வி.குமார்

 ”மெல்லிசை மாமணி” வி.குமார் நினைவு நாள் இன்று ஜனவரி 7





இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம். 28.7.1934-இல் பிறந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்திவந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
மாநில கணக்காயர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனந்த சயனம் என்ற நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசை அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.
நீர்க்குமிழி நாடகத்தைப் படமாக்க, அதன் கதையை கே.பாலசந்தரிடமிருந்து ஏ.கே.வேலன் வாங்கியிருந்தார். கதையைப் பற்றி விவாதிக்க, பாலசந்தர் வேலனைச் சந்திக்கப் போவார். அவருடன் இவரும் அடிக்கடி உடன் செல்வார். திடீரென்று ஒரு நாள் பேச்சுவாக்கில் திரு.ஏ.கே.வேலன், இந்தப் படத்திற்குக் குமாரையே இசை அமைக்கச் சொன்னால் என்ன என்று கேட்டார். ’நீர்க்குமிழி’ நாடகத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார். இதைக் கவனத்தில் கொண்டுதான் வேலன் பாலசந்தரிடம் கேட்டார். ‘பாலசந்தர் அப்படியே செய்யலாம் என்றார்’. அவ்வாறு நீர்க்குமிழி இவருக்கு முதல் படமானது.
‘”நீர்க்குமிழி”யில் மூன்றே பாடல்கள்தான். மூன்றுமே வெவ்வேறு விதங்களில் நன்றாக அமைந்துவிட்டன. முதலிடம் பெற்றது ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’; ’கன்னி நதியோரம் வண்ண விழிமேடை’ என்ற ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய பாடல் இளமைத் துள்ளலுடன் வரும் காதல் பாடல். மேற்கத்திய பாணியைச் சேர்ந்த மெட்டு. ‘நீரில் நீந்திடும் மீனினமே’ என்ற பெண்மையின் கண்ணியமான குரலாக ஒலிக்கும் சுசீலாவின் பாடல்.வி.குமார் 1978-இல் இசையமைத்த ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தில் பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு என்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய நேயர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தே நிமிடங்களில் இவரது மெட்டுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார் என்பது விஷேட அம்சம்.இப்பாடலை இப்போதும் அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பி வருகிறது.

இதைத் தொடர்ந்து வி.குமாருக்கு ஏறுமுகம். 150 தமிழ்ப் படங்களுக்கும் 5 தெலுங்குத் திரைப்படங்களுக்கும் இசை அமைத்தார். இவரது மனைவி சொர்ணாவும் ஒரு பின்னணிப்பாடகி. இவருக்கு ஒரு மகன் சுரேஷ்குமார். அமெரிக்காவில் உள்ளார்.
7.1.1996 அன்று தனது 61-ஆவது வயதில் இவர் காலமானார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,