சரோஜாதேவி

 சரோஜாதேவி பிறந்த நாள்

இன்று ஜனவரி 7


இன்றைய 20 வயதில் இருக்கும் தலைமுறைகூட இந்த சீனியர் நடிகையை மறக்கவில்லை என்பதற்கு, 'கோப்ப்பால்' என்கிற விளி ஒன்றே உதாரணம். வயது 75 ஆகிவிட்டாலும் இன்னமும் அதே கிளிக் கொஞ்சும் தமிழ்; அதே அபிநயங்கள்... யாரென்று கண்டுபிடித்துவிட்டீர்களா? யெஸ், கன்னடத்துப் பைங்கிளி 'சரோஜாதேவி'. அவருக்கு இன்று (ஜனவரி 7) பிறந்த நாள். இவரைப் பற்றி கொஞ்சும்... ஸாரி, கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
1960-களில் தமிழ்த் திரையுலகமே கொண்டாடிய சரோஜாதேவி பிறந்தபோது என்ன நடந்தது தெரியுமா?
பெங்களூருவைச் சேர்ந்த பைரப்பா - ருத்தரம்மா தம்பதிக்கு நான்காவது மகளாகப் பிறந்தவர், சரோஜாதேவி. ஏற்கெனவே மூன்று பெண் பிள்ளைகள் இருக்க, நான்காவதாக பையன் பிறப்பான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். பிறந்தது, நம்ம அபிநய சரஸ்வதி.
பின்னாளில் இதைப் பற்றி சொல்லும்போது, ''நானும் பெண்ணாகப் பிறந்துவிட்டதால் என் தாத்தாவுக்கு பயங்கர கோபம். 'யாருக்கு வேண்டும் இந்தச் சனியன்?' என்று முணுமுணுப்பாராம். நான் தவழ்கிற வயதில் இருந்தபோது எனக்கு முடக்குவாதம் வந்துவிட்டதாம். என் அம்மா எனக்காக விரதம் இருந்த சமயத்திலும், 'இது செத்தா சாகட்டுமே' என்பாராம் தாத்தா. ஆனால், நான் வளர்ந்து பெரியவளானபோது என்னை அதிகமாக ஆசீர்வதித்தவர் என் தாத்தா'' என்று குறிப்பிட்டுள்ளார் சரோஜாதேவி.
முறைப்படி பரதம் தெரியாவிட்டாலும், முகபாவனைகளிலும் அங்க அசைவுகளிலும் பரத முத்திரைகளை ஜஸ்ட் லைக் தட் காட்டக்கூடியவர் சரோஜாதேவி. பள்ளியில் படித்தபோது, இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இந்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கன்னட திரையுலக ஜாம்பவான் ஹொன்னப்ப பாகவதர், சரோஜாவின் குரலில் அசந்துபோனார். தன்னுடைய படத்தில் பின்னணிப் பாடுவதற்கு அழைத்துள்ளார். மகிழ்வுடன் பாடல் ஒத்திகைக்காகச் சென்றவரின் தோற்றப் பொலிவைப் பார்த்தார்கள். நடிகை சரோஜாதேவி ஆனார்.
இந்தக் கன்னடத்து பைங்கிளியை, கேமரா வழியாகப் பார்த்த அன்றைய நடிகர்கள், 'ஒரு பக்கம் பார்த்தால் பத்மினி; மறுபக்கம் பார்த்தால் வைஜெயந்தி மாலா' என்று கொண்டாடினர். அப்பேர்ப்பட்ட அழகுகொண்டவர், தன் கெரியரின் ஆரம்பத்தில், 'தங்கமலை ரகசியம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சிம்ரன் நடித்த 'ஜோடி' படத்தில் த்ரிஷா தலைகாட்டியதுபோல, 'பார்த்திபன் கனவு' என்ற படத்தில் கதாநாயகி வைஜெயந்தி மாலாவுக்குத் தோழியாகத் தலைகாட்டியிருக்கிறார் சரோஜாதேவி.
'நாடோடி மன்னன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியை நடிக்கவைக்கும் பேச்சு எழுந்ததும், 'சிறு வேடங்களில் நடனமாடும் பெண், எம்.ஜி.ஆருக்கு ஜோடியா?' என்று பல எதிர்ப்புகள் தோன்றியிருக்கின்றன. சரோஜாதேவிக்கு மேக்கப் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்தது. யோசித்தபடி உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆரிடம் பக்கத்தில் இருந்த சிலர், 'அந்தப் பெண் காலை தாங்கித் தாங்கி நடக்கிறாள். கதாநாயகி வேடத்துக்குச் சரிப்பட்டு வருமா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு எம்.ஜி.ஆர், 'அந்த நடையும் அழகாகத்தான் இருக்கிறது' என்று குறை சொன்னவர்களின் வாயை அடைத்திருக்கிறார். இதன்பிறகு எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் இந்த அபிநய சரஸ்வதி.
ஜெமினி கணேசனுடன் 'கல்யாண பரிசு' படத்தில் நடிக்கும்போது, சரோஜாதேவிக்கு சுத்தமாகத் தமிழ் தெரியாது. ஒரு ரூபாயை, 'வரு ரூபா' என்று உச்சரித்து, பல டேக் வாங்கி டைரக்டர் ஶ்ரீதரை டென்ஷனாக்கி இருக்கிறார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, ஜெமினி கணேசனே வசனங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதனால், தான் பேசவேண்டிய வசனங்களை மறந்துவிடுவாராம் ஜெமினி.
பரதநாட்டியம் தெரியாது; நாடகத்தில் நடித்த அனுபவம் கிடையாது; கவர்ச்சி காட்டவே மாட்டார் என வெள்ளித்திரையில் ஜொலிப்பதற்கு தேவையான பல விஷயங்கள் சரோஜாதேவியிடம் இல்லாதபோதும், தன் உழைப்பாலும் நளினத்தாலும் மட்டுமே ஜெயித்தவர் இந்தக் கன்னடத்து பைங்கிளி.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,