ஓய் கிழவா|திருவள்ளுவர் தின கவிதை/இன்றைய Nynarin Unarvugal

 இன்றைய   Nynarin Unarvugal

திருவள்ளுவர் தின கவிதை. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு என் சிந்தனையில் மலர்ந்த கவிதை வரிகள்.

நீ...
இரண்டடியில்..
வசித்ததை
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக..
வாசிக்கிறோம்.
ஏழு வார்த்தையை
எட்டாவது அதிசயமாய்
வியக்கப் பார்க்கிறோம்.
அறம் சொல்லி..
பொருள் தந்து
காமக்கலையூட்ட..
நீ தந்த முப்பாலில்
நாங்கள்...
தேனெடுக்கிறோம்
திணையெடுக்கிறோம்
தினவும் எடுக்கிறோம்.
உன் குரல்..
திருக்குறளாய்
விண்ணைத் தொட்டதும்
வனம் வசப்பட்டது
வானம் வசியப்பட்டது
நிலவோடு..
நட்சத்திரங்களை
வைத்துக்கொண்டு
பல்லாங்குழி ஆடுவது போல்
நீ...
எம் தமிழோடு
நெறிகளை வைத்துக்கொண்டு
நர்த்தனமாடியதை
உலக மொழிகளெல்லாம்
கண்டு களித்தது
உன் சமையலை
மையலோடு..
தன் மொழியில்
உண்டும் களித்தது.
நீ தந்த..
ஆயிரத்து முன்நூற்றிமுப்பது
முத்துக்களால்..
எங்கள் தன்மானத்தின்
எடை கூடியது
சன்மார்க்க நெறியென
உலகம்..
தமிழனின் நடையில்
விடை தேடியது.
இரண்டடுக்கில்..
மேலே நான்கு அறையும்
கீழே மூன்று அறையுமாய்
நீ கட்டிய வீடுகள்
பெருங்குடியிருப்பு மட்டுமல்ல
அவை..
ஏழைகளின் மெக்கா
எளியவர்களின் காசி
பாட்டாளிகளின் பெத்லகம்.
என்னதான் நான்
நவரசம் காட்டினாலும்
பரவசப்படுத்தும்
என் கவிதைகள்
முத்துக்குளிப்பது
கிழவா..
உன் மூன்றாம் பாலில்தான்.
ஆறறிவின் கர்வம்
செம்மொழியின் சர்வம்
விளங்க முடியா கதையை
விளக்க வந்த கவிதை நீ
வாசுகியின் காதலன்
வாசகர்களின் தந்தை
வாழ்ந்து வளரும் விந்தை நீ
பைந்தமிழ் புலவனை
பச்சைத் தமிழ் உழவனை
போற்றி புகழும்
நன்நாளில்
வள்ளுவனே..
செருக்கோடே கேட்கிறேன்
தமிழுக்கு பெயர்
அமுதென்று சொல்லவா
திமிரென்று சொல்லவா.
💪💪💪💪💪💪💪💪
இக்கவிதையை என் குரல் வழியே யுடியூப் காணொளியில் கேட்க
NYNARIN UNARVUGAL.


video link


Nynarin Unarvugal

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,