திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன்
மறைந்த தினமின்று:*************************************
கரிய நிறம், மெலிந்த உடல், குழிவிழுந்த கண்கள், இந்தத் தோற்றத்திற்குள் அத்துணை வீரமா என்று நம்மை வியக்க வைக்கிறது.
கோவை மாவட்டம், ஈரோடு தாலுகாவில் உள்ள சென்னிமலை என்ற சிறு நகரத்தில் பிறந்தவர் திருப்பூர் குமரன். அந்த ஊரில் ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி குமரன் பிறந்தார். தந்தையார் பெயர் நாச்சிமுத்து முதலியார். தாயாரின் பெயர் கருப்பாயி.
குடும்பத்திலுள்ள வறுமையின் காரணமாக குமரனின் கல்விப்படிப்பு 5-ம் வகுப்போடு முடிந்துவிட்டது.
பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் குமாரசாமி. அவர் விடுதலைப் போரில் ஈடுபட்டு அமரர் ஆன பிறகு, குமரன் என்று மாறியது. குமரன் நல்ல அறிவும், புத்தி கூர்மையும், சுறுசுறுப்பும் உடையவர். பட்டுச் சேலை நெய்வதில் வல்லவர்.
1923-ம் ஆண்டு குமரனுக்கு வயது 19. அந்த வயதில் 14 வயதுடைய இராமாயி என்னும் பெண்ணைத் திருமணம் முடித்தார்.
காந்தியார் நெறியைப் பின்பற்றியே எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தார்.
குமரன் எப்பொழுதும் சுத்தக் கதராடையையே உடுத்தி வந்தார். ஒவ்வொரு நாளும் கைராட்டையில் நூல் நூற்று வந்தார். தமது மனைவி இராமாயியையும் நூல் நூற்கும்படி செய்து, அதிலும் வெற்றி கண்டார்.
குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து வந்தார். குழந்தைகள் இல்லை என்ற குறை தெரியாமல் வாழ்ந்தனர்.
1932 ஜனவரி 10 சட்ட மறுப்புப் போராட்டத்தில் குமரன் கலந்து கொண்டார். அவருடைய தந்தை இறந்து ஆறு மாதங்கள் கூட முடியவில்லை. அன்று நடக்க இருக்கும் போராட்டத்தின் காரணமாகவே அவருடைய அருமை மனைவியைப் பள்ளிப்பாளையம் அனுப்பிவிட்டார்.
குமரனின் தாயார் கருப்பாயி போராட்டத்தில் கலந்து கொள்ளாதே என்று தன் மகனை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார் முடியவில்லை. அதற்கு குமரன் ""நீங்கள் எல்லாம் வீட்டைப் பற்றி நினைக்கின்றீர்கள். நான் நாட்டைப் பற்றி நினைக்கிறேன். வீட்டை நினைப்பவர்கள் நாட்டை நினைக்க முடியாது. நாட்டை நினைப்பவர்களால் வீட்டை நினைக்க முடியாது.''
போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக 9-ம் தேதி இரவு உறவுக்காரப் பெரியவர்களின் வீடுகளுக்குச் சென்று குமரன் வாழ்த்துப் பெற்றார். நெருங்கிய நண்பர்களையெல்லாம் சந்தித்து விஷயத்தைச் சொல்லி அவர்களின் அன்பான வாழ்த்துகளைப் பெற்றார்.
சலவைத் தொழிலாளியைச் சந்தித்து அவருக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்தார்.
1932- ஜனவரி 10-ம் தேதி அதிகாலை 6 மணி அளவில் தேசபந்து வாலிபர் சங்க உறுப்பினர்கள் 9 பேர்கள் தலையில் கதர் குல்லாவுடனும், கையில் இராட்டை கொடியுடனும் காத்திருந்தார்கள். சரியான நேரத்துக்குப் பயணம் தொடர்ந்தது. சாலையின் இருபக்கங்களிலும் இருந்த கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
போலீஸ் ஸ்டேஷன் அருகில் சென்றதும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் 30 போலீஸ்காரர்களும் இவர்களை நோக்கி வந்தார்கள். முன் வரிசையில் குமரனும் ராமன்நாயரும் சென்று கொண்டிருந்தார்கள். ஓடி வந்த போலீஸ்காரர்கள் குமரனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கினார்கள்.
இரும்புப் பூண் போட்ட போலீஸ்காரரின் தடி ஒன்று குமரனின் இடது புறம் காதுக்கு மேலே மண்டையைப் பிளந்தது. கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம் போவது சட்ட விரோதமாகும் என்று காவல் துறையின் முன் அறிவிப்பு எதுவும் இல்லை. ஊர்வலம் செல்வதற்குத் தடை விதித்திருக்கிறோம், அதனால் கலைந்து செல்லுங்கள் என்றும் காவல்துறை இவர்களுக்கு அறிவிக்கவில்லை.
வேறு எதுவுமே சொல்லாமல் அவர்களைக் கண்டபடி அடிக்கத் தொடங்கினார்கள். முதல் அடி குமரனின் தலையில் விழுந்தது. மொத்த காவல் துறையினரும் குமரனையே குறி வைத்துத் தாக்கினார்கள். மாறி மாறி விழுந்த அடியில் குமரனின் மண்டை பிளந்து, இரத்தம் பீறிட்டு அடித்தது.
அதன் பிறகு குமரன் மயக்கமுற்று கீழே விழுந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குமரனின் கையில் இருந்த கொடியை ஒரு போலீஸ்காரன் பிடுங்கி வீதியில் எறிந்தான்.
வேடிக்கை பார்த்த கூட்டமெல்லாம் இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் இருக்குமிடம் தெரியாமல் ஓடி ஒளிந்தது.
1932 ஜனவரி 11-ம் தேதியன்று குமரன் மறைந்தார். குமரன் இறந்த பிறகு தான் பள்ளிப்பாளையத்தில் இருந்த மனைவிக்கு செய்தி தெரிந்தது.
ஒரு துப்பட்டாவால் தூளி ஒன்று செய்து அதில் குமரனது சடலத்தை வைத்து ஒரு மூங்கில் கழியை அத்தூளியில் நுழைந்து இரண்டு பேர் மட்டுமே மயானத்திற்கு தூக்கிச் சென்றனர். அதுவும் மக்கள் நடமாட்டம் இல்லாத சந்து பொந்துகளின் வழியாகவே தூக்கிச் சென்றனர். தூக்கிச் சென்ற நேரம்கூட யாருக்கும் தெரியாது
Comments