ஸ்ரீரங்கம் கோவிலில் பழமை மாறாமல் நடத்தப்படும் 322 திருவிழாக்கள்
ஸ்ரீரங்கம் கோவிலில் பழமை மாறாமல் நடத்தப்படும் 322 திருவிழாக்கள்
ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள்தான் என்றாலும் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது
ஜனவரி 06, 2021 14:30
ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள்தான் என்றாலும் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அரங்கன் பள்ளி கொள்ளும் புண்ணிய பூமியான ஸ்ரீரங்கம் காவிரி, கொள்ளிடம் என்ற இரு நதிகளுக்கு இடையே அமைந்து உள்ளது. அதனால் தான் ஸ்ரீரங்கத்தை தீவு என கூறுவோரும் உண்டு.
கலாசார கருவூலம்
156 ஏக்கர் பரப்பளவு, உலகிலேயே உயரமான ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்கள், நெடிதுயர்ந்த மதில்சுவர்களை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை தென்னிந்தியாவின் கலாசார கருவூலம் என குறிப்பிட்டால் மிகையாகாது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு பிரகாரத்திற்கும், சன்னதிக்கும், ஏன் தூண்களுக்கும் கூட தனித்தனி வரலாறு உண்டு. இதுபோன்ற வரலாறு வேறு எந்த கோவில்களிலும் இல்லாத ஒன்றாகும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் என அனைத்தும் பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படியே இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. பூஜை முறைகள் மற்றும் உள்ள சடங்குகள் என எல்லாமே கோவிலொழுகு என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நடத்தப்பட்டு வருகின்றன.
பழமை மாறாமல்...
ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள் தான் என கூறும் அளவிற்கு இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் எடுத்துக்கூறுவது என்பது இயலாத காரியமாகும். இதில் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசி
இந்த விழாக்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகும். இது தென்னிந்திய விழாக்களில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களுக்கு இடையில் பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடத்தப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியதில் இருந்து நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறும் நாள் வரை ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டு இருப்பதை காண கோடி கண்கள் வேண்டும். அது மட்டும் இன்றி விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பதும், அரங்கனை மகிழ்விக்க அரையர்கள் அபிநயத்துடன் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை பாடுவதும் வேறு எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத ஒன்றாகும்.
சொர்க்க வாசல் திறப்பு
இந்த ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பிரச்சினைக்காக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்து உள்ள உத்தரவுகள், கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பக்தர்கள் அரசு அறிவித்துள்ள நேரங்களில் சமூக இடவெளியை கடைபிடித்தும், கட்டாயம் முக கவசம் அணிந்தும் தரிசித்து அரங்கனின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Comments