பிஸியான நாகேஷும் பிரியமான தோசையும்!
பிஸியான நாகேஷும் பிரியமான தோசையும்!
ஒப்பற்ற நகைச்சுவையால் ரசிகர்களைக் கட்டிப் போட்ட நாகேஷ், ஒப்பனையற்ற சிரிப்புடன் சக கலைஞர்களுடன் இருக்கும் புகைப்படம். இதன் வலது ஓரத்தில் நிற்பவர் இயக்குனர், எழுத்தாளர் காரைக்குடி நாராயணன். அந்தத் தருணம் அவர் வார்த்தைகளில்...
‘‘நான் தயாரித்து இயக்கிய ‘அன்பே சங்கீதா’ படப்பிடிப்பில் எடுத்த போட்டோ இது. ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்துக்குப் பிறகு ராதிகா மூன்றாவதாக நடித்த படம். பாரதிராஜாதான் ராதிகாவின் கால்ஷீட்டை வாங்கிக் கொடுத்தார். ஏவி.எம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, பக்கத்து ஃப்ளோரில் நாகேஷ் பட ஷூட்டிங். என் படத்தின் ஷூட்டிங் நடப்பதை கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்தவர், எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அவருடன் எனக்கு எதிர்பார்ப்பு இல்லாத நட்பு இருந்தது. ஈகோவே அற்ற மனிதர் அவர். சம்பள விஷயத்தில் கரெக்டா இருந்தாலும் தயாரிப்பாளர் கஷ்டப்படுவது தெரிந்தால், உதவி செய்ய தாமதிக்கமாட்டார். என் நாடகங்களைப் பார்த்துவிட்டு தேடி வந்து பாராட்டுவார். ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்தபோது அவருடன் நெருங்கிப் பழகினேன். அப்போ நாகேஷ் ரொம்ப பிஸி. நான்கு மணி நேர கேப்பில், ஒரே நாளில் இரண்டு மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பார். ஒரு படத்தில் நடித்த உடையோடு இன்னொரு பட ஷூட்டிங்குக்கு வருவார்.
அவருக்காக என்னை ஒரு கதை பண்ணச் சொன்னார். ‘கரையை தொடாத அலைகள்’ என்ற பெயரில் நான் கதை ரெடி பண்ணியும், அவரால் நடிக்க முடியாமல் போனது. செட்டிநாடு ஸ்டைல் தோசை... அதுவும் என் வீட்டில் என்றால், நாகேஷுக்கு கொள்ளை பிரியம். இரவு பத்து மணி ஆகிவிட்டாலும் போன் போட்டு, ‘காரைக்குடி, இன்னிக்கு உன் வீட்லதான் சாப்பாடு’ என்று உரிமையோடு வந்து சாப்பிடுவார்.
அவரது காமெடி பேசப்பட்டதற்கு காரணமே அவருடைய கிரியேட்டிவிட்டிதான். ஷூட்டிங் பிரேக்கில் கூட சும்மா இல்லாமல் காமெடி எழுத்தாளர் வீரப்பனுடன் கலந்து பேசி நகைச்சுவைக் காட்சிகளுக்கு வலு சேர்த்ததுதான் அவரது சிறப்பு. இரவு ஷூட்டிங் முடிந்ததும் காரில் அவரது வீடு வரை சென்று டிராப் செய்வேன். சில நேரங்களில், ‘காரைக்குடி... காரை பீச்சுக்கு விடச் சொல்லு’ என திடீர் ரிலாக்ஸ் மூடுக்கு மாறுவார். அதன்பின் விடியும் நேரத்தில் வீட்டுக்குச் செல்வார். அப்படித் தன்னைப் புதுப்பித்துக் கொண்டதால்தான் அத்தனை வேகமாகவும் வெற்றிகரமாகவும் அவரால் இயங்க முடிந்தது!’’
- அமலன்
நன்றி: குங்குமம்
Comments