தஞ்சை ராமையாதாஸ்
காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்
தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆனவர் தஞ்சை இராமையாதாஸ். ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா" பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்" பாடலும் தருவார்.
காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்" படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா"வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்" படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடலும் தருவார்.
புரியாத மொழியில் 'ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா" பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே" பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி" படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.
இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் 1965-ஆம் ஆண்டு இதே ஜனவரி 16-ஆம் தேதி காலமானார்
Comments