிராகக் கருத்து தெரிவித்த நிலையில், அதைத் தாண்டி ஓ.டி.டி.யில் ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிட்ட சூர்யாவின் துணிச்சல் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைத்தது. சிரிக்காத, சண்டைக்காட்சிகளில் துவம்சம் செய்யாத, தன் ரசிகர்களுக்காக எந்த சமரசத்தையும் செய்யாத சூர்யாவின் நடிப்பும் சிலாகிக்கப்பட்டது.
நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் பரவலான பாராட்டைப் பெற்றது. கடவுளின் பெயரில் கார்ப்பரேட் சாமியார் செய்யும் மோசடிகளையும் ஆசிரம அரசியலையும் துணிச்சலுடன் பகடிசெய்தது.
பெண் மையப் படங்கள்
பெண்களின் உலகில் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காட்சிப்படுத்தும் வரம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு நாயகிகளை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட அதிகத் திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறு பட்ஜெட் படங்கள், நாயகிகளை மையமாகக் கொண்ட படங்களுக்குத் திரையரங்குகளில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத சூழல் நிலவும்போது, ஓ.டி.டி. அதற்கான வாசல்களைத் திறந்துவைத்துள்ளது பாராட்டுக்குரியது.
‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’, ‘மிஸ் இந்தியா’ (தெலுங்கு) படங்கள் நாயகி மையப் படங்களாக வெளியாயின. இவ்விரு படங்களும் கீர்த்தியின் நடிப்புக்கான களத்தைச் சரியாக வழங்கவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை நல்கியுள்ளன.
அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான அம்மனாக, அளவான நடிப்பில் நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஈர்த்தார். சாகசங்கள் நிறைந்த கடவுளாக இல்லாமல், சிறுதெய்வத்தின் பிரதிநிதியாக தன்னை அவர் முன்னிறுத்திக்கொண்டது ரசிக்கும்படி இருந்தது.
ஜோதிகா ‘பொன்மகள் வந்தாள்’ படத்திலும், வரலட்சுமி சரத்குமார் ‘டேனி’ படத்திலும் தங்களின் திறமையைக் காட்டினர். ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கனா’ படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் அரியநாச்சி எனும் மனஉறுதி கொண்ட பெண்ணாக வாழ்ந்து காட்டினார். ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வணிக சினிமா, பெண் மைய சினிமா ஆகிய இரண்டு வகையிலும் மாறிமாறி நடிப்பது தமிழ் சினிமாவின் புதிய போக்குகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. குழந்தைகளை மையமாகக் கொண்ட படங்களுக்கு மட்டும் இன்னமும் போதாமை நிலவுகிறது.
திரையரங்குகளா? இணையத் திரையா?
பண்டிகை என்றாலே சினிமா பார்ப்பது என்கிற வழக்கம் நம் பண்பாட்டுக் கூறில் அடங்கியுள்ளது. ஆரவாரம், கொண்டாட்டம், நண்பர்கள், உறவினர்களுடன் கூடித் திரையரங்கில் ஒரு படத்தை ரசிப்பது, தனக்குப் பிடித்த நடிகரைக் கொண்டாடுவது ஆகியன வெகுஜன ரசிகர்களுக்கு அலாதி அனுபவம் தருபவை. இந்நிலையை ஓ.டி.டி. தளங்கள் மாற்றிவிட்டன. வீட்டில் பிடித்தபடி உட்கார்ந்துகொண்டே, சாய்ந்துகொண்டே, படுத்துக்கொண்டே படம் பார்க்கலாம், விரும்பிய காட்சியை முன் பின் நகர்த்திப் பார்க்கலாம் என்கிற வசதியைக் கொடுத்துவிட்டன. அதேவேளை இந்தத் தளங்கள் திரையரங்குகளுக்கு மூடுவிழா நடத்தப்போவதில்லை என்பதையும் வெளிப்படையாக உணர்த்தின. ரசிகர்களின் ரசனைக்கான, கொண்டாட்டத்துக்கான ஆகச்சிறந்த இடம் திரையரங்குகள் என்பதையும் நிறுவின.
2,000 கோடி நஷ்டம்
முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் தோல்வி, திரைப்படங்களுக்கான முதலீடு, வட்டி அதிகரிப்பு, வெளியிட முடியாத சூழலில் பெட்டிக்குள் முடங்கிய படங்கள், படப்பிடிப்பு முழுமையடையாத படங்கள், இறுதிக்கட்டப் பணிகளை முடிக்காமல் சுணங்கிய படங்கள், திரையரங்குகள் மூடல் போன்ற காரணங்கள் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் பதம் பார்த்தது.
சினிமாவை மட்டுமே தொழிலாகக் கொண்ட சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்தனர். தமிழ்ப் புத்தாண்டு, கோடை விடுமுறை, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை என எந்தத் திருநாளும் இல்லாத வீடடங்கு நாள்களாக கரோனா ஊரடங்கு அவர்களுக்குக் கழிந்தது.
தீபாவளியை முன்னிட்டு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன் நவம்பர் 10-ம் தேதி 997 திரையரங்குகள் தமிழகத்தில் திறக்கப்பட்டாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. திரையரங்குகளுக்கு வரவே மக்கள் அச்சப்பட்டனர். பராமரிப்புச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் திரையரங்குகள் திண்டாடின.
கரோனா காலத்தில் தமிழ்த் திரையுலகுக்கு ரூ.2,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக 'பெப்சி' தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். சினிமாவையே சுவாசமாகக் கொண்ட தமிழ்நாட்டில் 300 ‘சிங்கிள் ஸ்கிரீன்’ திரையரங்குகள் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் நிரந்தரமாக மூடப்பட்டது பெரும் துயரம்.
சாதி அரசியலும் ஆணவக் கொலையும்
தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் காதலும் சாதியும் என்று சொல்லலாம். சாதிப் பெருமை பேசும் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆண்டு ‘திரௌபதி’ படம் வெளியானது. கருத்தியல் ரீதியாக நிறைய சர்ச்சைகளைச் சந்தித்தது. ஆனாலும், படம் வசூலில் வெற்றி பெற்றது. சமூகநீதிக்கான மண் என்று போற்றப்படும் தமிழகத்தில் இதுபோன்ற படங்கள் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்ற கவலையை அதிகரிக்கச் செய்கிறது.
நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னி மாடம்’ திரைப்படம் நல்ல முயற்சி. அப்பட்டமான சாதித் திமிரை, சாதி வெறியை, ரணத்துடன், ஆணவக் கொலையின் கோரப் பின்னணியுடன் காட்சிப்படுத்திய விதம் கனமானது. முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குநருக்கான தடத்தை போஸ் வெங்கட் பதித்துவிட்டார்.
ஆந்தாலஜி படமாக ‘பாவக் கதைகள்’ வெளியானது. வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நால்வர் இயக்கிய இந்த நான்கு குறும்படங்களில் கௌதம் மேனனின் ‘வான்மகள்’ மட்டும் சிறுமி மீதான பாலியல் வன்முறை குறித்துப் பேசுகிறது. மற்ற மூன்று படங்களின் அடிநாதம் சுயசாதியின் பெருமையைக் கட்டிக் காக்க, சொந்த வாரிசுகளையே பலி வாங்கும் தகப்பன்கள் குறித்ததுதான்.
ஆனால், அந்த ஆணவக் கொலையைச் செய்யும் அவர்களின் பின்னணி எந்த குறுக்கு விசாரணையுடனும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் குற்றஉணர்வு
அடைந்தாலும், தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். மிக நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆணவக் கொலை செய்பவர்களின் தரப்பைக் கேள்விக்குள்ளாகமல், நியாயப்படுத்துவதாகவே படங்கள் அமைந்துள்ளன. கொலை செய்யப்பட்டவர்களின் மீதும், அவர்களுடைய இழப்பால் பாதிக்கப்படுவர்கள் மீதும் எந்த பிம்பத்தையும் கட்டமைக்கவில்லை. இது பெருங்குறை. பார்வையாளர்கள் இவற்றைத் தவறாக உள்வாங்கிக்கொண்டால் என்ன ஆகும் என்று நினைக்கும்போதுதான் வேதனை நீள்கிறது.
துரத்தும் தணிக்கை
ஆபாச வசனங்கள், பாலியல் காட்சிகள், அதீத வன்முறைக் காட்சிகள், குழந்தைகள், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஆகியவற்றை நீக்கவும், கட்டுப்படுத்தவும் தணிக்கை அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அரசியல்ரீதியான காரணங்களுக்காகவும், அதிகார அரசியலை விமர்சனத்துக்கு உட்படுத்தியற்காகவும் தணிக்கை மறுக்கப்படுவதில் நியாயமில்லை. அந்த வரிசையில் ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’ திரைப்படம் தணிக்கையால் குதறப்பட்டது.
ஓ.டி.டி. தளத்திலோ பாபு யோகேஸ்வரனின் ‘காட்மேன்’ தொடர் வெளியாகும் முன்பே அதிகார வர்க்கத்தால் தடுக்கப்பட்டது. “ஓ.டி.டி.க்குத் தணிக்கை கொண்டுவந்தால், ஜனநாயகத்தில் மிச்சமிருக்கும் கடைசிக் குரலையும் நசுக்கும் முயற்சியாகவே அது இருக்கும்” என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
புதியவர்களுக்கு வாய்ப்பில்லை!
ஓ.டி.டி. தளம் பிரபல இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளும் இன்னொரு தளமாகவே உள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கான, குறும்பட இயக்குநர்களுக்கான வெளிச்சக் கீற்றை இன்னும் ஓ.டி.டி. தளங்கள் உறுதி செய்யவில்லை. தமிழகத்தில் குறும்படங்கள் கடந்த கால் நூற்றாண்டு வரலாற்றையும் வளர்ச்சியையும் கொண்டுள்ளன. தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஏராளமான கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சிறந்த படங்கள் தொகுக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு இன்னும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகாதது இந்தத் தளங்கள் யாருக்கானவை என்ற கேள்வியைக் காத்திரமாக எழுப்புகின்றன. ஏற்கெனவே தங்களை நிரூபித்த, வெற்றிபெற்ற படைப்பாளிகளிடமே ஓ.டி.டி. தளங்கள் சரணாகதி அடைவது, ஓ.டி.டி.யும் சிந்தனை, படைப்பு வறட்சிக்கான ஒரு களமாக மாறிவிடக் காரணமாக அமையலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
25 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே இளமையாக இருக்கிறீர்கள்” என்று மதன்பாப்பை பார்த்து விஜய் சேதுபதி வியந்தாராம்!
25 ஆண்டுகளை கடந்தும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாத ‘சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட்’, மதன்பாப். அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. துக்ளக் தர்பார், ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படம், விதார்த் நடிக்கும் புதிய படம், சீனிவாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படம் என கைவசம் பல படங்களை வைத்து இருக்கிறார்.
துக்ளக் தர்பார் படத்தில் இவருடைய நடிப்பை பார்த்துவிட்டு, “இந்தி நடிகர் அனுபம்கேர் போல் உங்கள் நடிப்பு இருக்கிறது” என்று டைரக்டர் டெல்லி பிரசாத் தீனதயாளன் பாராட்டியிருக்கிறார்.
“ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன், ‘தேவர் மகன்’ படத்தில் பார்த்தது போலவே இளமையாக இருக்கிறீர்கள்” என்று மதன்பாப்பை விஜய் சேதுபதி வியந்தாராம்!
பேராசை’ படத்தில் சங்கர்- கணேசின் மகன் ஸ்ரீ கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் நடித்த படங்கள் உள்பட பல படங்களுக்கு மேல் இசையமைத்தவர்கள் சங்கர்-கணேஷ். இதில் கணேசின் மகன் ஸ்ரீ, ‘யாரடி நீ மோகினி’ என்ற டி.வி. தொடரில் நடித்து வருகிறார். அடுத்து இவர், ‘பேராசை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கதாநாயகி, தீசிகா.
படத்தில் இன்னொரு கதாநாயகனும், கதாநாயகியும் இருக்கிறார்கள். சி.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்க, சக்தி அருண் கேசவன் தயாரிக்கிறார். இவர் சொல்கிறார்:-
அன்பு இல்லமாகத் திகழ்ந்த சிவாஜியின் அன்னை இல்லம்!
கே.பாலசுப்பிரமணி
உணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால் இருந்த மற்றொரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.
ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு
இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.
“இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று அழைக்கப்பட்டது.
பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்பட்டார்.
தந்தை பெயரில் வீடு
இந்த இஸ்லாமியரிடம் இருந்து1959-ம் ஆண்டு தமது தந்தை பெயரில் சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதன் பின்னர் வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார். செவாலியே விருது வாங்கியதைப் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு போக் சாலைக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயர் வைக்கப்பட்டது".
சிவாஜியின் வீடு குறித்து சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். "சிவாஜி நடித்த சில படங்களின் படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கின்றன. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.
அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும். லேசாக அழுக்குத் தென்பட்டாலும், சிவாஜி அதை சுத்தம் செய்யச் சொல்வார். தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணியாற்றினர்.
சிவாஜியின் ஆசை
சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிவாஜியின் சகோதரர் சண்முகம் இறந்தபோது, எம்.ஜி.ஆர் வந்திருந்தார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். இயக்குநர்களிடம் கதை கேட்பது எல்லாம் ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் நடக்கும். சில நேரங்களில் மட்டும் இயக்குநர்களை வீட்டுக்கு வரச்சொல்லிக் கதை கேட்பார். சிவாஜி வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். தமது பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று. காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்திவிட்டுப் போனார். அதற்கு அடுத்த நாள் காமராஜர் மரணம் அடைந்தார். இந்தப் பிறந்தநாள் வாழ்த்தை சிவாஜி அடிக்கடி நினைவுகூர்வார்.
2010-ம் ஆண்டு, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இன்றளவும் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சிவாஜியின் சகோதரர் சண்முகத்தின் குடும்பத்தினரும் இங்குதான் வசிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை சிவாஜி பெருமையுடன் கருதினார். அவரது ஆசை அவர்களின் குடும்பத்தினரால் இன்றளவும் நிறைவேற்றப்படுகிறது" என்றார்.
மனித நேயர்
அந்த நாள்களில் சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி பல சினிமா உலக விஐபி-க்கள் வருவதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைக்குயில் லதா மங்கேஷ்கர். சிவாஜி கணேசனின் 88-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லதா மங்கேஷ்கர், சிவாஜி குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். “சிவாஜி சார் என்னுடைய சகோதரர் மட்டும் அல்ல. என்னுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரைக் கருதினோம். குறிப்பாக என் தாய் உட்பட அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார். 1960-களில் நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சென்னையில்தான் பதிவு செய்யப்பட்டன. எனவே, அடிக்கடி நான் சென்னைக்கு வருவேன். நான் சென்னை வந்ததும், என்னைத் தேடி சிவாஜி வந்துவிடுவார். தம்முடைய டிரைவரிடம், என்னுடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்வார். அவர் வீட்டில்தான் நான் தங்குவேன். அவர் மிகப்பெரிய மனித நேயராக இருந்தார். ஒரு நாள் நானும், என் குடும்பத்தினரும் வழக்கம் போல் சென்னை வந்தோம். அப்போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ராமேஸ்வரத்துக்கும் செல்ல வேண்டும் என்றும் விரும்பினோம். அப்போது, சிவாஜி சார், அவருடைய மேனேஜர் மற்றும் மூன்று பேரை எங்களுடன் அனுப்பினார். எங்களுக்காக இரண்டு கார்களும் கொடுத்தார். அவருடைய பர்சனல் டிரைவர் சிவாவையும் எங்களுடன் அனுப்பி வைத்தார்.
தங்கச் சங்கிலி பரிசு!
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், எங்கள் குடும்பத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. பின்னர் ஒரு நாள் அவருடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டோம். அப்போது அவர் நடித்த புதிய தமிழ் திரைப்படத்தையும் அங்கு திரையிட்டார். அதன் பின்னர் 12 நாள்கள் வரை சிவாஜி குடும்பத்தினரின் விருந்தினர்களாக நாங்கள் தங்கி இருந்தோம். மும்பையில் நாடகம் நடிப்பதற்காக சிவாஜி வந்தபோது, என் தாய் அவருக்கு சூப் தயாரித்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அமெரிக்கா செல்லும் வழியில் மும்பையில் எங்கள் வீட்டுக்கு சிவாஜி வந்திருந்தார். என்னுடைய தாய் அவருடைய பூஜை ரூமுக்கு சிவாஜியை அழைத்துச் சென்றார். அப்போது சிவாஜிக்கு ஒரு தங்கச் செயின் ஒன்றை பரிசாக அளித்தார். அவர் அமெரிக்கா சென்றுவிட்டு, மீண்டும் மும்பை வழியே வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார்.
சிவாஜி தந்த பரிசு
சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடந்தபோது, நான் ஹோட்டலில் தங்க நேர்ந்தது. ஆனால், வீட்டுக்கு ஒரு முறையாவது வந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். சில நேரங்களில் அவர் உடல்நிலை சரியில்லாதபோதிலும், ஹோட்டலுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார். அவரது மகளை அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்வார். எனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து எனக்குப் பரிமாறுவார்கள். இதை என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாது. நாங்கள் அவருடைய தமிழ்ப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு தனியாக ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். 'தேவன் மகன்' திரைப்படத்தை நாங்கள் அப்படித்தான் பார்த்தோம். ஒவ்வொரு தீபாவளியின்போதும் சிவாஜி சார் எங்களுக்கு புதிய உடைகள் அனுப்பி வைப்பார். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி சாருக்கு ராக்கி கயிறு அனுப்பி வைப்போம்.
அன்னை இல்லத்தின் கடவுள்
ஒவ்வொரு முறை அவர் வீட்டில் தங்கும்போதும், வீட்டில் உள்ளவர்களிடம், ஷூட்டிங் கிளம்பும் முன்பு, எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைச் சொல்லி அதை மட்டும் பரிமாறும்படி சொல்லி விட்டுச் செல்வார். ஷூட்டிங் முடிந்து வீட்டு வந்த உடன், என்னைப் பற்றி அவர் விசாரிப்பார். சிவாஜிசாரின் தாய் இறந்தபோது, நானும், ஆஷாவும் வந்திருந்தோம். சிவாஜியின் அன்னை இல்லத்தின் கடவுளாக அவரது தாயார் இருந்துவந்தார்.
சிவாஜியின் சகோதரர்களும் அவருடைய வீட்டிலேயே வசித்துவந்தனர். அவரது சகோதரர் இறந்தபோது, சிவாஜி மிகவும் துடித்துப் போய்விட்டார். அவரது மரணத்தை பெரிய இழப்பாகக் கருதினார். சண்முகத்தின் இழப்பை சிவாஜியின் மகன் ராம்குமார்தான் சரி செய்தார்.
நடிகர் பிரபுவும் அவரது தந்தையைப் போலவே எங்களிடம் பாசமாக இருக்கிறார். சிவாஜி என் தந்தையைப் போலவே, அவர்களின் குடும்பத்தினர் மீது பாசமாக இருந்தார். கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். சிவாஜி சாருக்கு இந்தி மொழி தெரியும். எனவே, எங்களிடம் பேசும்போது இந்தியில் பேசுவார். ஒரு முறை அவருடைய மனைவி அணிந்திருந்த நெக்கலஸைப் பாராட்டினேன். உடனே அவர், கமலா என்று அவரை அழைத்து, அதை எனக்குக் கொடுக்கச் சொன்னார். இதுபோன்று எனக்குப் பல பரிசுகளை அவர் கொடுத்திருக்கிறார்.
சிவாஜி சார் இறக்கும் முன்பு அவரை நேரில் சென்று என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு பாடல் பதிவுக்காக, இளையராஜா சார் மும்பை வந்திருந்தார். அவரிடம் சிவாஜி சார் பற்றிக் கேட்டேன். அவர், ‘சிவாஜி சார் உடல்நிலை கவலைக்கு உரியதாக இருக்கிறது. நீங்கள் அவரை சென்று பார்த்து வாருங்கள்’ என்று சொன்னார். ஆனால், அன்று இரவு ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுவிட்டேன். நான் மீண்டும் மும்பை வந்த பின்னர், முதலில் சிவாஜி சாரை சென்று பார்க்க வேண்டும் என்று என் சகோதரி மீனாவிடம் சொன்னேன்.
நான் பாரத ரத்னா விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, லண்டனில் இருந்த என்னை அழைத்து சிவாஜி சார் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சிவாஜி சாரிடம் பேசலாம் என்று முயற்சி செய்தோம். முடியவில்லை. ஆனால், அன்று மாலைதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். அவர் மரணம் எங்களிடம் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. அவரைப் போன்ற ஒருவரை இனி எங்களால் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் சிங்கமாக அவர் வாழ்ந்தார். அவரையும், அவரது அன்னை இல்லத்தையும் எங்களால் மறக்கவே முடியாது” என்று லதா மங்கேஷ்கர் நினைவு கூர்ந்தார்.
நன்றி: விகடன்
8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
அரிய புகைப்படங்கள்
===========================================================
1964ம் ஆண்டில் எம்ஜிஆர் ஏழு படங்களில் நடித்தார். அதேபோல் சிவாஜி கணேசனும் அந்த வருடத்தில் ஏழு படங்களில் நடித்தார்.
1964ம் ஆண்டு,தமிழ்த்திரையுலகில் மிக முக்கியமான ஆண்டு. இந்த வருடத்தில்தான் சிவாஜி பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சிவாஜி. அதேபோல், சிவாஜிகணேசனின் 100வது படம் இந்த வருடம்தான் வெளியானது. இயக்குநர் சிகரம் எனப் போற்றப்படும் கே.பாலசந்தர், இந்த வருடத்தில்தான் கதை, வசனகர்த்தாவாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
64ம் வருடத்தில், எம்ஜிஆர் நடித்த ஏழு படங்கள் ரிலீசாகின. எம்.நடேசன் இயக்கத்தில் ‘என் கடமை’ படத்தில் நடித்தார் எம்ஜிஆர். இந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது. அதேபோல், சுப்பாராவ் இயக்கத்தில் ‘தாயின் மடியில்’ படத்தில் நடித்தார். இதுவும் பேர்சொல்லும் படமாக அமையவில்லை.
பின்னாளில், சிவாஜிகணேசனை வைத்து ஏராளமான படங்களை இயக்கிய பி.மாதவன் இந்த வருடத்தில், எம்ஜிஆரை வைத்து ‘தெய்வத்தாய்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் வசனகர்த்தா கே.பாலசந்தர். தமிழ் சினிமாவுக்கு இந்தப் படத்தில் இருந்துதான் அறிமுகமானார் பாலசந்தர். எம்ஜிஆருடன் இவர் பணியாற்றிய ஒரே படம் இதுதான். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.
டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், எம்ஜிஆர் நடித்த ‘படகோட்டி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வருடத்தில் எம்ஜிஆர் நடித்த கலர்ப்படமும் இதுமட்டும்தான். தேவர்பிலிம்ஸ் தயாரிப்பில், ‘தொழிலாளி’ படம் சுமாராகத்தான் ஓடியது. ‘வேட்டைக்காரன்’ வெற்றி பெற்றது. டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், ‘பணக்கார குடும்பம்’ வெற்றி பெற்றது.
ஆக, எம்ஜிஆரின் ஏழு படங்களில் 4 படங்கள் எம்ஜிஆருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன.
சிவாஜிகணேசனும் 64ம் ஆண்டில், ஏழு படங்களில் நடித்தார். கே.சங்கரின் இயக்கத்தில், பிஎஸ்.வீரப்பா தயாரிப்பில், சிவாஜி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘கைகொடுத்த தெய்வம்’ மிகபிரமாதமான வெற்றியைச் சந்தித்தது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு நிகராக சாவித்திரியின் நடிப்பு பேசப்பட்டது.
அதேபோல், இந்தப்படத்தில் ஒரேயொரு பாடலில், மகாகவி பாரதியாராக சிவாஜி வருவார். ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாடலைப் பாடுவார்.
பி.ஆர்.பந்துலுவின் ‘முரடன் முத்து’ சுமாராகத்தான் ஓடியது. ஏ.பீம்சிங் இயக்கத்தில் ‘பச்சை விளக்கு’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவாஜிக்கும் ரசிகர்களுக்கும் இந்த வருடம் மிக முக்கியமான வருடம். ஏபி.நாகராஜன் இயக்கத்தில், சிவாஜியும் சாவித்திரியும் நடித்த ‘நவராத்திரி’ திரைப்படம் இந்த வருடம்தான் வெளியானது. இதுதான் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த படம். சிவாஜிக்கு 100வது படம். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. இந்தப் படத்திலும் சிவாஜிக்கு நிகரான சாவித்திரியின் நடிப்பு அற்புதம்.
இதேபோல், பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘கர்ணன். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போலவே இந்தப் படமும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. பிரமாண்டமாக ஓடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமாராகத்தான் ஓடியது. ‘கர்ணன்’ தன் வள்ளல்தன்மையை, வசூலில் காட்டவில்லை என்பதில் சிவாஜி ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள்.
இந்த வருடத்தில்தான், சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, படம் தயாரித்தார். முதல் படமே வண்ணப்படம். 64ம் ஆண்டில், ‘கர்ணன்’, ‘புதிய பறவை’ என இரண்டு வண்ணப்படங்களில் நடித்தார். ‘புதிய பறவை’ பல ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. வசூலிலும் சாதனை புரிந்தது. சிவாஜி, சரோஜாதேவி, செளகார் ஜானகி ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
ஆக, சிவாஜி ஏழு படங்களில் நடித்தார். இதில், ‘ஆண்டவன் கட்டளை’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பச்சைவிளக்கு’, ‘புதிய பறவை’ என நான்கு படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ஏழுக்கு நான்கு என்ற வகையில், எம்ஜிஆரும் சிவாஜியும் இந்த வருடத்தில் வெற்றியைச் சுவைத்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருந்த சமயம். அப்போது எம்ஜிஆருடன் ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராக வேலை செய்து பல படங்களில் அவருடன் நடித்தவர் செல்வராஜ் என்பவர். அவருக்கு திருமணம் ஏற்பாடானது. எம்ஜிஆருடன் இணைந்து நடித்த காலமோ வேறு, இப்போதோ நிலைமை வேறு. எல்லோருக்கும் கல்யாண பத்திரிகையை கொடுத்து கொண்டே வந்தார். அப்போது ஒருவர் "என்னப்பா, தலைவருக்கு பத்திரிகை வெக்கலையா?" என்று கேட்கவும் அதிர்ச்சியடைந்தார் செல்வராஜ். "யாருக்கு எம்ஜிஆருக்கா? என்னை எல்லாம் அவர் எப்படி ஞாபகம் வச்சிருக்க முடியும்?" என்றார்.
ராமாவரம் தோட்டம் "ஏம்ப்பா.. நீ அவரோட படங்களில் உதவி இயக்குனரா வேலை செஞ்சிருக்கே இல்லை, அப்பறம் என்ன? அவரை நேரில் பார்க்க முடியாது, உன் பத்திரிகையை அவருக்கு எப்படியாவது சேர்த்துடு, ஏதாவது உனக்கு உதவி செஞ்சாலும் செய்வார்" என்றார். உடனே ராமாபுரம் தோட்டத்துக்கு செல்வராஜ் சென்று, கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் தான் யார் என்பதை விளக்கினார்.
உடனே செக்யூரிட்டி, எம்ஜிஆருக்கு இன்டர்கொம்மில் தகவலை சொல்ல, அவரை பற்றி கேட்டறிந்த எம்ஜிஆரும் செல்வராஜை உள்ளே அழைத்து வருமாறு சொன்னார். அதிர்ச்சியுடன் உள்ளே நுழைந்தவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரை அருகே அழைத்து நலம் விசாரித்து பழைய சம்பவங்களை சொல்லி மேலும் பூரிப்படைய வைத்தார் எம்ஜிஆர். உடனே கல்யாண பத்திரிகையை பிரித்து பார்த்தும் எம்ஜிஆர் முகம் மாறியது. "என்ன செல்வராஜ், உன் கல்யாணத்திற்கு நான் வரவேண்டும் என்ற எண்ணம் உனக்கு இல்லையா? எங்கே இதில் என் பெயர்"? என்று கேட்டார்.
உடனே செல்வராஜ், "நீங்கள் தெய்வம் ஐயா, உங்களை நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லையே, என் பத்திரிகையை தொட்டு பார்த்ததே பெரிய பாக்கியம்" என்றார். உடனே வழக்கமான புன்முறுவலுடன் எம்ஜிஆர், "சரி தேதியை குறித்து கொள்கிறேன், நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு வருகிறேன், அதுக்காக புதுசா கல்யாண பத்திரிகையை என் பெயர் போட்டு அடிக்காதே" என்றார். செல்வராஜால் நடந்து முடிந்ததை நம்பவே முடியவில்லை.
ஊரெல்லாம் எம்ஜிஆர் படத்துடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. இதைப் பார்த்த சிலர், "செல்வராஜ், இப்படி வீண் செலவு செய்யாதே, உனக்கே தெரியாமல் எப்பவாவது நீ அவரை அவமானப்படுத்தியிருப்பாய். அதை மனசில் வைத்து கொண்டு கல்யாணத்துக்கு வராமல் போய் உன்னை பழி வாங்குவார் என்று சொன்னார்கள்.
திருமண நாள் வந்தது. முகூர்த்த நேரமும் நெருங்கியது. ஆனால் எம்ஜிஆர் வரவில்லை. அவர் சார்பாக அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணி வந்திருந்து சீர்வரிசையை தந்து மணமக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார். தவிர்க்க முடியாத காரணத்திற்காக எம்ஜிஆரால் வரமுடியவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.
மறுநாள் மாமியார் வீட்டில் இருந்தார் செல்வராஜ். திடீரென்று நூற்றுக்கணக்கான பொலிஸார் செல்வராஜ் தங்கியிருந்த இடத்தில் குவிந்து, "யாரப்பா செல்வராஜ்?" என்று கேட்டனர். வெளியே வந்த செல்வராஜிக்கு முதல்வர் எம்ஜிஆர் வருகிறார் என்று சொல்லப்பட்டதும் தூக்கி வாரிப்போட்டது. காரில் வந்து இறங்கினார் எம்ஜிஆர். சுற்றுமுற்றும் உள்ள வீடுகளில் இருந்ததிலேயே ஒரு நல்ல சேர் தேடி எடுத்து வெட்ட வெளியில் போட்டார் செல்வராஜ்.
அதனை பார்த்த எம்ஜிஆர், "ஏன், நான் உள்ளே வரக்கூடாதா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்துவிட்டார். மோர் கொடுத்ததும் அதை வாங்கி குடித்தார் எம்ஜிஆர் பிறகு செல்வராஜின் மாமியார் வீட்டு ஆட்களிடம், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள், என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார்.
பிறகு செல்வராஜை மட்டும் தன்னுடன் காரில் ஏறி உட்கார சொன்னார். பிறகு செல்வராஜின் கையில் கெட்டியாக பிடித்து கொண்டார் எம்ஜிஆர், "நீ என் மேல கோபமாக இருப்பாய் என்று தெரியும். நான் உன் கல்யாணத்தை நடத்தி வைத்திருந்தால் உனக்கு கௌரவமாக இருந்திருக்கும் என்று நினைத்திருப்பாய்.
நானும் உன் கல்யாணத்துக்கு வரணும்னுதான் நினைச்சேன். ஆனால் நீ கிளம்பும்போது, "நான் வந்துதான் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்கணும்னு" சொன்னே, நான் பிள்ளைகுட்டி இல்லாதவன், என் அண்ணனோ பிள்ளைகளை பெற்றவர். அதனால்தான் நான் வராமல் என் அண்ணனை நடத்தி வைக்க சொன்னேன்" என்றார் எம்ஜிஆர். இதைக்கேட்டதும் செல்வராஜிற்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தபடியே இருந்தது.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments