ரமணமகரிஷி (33)
ரமணமகரிஷி (33)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 33
பகவான் ஸ்ரீரமணர் குறித்தான தொடர் 33
பகவான் ஸ்ரீ ரமணரின் தரிசனம் வேண்டுபவருள் ஹம்ப்ரீஸ் என்பவரும் ஒருவர். வேலூரில் இவர் போலீஸ் அதிகாரியாக இருந்த மேல்நாட்டுக்காரர். பகவானிடம் அவருக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் நரசிம்மய்யா என்பவர்.
ஹம்பரீஷ் ஒரு முறை ஆசிரமத்துக்கு வந்த போது நல்ல வெயில் நேரம்,பகவான் ரமணர் அவரைப் பார்த்ததும் நீ இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாயா என்றார், ஆம், என்பதற்கு அறிகுறியாக தலையசைத்தார் வந்தவர்.
பகவான் உடனே ஒரு சீடனை அழைத்து விருந்தாளிக்கு சாதம்,சாம்பார் நெய்,பழம் கொடுக்கச் சொன்னார். வந்திருப்பவர் கையால் பிசைந்து சாப்பிடத் தெரியாது என்பதை மனதில் கொண்டு மரத்தாலான ஸ்பூன் கொடுக்கச் செய்தார். சாப்பிட்டு முடித்ததும் இளநீரை கண்ணாடி கோப்பையில் இட்டு தன் கைப்பட சர்க்கரை கலந்து கொடுத்தார். சாப்பிட்ட பிறகும் விருந்தாளிக்கு பசி அடங்கவில்லை என்பதறிந்து கூடுதலாக பழங்களும் தந்தார்.
ஹம்பரீஷ் தாக வறட்சியிலிருந்து மீளவில்லையென தனது முகக் குறிப்பால் உணர்ந்த பகவான் எலுமிச்சை பானம் தயாரித்து வழங்க செய்தார்.
பெற்ற தாய் கூட பிள்ளைகளை இவ்வளவு துல்லியமாக உணர்ந்து கொண்டிருக்க முடியாது.
பகவான் ஸ்ரீ ரமணர் எப்போதும் சாப்பாட்டிலும் சமத்துவம் காட்டுகிறவர். அடுத்தவருக்குப் பரிமாறப்படாத ஒன்றை தாம் மட்டும் உண்ணுதல் செய்யார். தாயிற் சிறந்த தயாபரன். என்ற நேரத்தில் விருந்தினர் வந்தாலும் அவருக்கு ஏதேனும் உண்ணத் கொடுக்கும்படி தம் சீடர்களிடம் பணிப்பார்.
அதே போலத்தான் ஹம்பிரிஷ் என்பவருக்கும் உணவும் பானமும் வழங்கியது.
ஹம்பரிஸ் அதற்கு முன் ஒரே முறை தான் ஆசிரமத்திற்கு வந்து இருக்கிறார் நூற்றுக்கணக்கானவர்கள் இடைப்பட்ட காலத்தில் அங்கே வந்ததுண்டு. ஆயினும் ஒரு முறை பார்த்தவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் பகவானுக்கு உண்டு.
ஹம்பரீஷ் உள்ளே நுழையும்போது முகம் மலர வரவேற்றார். அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாசல் வரை சென்று மீண்டும் வா என்றபடி விடை கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் வந்தவர் இருபத்தொரு வயது கொண்ட இளைஞர்.
ஆசிரமம் தொடங்கிய நாளிலிருந்து அன்னதானம் வழங்க தவறியதில்லை. அதிலும் ஜெயந்தி ( பகவானின் பிறந்த நாள்) என்றால் கூட்டம் நிறைந்து விடும்.
ஒரு ஜெயந்தி விழாவின் போது கையிருப்பில் போதுமான சாமான்கள் இல்லை. நாளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலைப்பட்டார் நிரஞ்சனானந்தர். அப்போது பகவான் என்ன தூக்கம் வரலையா என்று விசாரித்தார்.
நிரஞ்சனானந்தர் எழுந்து பயபக்தியுடன் விடிஞ்சா ஜெயந்தி விழா. பலசரக்கு சாமான்கள் கொஞ்சமாருக்கு எப்படி சமாளிக்கிறது, அதான் புரியவில்லை என்றார்.
பகவான் லேசாக சிரித்தபடி இதற்காகவா கவலைப்படறே எல்லாம் நல்லபடியாக நடக்கும் நிம்மதியா தூங்கு என்று சொல்லி விட்டுப் போனார். நிரஞ்சனானந்தர் "பகவான் பார்த்துக்கொள்வார்" என்று கவலையற்றவராய் தூங்கினார்.
அன்று நள்ளிரவில் ஒரு லாரி வந்து நின்றது. அரிசி பருப்பு மற்ற சாமான்கள் இறங்கின. யாரோ ஒருவர் சென்னையிலிருந்து அனுப்பியதாக தகவல். மறுநாள் ஜெயந்தி விழா அமர்க்களமாக நடந்தது.
சில நாள் கழித்து சென்னை அன்பர் ஆசிரமத்திற்கு வந்தார். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல நீங்க அனுப்பின சாமான்கள் பகவானின் ஜெயந்தி விழாவுக்கு ரொம்ப பலனாக இருந்தது என்று நிரஞ்சனானந்தர் உவகையுடன் தெரிவித்துக் கொண்டார்
நானா சாமான்கள் அனுப்பினேனா! இல்லையே ஜெயந்திக்கு வரமுடியாமல் போச்சேன்னு ஆதங்கத்தோடு இப்பத்தான் வருகிறேன். என் பெயரில் சாமான்கள் வந்ததா
வியப்பும், திகைப்புமாய் கேட்டார் வந்தவர்.
ஜெயந்திக்கு சாமான்கள் அனுப்பியது யார்? அது அந்த பகவான் ஸ்ரீரமணருக்கு மட்டுமே அறிந்த ஒன்று.
Comments