எம்.ஜி.ஆர்., விரும்பிக் கொண்டாடியது பொங்கல்
நடிகராக இருந்த போதும், முதல்வரான பிறகும், எம்.ஜி.ஆர்., விரும்பிக் கொண்டாடியது பொங்கல் பண்டிகையைத்தான்.அன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்வார்.
அன்று, தன்னைப் பார்க்க எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் முகமலர்ச்சியுடன் சந்தித்து, பரிசுப்பணம் அளித்து சந்தோஷப்படுத்துவார். எம்.ஜி.ஆருடன் பொங்கல் பண்டிகை அனுபவம் பற்றி, அவரிடம் உதவியாளர்களாக இருந்த சாமிநாதன், மகாலிங்கம் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் அலாதியானது.அவர்கள் கூறியதாவது:புத்தாண்டு, தீபாவளியை மட்டும் அல்ல, தன் பிறந்த நாளைக்கூட கொண்டாடாதவர், எம்.ஜி.ஆர்., தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால், சின்னதாய் சிரிப்பார். அதே போல, ஜனவரி 17ல் அவரது பிறந்த நாளை, அவர் இருந்தவரை கொண்டாடியது இல்லை. முதல்வரான பிறகு, புத்தாண்டில் அதிகாரிகளை சந்திப்பது மரபு என்பதால். சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்.
ஆனால், பொங்கல் பண்டிகையை எப்போதுமே உற்சாகமாக கொண்டாடுவார்.நடிகராக இருந்த போது ராமாவரம் தோட்டம், சத்யா ஸ்டூடியோ, இப்போது அ.தி.மு.க., தலைமை அலுவலகமாக உள்ள சத்தியபாமா திருமண மண்டபம், திருநகர் கட்சி அலுவலகம் என, எல்லா இடத்திலும், அனைத்து தரப்பினரையும் எம்.ஜி.ஆர்., சந்திப்பார். அதற்கு முன், முதல் காரியமாக, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை, பொங்கலன்று காலையிலேயே சந்திப்பார். இதற்காக, ராமாவரம் தோட்டத்திற்கு குடும்பத்தோடு நாங்கள் போய்விடுவோம். எல்லாருக்கும் நல்ல துணிமணிகளுடன், நிறைய பணமும், உணவும் தந்து உபசரிப்பார்.
குடும்பத்தார் அனைவரிடமும் அன்பாக பேசுவார். எங்கள் குடும்பத்தில் பலரும், அவரது புண்ணியத்தில்தான், பட்டு வேட்டி சேலையை பார்த்தோம்.சத்தியபாமா திருமண மண்டபத்தில், இன்னும் உற்சாகமாக இருப்பார். ஊழியர்களுக்கு, சாக்கு போட்டி, ஸ்பூன் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்விப்பார்.இதே போல ஸ்டூடியோ, தி.நகர் கட்சி அலுவலகம் சென்று, அங்குள்ளவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவார்.எங்கே போனாலும், எம்.ஜி.ஆரை காண மக்கள் திரண்டுவிடுவர். அவர்களையும் அருகில் அழைத்துப் பேசுவார். அவரைப் பொறுத்தவரை கையில் பணம் இருந்தால், அதை பரிசளித்து செலவிடும் வரை துாங்கமாட்டார் என்றே சொல்லலாம்.
Comments