கண்டசாலா
தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப் பாளருமான கண்டசாலா (Ghantasala) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 4).
* ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே உள்ள சவுதப்பள்ளி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் (1922) பிறந்தார். முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். தந்தை ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா.
* தந்தை இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டம் பெற்றார்.
* 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார். அகில இந்திய வானொலி, ஹெச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.
* பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன் உட்பட பல பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. திரைப்படங்களில் பாடும் வாய்ப்பும் தேடிவந்தது. முதன்முதலாக ‘சொர்க்க சீமா’ என்ற படத்தில் பாடினார். இசையிலும் வல்லவரான இவர், முதன்முதலாக ‘லக்ஸ்மம்மா’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.
* ‘பாதாள பைரவி’ திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ‘மாயக்குதிரை’, ‘பாதாள பைரவி’, ‘லவகுசா’, ‘மாயா பஜார்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கின் அத்தனை முன்னணி கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார்.
* கன்னடம், மலையாளம், துளு, இந்தியிலும் பாடியவர். இவர் பாடிய தெய்வீகப் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இந்தியாவிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பும் பெற்றார்.
* தென்னிந்திய திரையுலகில் முன்னணிப் பாடகராக சுமார் 30 ஆண்டுகாலம் வலம் வந்தவர். பிரபல இசையமைப்பாளர் எம்.பி.நிவாசனுடன் சேர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.
* தெலுங்கில் 3 திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இளைய தலைமுறைக் கலைஞர்களை ஆதரித்து, ஊக்குவித்து வந்தவர். ‘அமைதியில்லாதென் மனமே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’, ‘கனவிதுதான்’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ ஆகிய இவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவை.
* பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர். பத்ம விருது பெற்றவர். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.
* இறுதிவரை தனது இசையாலும், குரலாலும் லட்சக்கணக்கான வர்களை மகிழ்வித்துவந்த கண்டசாலா 52-வது வயதில் (1974) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் 2003-ல் தபால்தலை வெளியிடப்பட்டது..
நன்றி: இந்து தமிழ் திசை
Comments