ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் சமீப நாட்களாக பகிரும் புகைப்படங்களில் இயற்கை சார்ந்த விஷயங்களும், பழமை சார்ந்த விஷயங்களும்தான் அதிகம் உள்ளன. கொடைக்கானல், ஹைதராபாத் என செல்லும் இடங்களிலும் இயற்கையை ரசிக்கும் ரசிகையாகவே இருக்கிறார்.
மேலும் பஞ்சகர்மா என்னும் ஆயுர்வேத முறையை பின்பற்றுவதாகவும் அது சுய ஆரோக்கியத்தை பாதுகாத்து உடலளவிலும், மனதளவிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் எனக் கூறியிருக்கும் அமலாபால் யோகாவிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று கூறி சத்குருவுடன் ஈஷா யோகா மையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, “என் வாழ்க்கை ஒரு முழு வட்டத்துக்குள் வந்துவிட்டது. ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்.
நான் முதல்முறையாக 19 வயதில் ஈஷா யோகா மையத்துக்கு வந்தேன். அப்போது 3 கேள்விகள் கேட்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எனது அனைத்து கேள்விகளுக்கு தான் யோகா செய்வதாக சத்குரு பதிலளித்தார். அந்த வார்த்தைகளின் வலிமை எனக்கு அப்போது தெரியவில்லை.
அவரது கருத்துகளை நான் ஒருவேளை ஏற்றுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் நான் எவ்வளவு மாற்றம் பெற்றிருப்பேன். சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவரை சந்தித்தேன். என் வாழ்க்கை ஒரு முழுவட்டத்திற்கு வந்துவிட்டது என நினைக்கிறேன். இது நனவான வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்” இவ்வாறு நடிகை அமலாபால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Comments