வைகுண்ட ஏகாதசி

 

வைகுண்ட ஏகாதசி நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள்

இன்று வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது. 
இன்று வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் நாளை துவாதசி நாளில் 21 வகை காய்கறிகளை சமைத்து சாப்பிடுகின்றனர். சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி. ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.
பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார்கள். பெருமாள் அவர்களைத் தடுத்து,பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன் என்றார். ஆனால் அசுரர்கள் அதை அலட்சியப்படுத்தியதோடு பெருமாளுக்கே வரம் தருவதாக கூறினர்.

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பெருமாள், நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும் என்றார். அசுரர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் முக்தி அடைய வேண்டும் என்றனர். அதே போல ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு தனது சக்தியில் இருந்து உதித்த ஏகாதசியினால் அவர்களை வதைத்தார் பெருமாள்.

இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்டத்தில் வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார். வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும் என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டவே, அதற்கு இறைவனும் ஒப்புதல் அளித்தார்.

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.
உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பதால் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் சாப்பிட வேண்டும்.
ஏகாதசி நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதம் இருப்பவர்கள் துவாதசி நாளில் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். துவாதசி விருந்தில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெற வேண்டும். அரிசி சாதம், மோர் குழம்பு, அகத்திக்கீரை பொறியல், பொறிச்ச கூட்டு, நெல்லிக்காய் பச்சடி, அக்கார அடிசல், பாயசம், நெய்யில் வறுத்த சுண்டக்காய், தயிர் என விரத சாப்பாட்டினை தயார் செய்ய வேண்டும்
அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். துவாதசி நாளில் சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண மந்திரத்தை கூறியபடி இருக்க வேண்டும். துவாதசி நாளில் சூரியன் அஸ்தமனம் முடிந்த பின்னரே உறங்க வேண்டும். இதன் மூலம் உடல் பலமும், ஆன்ம பலமும் அதிகரிக்கும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி