"தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்"

 தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களில் சதம் எனப்படும் பிரபந்தவகையும் உண்டு.


பல உலக நீதிக் கருத்துக்களையும், யதார்த்தமாக நாம் உலகில் பார்ப்பதையும், உலகநடப்புகளையும், மக்களின் இயல்புகளையும் - பொதுவாக உலகியல் உண்மைகளையும் சொல்லக்கூடிய பாடல்கள் நூறைக் கொண்டது, சதகம். குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
தண்டலையார் சதகத்திலிருந்து ஒரு பாடல்:
மண்ணுலகில் பிறர் குடியை வஞ்சனையிற்
கெடுப்பதற்கு மனத்தினாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே
கெடுவன் என்பதுண்மையன்றோ
தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீ
ணெறியாரே தெரிந்து செய்யும்
தன்வினை தன்னைச்சுட வோட்டப்பம் வீட்
டைச்சுடவுந்தான் கண்டோமே
பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுப்பதற்கு மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும்கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்பது இப்பாடலின் கருத்து.
தென்னவன் - பாண்டியன், சோழன் ஆகிய முடிவேந்தர்கள் தண்டலை நீள்நெறியாரை வழிபடுகிறார்கள். சேரன் இதில் கூறப்படவில்லை.
இதில் வரும் பழமொழி:
'தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'.
இந்தப் பழமொழிக்குப் பின்னணியாக ஒரு கதை உண்டு.
பட்டினத்தார் தம்முடைய மகனாக வந்த மருதவாணர், ஒரு ஓலைமுறியில் 'காதற்றவூசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று எழுதி, உடன் ஒரு காதற்ற ஊசியையும் வைத்துக் கொடுக்கச் செய்தபின்னர் எல்லாவற்ரையும் விட்டுவிட்டு துறவியாக மாறினார்.
ஆரம்பத்தில் அவர் அதே ஊரில் இருந்துகொண்டு ம்ண்டபங்களில் தங்கியும் வீடுவீடாகப் பிச்சையெடுத்தும் திரிந்தார்.
அந்த ஊரில் தனவணிகர்கள் மிகவும் செல்வாக்காக இருந்தனர். அவர்களிடையே பெரும் வணிகராக பல கப்பல்கள், வணிகச்சாத்துக்கள் ஆகியவற்றுடன் பெரும் செல்வந்தராக விளங்கியவர் பட்டினத்தார். அவர் குபேரனுடைய அவதாரம் என்றும் சொல்வர்.
அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது அவருடைய உறவினர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
குறிப்பாக அவருடைய தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை.
தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்களும்கூட தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு சம்பந்தத்தையும் தட்டிக் கழித்துவிட்டனர்.
ஆகவே பட்டினத்தாரைக் கொன்றுவிட தங்கை திட்டம் போட்டாள்.
ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள்.
அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள்.
அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது.
உடனே, "தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார். உடனேயே வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து அந்தப் பழமொழி ஏற்பட்டது.
--------------------------
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
இணையத்தில் இருந்து எடுத்தது
Image may contain: one or more people
1

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,