ரணமமகரிஷி (40)
பகவான் ஸ்ரீரமணர் குறித்த தொடர் :40
பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றிய சில நிகழ்வுகளை இன்று நமக்கு எடுத்துச்சொல்ல வருபவர் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நகைச்சுவை உணர்வை ஊட்டி நம்மையெல்லாம் மகிழ வைத்தவர்.
ஒரு முறை, கோயம்புத்தூரில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி அவர்கள் பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றி தாங்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி அவரை மேடை ஏற்றியவர்.
அதற்கு இசைவு தந்து, உலகெங்கிலும் உள்ள நகரங்களில், தமிழ் மொழியால் நகைச்சுவை உணர்வினை தந்து அரங்கங்களில் வந்து அமர்ந்தவர்களை எல்லாம் சிரிக்க வைக்க மேடையேறியவர் கிரேசி மோகன் அவர்கள்.
அவர் ஸ்ரீ ரமணரை பற்றி சொன்ன சில சம்பவங்களிலிருந்து அவரது தனித்தன்மை வழியே இங்கு பதிவிடுகிறேன்.
ஒரு முறை, கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 500 ஆண்டு பழமை வாய்ந்த முருகன் சிலையைக் கண்டு மெய்மறந்து நின்றார்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று என்னும் முருகன் பாடலை நினைவில் வைத்துக் கொண்டு பகவான் ஸ்ரீ ரமணர் பற்றி அவர் எழுதிய வெண்பாவிலே தனது கருத்தினைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
பேருற திருச்சூழியில் பிறந்த முகம் ஒன்று
பேதை அழகம்மை மடி பாய்ந்த முகம் ஒன்று
பேறு பெற கூடல்நகர் போன முகம் ஒன்று
கூருபட கூற்றனை எதிர்த்த முகம் ஒன்று
ஏறி அருணாசலம் அமர்ந்த முகம் ஒன்று
ஏகமென யாவினையும் ஏற்ற முகம் ஒன்று
பாரியில் ரமணிய மழை பெய்த பெருமாளே.
தன் வாழ்நாளில், பகவான் ஸ்ரீ ரமணரின் " ரமண சரிதம் ''படித்து நல்ல கருத்துக்களை உள்வாங்கி எழுதியது.
பகவானின் ஜனனம் பற்றி எழுதியதொரு வெண்பா
"திருவாதிரை முன் நாளில்
திருச்சுழி ஊரில் கருவாய்
அழகம்மை கர்ப்பம் உருவாய்
பெரும்தவம் செய்து பகவான்ரமணர்
பிறந்து துறந்தார் பிறப்பு.
கிரேஸி மோகன் அவர்கள், பகவான் ஸ்ரீ ரமணர் பற்றி சொல்லும் பொழுது, சூரிநாகம்மா என்னும்தெலுங்கு மொழி பேசத் தெரிந்த ஒரு பக்தைக்கு, ஸ்ரீ ரமணர் தெலுங்கு மொழியில் அவருக்கு வெண்பா எழுதி தந்திருக்கிறார் என குறிப்பிடுகிறார்.
அன்பேசிவமாம் அருணை ரமணர்க்கு
வெண்பா தெலுங்கில் விளையாட்டு
தென்பால் திளைக்கும் தவமுனி தட்சிணாமூர்த்திக்கு
இலக்கணம் தானாய் இருப்பு
கிரேசி மோகனின், நகைச்சுவை வசனங்களை நாடகங்களிலும் சினிமாவிலும், ரசித்த எல்லோருக்கும் ரமணர் மீது கொண்டுள்ள பக்தியால் அவர் அருளிய வெண்பாக்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கக்கூடும்.
தான், கிண்டியில் பொறியியல் படிக்கும்போதே, பகவான் ஸ்ரீ ரமணரால் ஈர்க் கப்பட்டவன் என்றும், அவர் இருக்கும் இடத்திற்கு நண்பன் ரவியுடன் சேர்ந்து, வீட்டை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தவன். ஆனால் அந்தக் காரியம் கைகூட வில்லை என்று தனது கருத்தில் தெரிவித்துள்ளார் மோகன் அவர்கள்.
ஒரு முறை, பகவான் ஸ்ரீ ரமணர், தான் பள்ளி படிக்கும் பொழுது, ஆசிரியராக இருந்த ஒருவர், பகவானிடம் வந்து உங்களிடம் நிறைய கேள்வி கேட்க வேண்டும் என்றாராம். அதற்கு பகவான், இதற்கு பயந்து கொண்டுதான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்றாராம் நகைச்சுவையாக.
பகவான் ஸ்ரீ ரமணர், தன்னிடம் வருபவரிடம், சிரிக்கவும் வைப்பார் சிந்திக்கவும் செய்வார், இந்தக் கொள்கையை நான் பற்றிக் கொண்டேன். இதனால் தான் தனியார் நிறுவனத்தில் பத்தாண்டுகள் வேலை செய்து அப்பதவியை ராஜினாமா செய்து, கலைத்துறையில் முழுவதுமாக ஈடுபட்டு மற்றவர்களை சிரிக்க வைக்கவேண்டுமென்று தான் நாடகத்திலும், திரைப்படத்துறையிலும் நகைச்சுவை மூலம் என்னால் கதை, வசனங்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது.
ஒருமுறை பகவானிடம், ஆசிரமத்தில் தவம் பற்றி ஒருவர் கேட்க, அவனுக்கு ஒரு தோசை எடுத்து வரச் சொல்லி இருக்கிறார்.
பகவானோ அந்த த தோசை அவனுக்கு கொடுத்து நான் start சொல்லும்போது சாப்பிடு stop சொல்லும் போது நிறுத்த வேண்டும் என்றாராம்.
வந்தவரிடம் start சொல்லும்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் பகவான் ஸ்டாப் சொல்லும் வரைக்கும் அவரையே பார்த்துக்கொண்டு stop சொல்வதற்கு முன் சாப்பிட்டு முடித்தாராம்.
உன் நினைவில், நான் இருந்தது உண்மை
பகவான் நினைவில் இருந்தால் அதுவே தவம் என்றாராம் பகவான் ஸ்ரீ ரமணர் மிக எளிதாக.
இந்தச் சூழலையே ஒரு வெண்பாவாக தந்துள்ளார் கிரேஸி மோகன் அவர்கள்.
" தோசையின் மீது உனக்கு ஆசை இருந்தாலும்
ஆசான் என் சைகைப் பார்த்து ஆழ்ந்திருந்தாய்
வேஷம் வெளியே நீ போட்டாலும்
ஈசனே உன்னுள் தெளிவாய் நினைத்தலே தவம்.
எப்போதும் இந்த வலையில் இருப்பதை தவிர்க்கவும். எல்லோர் வாழ்விலும் வரும் "கவலை", அதனை சமாளித்து தான் ஆக வேண்டும்.
மேலும், பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றி சொல்லும் போது "Ego" வரும் பட்சத்தில் "yougo" என்று விரட்டி அடித்தால் வாழ்க்கை நிச்சயம் சுகமாக அமையும் என்றார்.
நமக்கு எதிர்காலம் இருப்பதை எண்ணி செய்கின்ற செயல்களை தள்ளிப் போடாதே. அக்காலத்தை முழுவதும் நம்பாதே.
நிகழ்காலம் ஒன்றே திகழ் காலமாக, பயன்படுத்திக் கொண்டு வாழ்விலேயே நலம் பெறுவாய் என்று பகவான் ரமணரின் கருத்திற்கு வெண்பாவாய் தந்துள்ளார் கிரேசி மோகன்.
" நேற்று கிடைக்காது நாளை கிடையாது ஏற்றுக்கொள் இன்றே எதார்த்தமாய் வேற்றுமை காணாத கண்ணுக்கு கண்டதெல்லாம் கைவல்யம் சோணாசல ரமணர் சொல்"
தம் வாழ்நாளில், எப்போதும் நகைச்சுவையாகவும் கலகலப்பாவும் வாழுங்கள், என்று பகவான் ஸ்ரீ ரமணரின் கருத்துக்களுடன், நகைச்சுவை வசனகர்த்தாவாக மட்டுமல்லாமல், ஒரு வெண்பாக் கவிஞராக நமக்கு, அவரது பாணியில் சொன்ன கருத்துக்களை நாம் உள்வாங்குவோம்.
Comments