நாம ஜெயிச்சிட்டோம், நாம ஜெயிச்சிட்டோம்
' :நாம ஜெயிச்சிட்டோம், நாம ஜெயிச்சிட்டோம் கவாஸ்கரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாடிய பிரையன் லாரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அன்று 2-1 என்று கைப்பற்றிய போது இந்திய அணியின் வெற்றியை மே.இ.தீவுகள் லெஜண்ட் பிரையன் லாரா எப்படிக்கொண்டாடினார் என்பதை கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வரலாற்று வெற்றி பெற்ற தருணம் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாத தருணமாக இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது ஆசிய, உலக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் என்பது மிகையல்ல
பிரையன் லாரா எப்போதும் வெள்ளை நிறவெறி ஆதிக்கத்துக்கு எதிரானவர் என்பது பல சமயங்களில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் புரியும்.
1996 உலகக்கோப்பையின் போது கென்யாவிடம் தோற்றது மே.இ.தீவுகள், ஆனால் காலிறுதியில் வலுவான ஹான்சி குரோனியே தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை தன் சதம் மூலம் வெளியேற்றினார் லாரா.
அப்போது அவரிடம் கென்யாவுடன் தோல்வி, தெ.ஆ.வுடன் வெற்றியா என்று கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது அவர் கென்யாவுடன் தோற்றது பற்றி கவலையில்லை, ஆனால் வெள்ளை வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் தென் ஆப்பிரிக்காவுடன் தோற்கக் கூடாது என்பதே நோக்கம் என்றார். அதே போல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவையும் போட்டு பின்னி எடுத்துள்ளார் லாரா.
இந்நிலையில் இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின் இருந்த மே.இ.தீவுகளைச் சேர்ந்த பிரையன் லாரா, அதே வெள்ளை இன மேட்டிமை பேசும் இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடியதில் ஆச்சரியம் இல்லை.
பிரையன் லாராவும், சுனில் கவாஸ்கரும் சேனல் 7-க்காக வர்ணனை அளித்துக் கொண்டிருந்த போது நடந்ததைத்தான் சுனில் கவாஸ்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கவாஸ்கர் இது தொடர்பாகக் கூறியதாவது:
சேனல் 7 பிரியாவிட விருந்து நடந்து கொண்டிருந்தது. என்னுடைய கோப்பையை உயர்த்தியபடி நான் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் இந்திய வெற்றியைக் கொண்டாடினர்.
அப்போது பிரையன் லாரா என்னருகே வந்தார் என்னைக் கட்டிப்பிடித்தபடியே, ‘நாம ஜெயிச்சிட்டோம், நாம ஜெயிச்சிட்டோம்’ என்று உற்சாகத்தின் உச்சிக்குச் சென்ரார்.
என்ன ஒரு தொடர், என் வாழ்க்கையின் மீதமுள்ள நாட்களை இந்த வெற்றியை நினைத்தே கழித்து விடுவேன். நான் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறேன், என்றார் சுனில் கவாஸ்கர்.
Comments