ஞாயிறு திரை மலர் 24/01/2021
ஞாயிறு திரை மலர் 24/01/2021
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இளையராஜாவின் இன்னொரு பக்கம்!
இசைஞானி இளையராஜா தன் பத்து விரல்களால் உலகை கட்டிப்போட்டிருப்பது இசையால் மட்டும்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் புகைப்படம் எடுப்பதிலும் கை தேர்ந்தவர் என்பது அவரை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்தது.
இளம்வயதில் முதன்முதலாக இசைக்கருவியாக அவர் கண்டுபிடித்தது கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அடர்ந்த மூங்கில் காட்டில் இருக்கும் ஒரு நாணல் வகை குச்சியில்தான்.
ஈத்த என்று கிராமப்புறத்தில் அழைக்கப்படும் அந்த குச்சிதான் அவருக்கு அப்போதைய புல்லாங்குழலாக இருந்தது.
காலம் அந்தப் புல்லாங்குழலையே அவரது கையில் கொடுத்து இந்த உலகை ஆள வைத்து விட்டது.
நம் எல்லோருக்கும் இளையராஜா இசைதான் பொழுதுபோக்கு என்றால் இளையராஜாவுக்கு இசை தவிர புகைப்படம் எடுப்பதில்தான் அதிக ஆர்வம்.
சென்னைக்கு வந்து தனித்து இசையமைக்க ஆரம்பித்ததிலிருந்து, அவர் எங்கு சென்றாலும் கேமராவையும் எடுத்துச் செல்வது வழக்கமாக வைத்திருந்தார்.
மனம் லயிக்கும் காட்சிகளைப் படமாக்கி வைத்துக் கொள்வார். இதற்காக அப்போதே அவர் நவீன கேமராவை வாங்கி வைத்திருப்பார்.
மார்க்கெட்டில் அந்த கேமராவைத் தாண்டிய நவீன வடிவத்தில், புதிய கேமரா வந்தால் அதையும் வாங்கி விடுவது இளையராஜாவின் வழக்கம்.
தன்னிடம் ஏற்கனவே உள்ள கேமராவைத் தன்னை சந்திக்க வரும் நபர்களில், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர் இருந்தால் அவர்கள் கையில் இதைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
முதன்முதலில் அவர் எடுத்து அவருக்கே பிடித்த போட்டோ அவரது அம்மா சின்னத்தாயை எடுத்ததுதான்.
அந்தப் போட்டோவை எடுத்தபோது ஒரு விருது நிகழ்ச்சிக்குப் போய்விட்டுத் திரும்பிய இளையராஜா, வீட்டு வாசலில் அம்மா வரவேற்று நிற்பதைப் பார்த்து, அவரை இன்னும் சந்தோஷப்படுத்த நினைத்து, தனியே உட்கார வைத்துப் போட்டோ எடுத்தார்.
இதில் நெகிழ்ச்சியான விஷயம். தன் மகனுக்கு விருது வழங்கப்பட்டிருப்பது நினைத்து அம்மா ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார்.
போட்டோ எடுக்கும் போது அந்தக் கண்ணீர் துளியும் போட்டோவில் பதிவாகியிருக்கும். இப்போதும் அந்தப் போட்டோவைப் பார்க்கும் போது ராஜா நெகிழ்ந்து போவார்.
இதுநாள் வரை இளையராஜா பூஜை அறையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் போட்டோ அது.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு போயிருக்கும்போது அவர் எடுத்து மகிழ்ந்த புகைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான சிந்தனையுடையவை.
இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு இவர் பயணப்படும் போதெல்லாம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பிரபல வாரஇதழ் ஒன்று, ஒவ்வொரு படமாகத் தேர்வு செய்து அதை எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதை வெளியிட்டது. இதை இளையராஜாவே எழுதிக் கொடுத்துள்ளார்.
இசைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது, வீட்டுக்குச் செல்லாமல் ரெக்கார்டிங் ஸ்டுடியோவே வீடாகிப்போன நாட்களிலும் போட்டோ எடுப்பதை மட்டும் விடவே இல்லை ராஜா.
சிம்பொனிக்காக ஹங்கேரி சென்றபோது அங்குள்ள மொசார்ட் பிறந்த வீடு, இசைக்குறிப்புகள் வாசிக்கப்பட்ட இடம், அவரது கல்லறை என பல இடங்களைத் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
தான் எடுத்தப் புகைப்படங்களை எல்லாம் சினிமாவில் தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த கமல்ஹாசன், பாலுமகேந்திரா ஆகியோரிடம் காட்டி மகிழ்வார் இசைஞானி.
பாலுமகேந்திரா இந்த புகைப்படங்களையெல்லாம் ஒன்று சேர்த்து அதை கண்காட்சியாக வைக்கலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசனும் அதற்கு இசைவு தெரிவித்திருக்கிறார். ஆனால் காலம்தான் கைகூடி வரவில்லை. இந்தப் புகைப்படங்கள் பெரும்பாலும் ஃபிலிம் வகைதான் என்பதால் பாதுக்காப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன.
இதனால் அதிகமாகிப்போன அவரது பிலிம் ரோல்கள் அவரது நெருக்கமான புகைப்படக் கலைஞர்கள் கையில் இருந்தன.
இந்தப் பிலிம்களை எல்லாம் டெவலப் செய்து அதை கண்காட்சியாக வைக்க வேண்டும் என்று இளையராஜா முடிவுசெய்து ஃபிலிம்களைத் தேட ஆரம்பித்தார்.
அப்போது கிடைத்த சில புகைப்படங்களை நவீனத் தொழில் நுட்பத்தின்படி நூறு புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதை கண்காட்சியாக வைக்கப்பட்டது.
தனது புகைப்படங்களைக் கண்காட்சியாக வைக்க வேண்டும் என்று விரும்பிய கமலஹாசன், பாலுமகேந்திரா ஆகியோரை வைத்தே கண்காட்சியைத் தொடங்கினார்.
பத்து நாட்கள் நடந்த இந்தக் கண்காட்சியில், திரையுலகின் முக்கிய வி.ஐ.பிகள் பலரும் வந்து பார்த்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து கோவையிலும் கண்காட்சி வைக்கப்பட்டது.
தனது நீண்டநாள் ஆசை நிறைவேறியதில் இளையராஜாவுக்கு பெரும் மகிழ்ச்சி.
_______________________________________________________________________________________
அரிய புகைப்படங்கள்
இளையராஜாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பாலச்சந்தர் மனைவியுடன்
______________________________________________________________________________
செய்வன திருந்தச் செய்’ ….சிவாஜி மாண்பு
——————————————————————————-
நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார்.
டி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால்…அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர்.
மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
அது மட்டுமன்றி….இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை….எனவே…மன்னிக்க வேண்டும் ..இந்தப் பாடலை என்னால் பாட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ்.
‘நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது…இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத் தான்…என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்…
ஆனால்…உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும்…குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும்…
எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.எம்.எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.
அப்படியா?..இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?..என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி.எம்.எஸ்.
ஆனால்…எம்.எஸ்.வி…தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.
‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்..இந்தப் பாடலும்..உங்கள் பாடல்களில்…மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத் தான் போகிறது…’என்று சொல்லிய எம்.எஸ் வி…டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.
பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
பாடலைக் கேட்ட நடிகர் திலகம்…’உடனடியாக படப் பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்…’என்றார்.
அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.
‘மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள்.
டி.எம்.எஸ் மிகவும் அபாரமாக…இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார்.
இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன்.
டி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும்…அதனால் தான் படப் பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்…என்றாராம் சிவாஜி.
சொன்னது போலவே…அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து…அந்த மெட்டையும்…டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம்…மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.
அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா?
‘சாந்தி ‘ திரைப் படத்தில் இடம் பெற்ற ‘ யார் அந்த நிலவு?…ஏன் இந்தக் கனவு?….
அந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும்…..’செய்வன திருந்தச் செய்’ என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும்…இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு
இணையத்தில் இருந்து எடுத்தது
----------------------------------------------------------------------------------------
ஒருமுறை இயக்குநர் பாலசந்தர், கவிஞர் கண்ணதாசன் ஆகியோருக்கு ஒரு டியூனை பாடிக் காண்பித்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.
அந்த டியூனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார் பாலசந்தர். ஆனால் கவிஞருக்கு அந்த டியூன் பிடிக்கவில்லை. இருப்பினும், பாலசந்தரின் விருப்பத்திற்காக சரியென்று சொல்லிவிட்டு, மீண்டும் பாடச் சொன்னார்.
சந்தத்தைக் கேட்ட கவிஞர் எழுதிய வரிகள்,
"வா நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா'
என்று தொடங்கி, முழுப்பாடலையும் எழுத, அதில் மொத்தம் 36 "லா'க்கள் அடங்கியிருந்தது.
பாடலைப் பாடிய பின் பாலசந்தர் மிகுந்த சந்தோஷமடைந்து, " இனி லா போட்டு யாராலும் இப்படி எழுத முடியாது' எனப் பாராட்டினார்.
ஆனால் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலைக் கேட்டு குறை சொன்னார் எம்.எஸ்.வி. குறும்பாக,
"என்ன கவிஞரே, இன்னும் நாலு, ஐந்து லா போடலாமே'' என்று சொல்ல, மீண்டும் பாடலை வாங்கிப் படித்துவிட்டு, "சரியாகத்தான் உள்ளது''
என்றார் கவிஞர்.
அதற்கு விஸ்வநாதன் சொன்னார். பிரதர் இன்லா, சிஸ்டர் இன்லா, மதர் இன்லா, ஃபாதர் இன்லா, இந்த லாக்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீங்க?
இதைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன் தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாராம்.
("பிரபலங்கள் செய்த குறும்புகள்' என்னும் நூலிலிருந்து)
Comments