ஞாயிறு திரை மலர் 14.02.2021

     ஞாயிறு திரை மலர்  14.02.2021

---------------------------------------------------------------------------------------------------------டி.ராஜேந்தர் இயக்கிய முதல் படம், `ஒருதலை ராகம்’ (1980). கதையையும் தாண்டி இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கக் காரணமாக அமைந்தது, படத்தில் இருந்த புதுமுகங்கள். ஏனெனில், நடித்த நடிகர்கள், கேமராமேன், இயக்குநர் எனப் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குப் புதிதாக அறிமுகம் ஆனவர்கள். `ஒருதலை ராகத்து’க்குப் பிறகு அத்தனை நடிகர்களும் பின்னாளில் மக்களிடையே பிரபலமானார்கள். இந்தப் படத்தில் நடித்த நடிகை ரூபாவிடம் பேசினோம்.
உங்கள் முதல் படம், நண்பர்கள், சக்சஸ்?
ஹய்யோ… அந்த நாள்களை இப்போ நினைச்சுப் பார்த்தாலும் உடம்பு சிலிர்க்கும். எப்படி அது சாத்தியமாச்சுனு இப்போவும் ஆச்சர்யமாகப் பார்க்கிறேன். முதல் படம் எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. படம் ஹிட் அடிக்குமானு யாரும் யோசிக்கலை. கொடுத்த வேலையைப் பக்காவா செய்தோம். ஷூட்டிங் நேரம் தவிர மற்ற நேரங்கள் அரட்டைதான். லன்ச் டைம் செம்ம காமெடியாப் போகும். மாயவரத்தில் இருந்த ஒரு காலேஜ்லதான் `ஒருதலை ராகம்’ படத்தை ஷூட் பண்ணாங்க. நாங்க தினமும் காலேஜ் போற மாதிரிதான் ஷூட்டிங் போனோம். எந்தப் பந்தாவும் கிடையாது. அவ்வளவு நல்ல நாள்கள் அதெல்லாம்!
மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது இருக்கா?
நிறைய உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வுகள் நடக்கிறதுண்டு. `ஒருதலை ராக’த்தைப் பொறுத்தவரை என்னால் இப்போவும் நம்பமுடியாத மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. படத்துக்காகப் பூஜை போடுவதற்கு ஐயர் ஒருத்தர் வந்திருந்தார். பொதுவாக எல்லாப் படத்துக்கும் நல்லபடியாகப் படம் முடிந்து, நல்லா ஓடணும்னு சொல்லி ஆசீர்வதிக்கிறதுண்டு. ஆனால், அந்தப் படத்துக்கு பூஜை செய்தவர், `படம் சூப்பர் ஹிட் ஆகி, கோடி கோடியாகப் பணம் வரணும்’னு சொன்னார். `யார் இவர்? இப்போதான் எல்லோரும் அறிமுகம் ஆகுறோம். படம் எப்படிப் போகும்னு தெரியலை. அதுக்குள்ள கோடி கோடியா வசூலிக்குமாம்’னு சொல்லிக் கிண்டல் பண்ணோம். படம் ரிலீஸானப்போ, நான் ஊட்டியில இருந்தேன். போன் மேல போன். படம் சூப்பர் ஹிட்னு சொன்னப்போ, இந்தப் படத்துக்குப் பூஜை போட்டவர்தான் நினைவுக்கு வந்தார்.
டி.ஆர் மற்றும் அந்தப் படத்தில் தோழியாக நடித்த உஷா இருவரிடையேயான நட்பு?
“உஷா எனக்கு ரொம்ப நெருக்கம். படத்துல நடிக்கும்போதே எங்க இரண்டு பேருக்குமான நட்பு ஸ்ட்ராங்கா இருந்தது. அந்தப் படத்துக்குப் பிறகுதான் டி.ராஜேந்தரும் உஷாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. `ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே இருந்த நட்பு இப்போவரை தொடருது. அவங்க குடும்ப விழாக்களுக்கு என்னைக் கூப்பிடுவாங்க. ஆனா, அவங்க குழந்தைகள்கிட்ட அதிகம் பேசினது கிடையாது. தமிழ்த் திரையுலகின் சிறந்த ஜோடினு அவங்களைச் சொல்லலாம்.
தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்கவில்லையே ஏன்?
அதுக்குத் தடையாக இருந்தது, `ஒருதலை ராகம்’ போன்ற படங்கள்தாம். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சேலைகட்டி பவ்யமான பெண்ணாக நடிச்சிட்டேன். அதனால, என்னை எல்லா ரசிகர்களும் அப்படியே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்தில் டான்ஸர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இயக்குநர்களும் எனக்கு ஹோம்லி கேரக்டர்களையே கொடுத்துட்டாங்க. கடைசிவரை தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்க முடியலையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. மற்றபடி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட எல்லா ரோல்களிலும் நடிச்சிருக்கேன்.
உங்கள் குடும்பம், கரியர்?
இப்போது, கன்னட சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். கூடவே, படங்களும் பண்ணிட்டு இருக்கேன். மகன் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கார். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், எங்க வாழ்க்கை ரொம்ப திருப்தியாப் போயிட்டு இருக்கு” என்கிறார் சந்தோஷம் பொங்க!
இணையத்தில் இருந்து எடுத்தது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோலிவுட்டில் 5 முன்னணி பிரபலங்களுடன் மல்லுக்கட்டிய இளையராஜா.. இதுவரை வெளிவராத உண்மைகள்!
இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுபவர் இளையராஜா. இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இசையால் வசியப்படுத்தி வைத்துள்ளார். இத்தகைய பெருமைக்குரிய இளையராஜா ஐந்து முன்னணி சினிமா பிரபலங்களுடன் காரசாரமாக சண்டையிட்டுள்ளாராம்.
கங்கை அமரன்: இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன், தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் இயக்குனராகவும், திறமைசாலியாக இருந்தாலும், இளையராஜாவின் முழு வரவு செலவையும் பார்த்து வந்துள்ளார். சொல்லப்போனால் இளையராஜா கோபுர உச்சமடைய இவரும் ஒரு காரணம் என்பதால் சண்டை ஏற்பட்டுள்ளது.
வைரமுத்து: முதல் மரியாதை படத்திற்கான பாடல் பதிவின் போது கரெக்சன் சொன்ன வைரமுத்துவிடம் பாட்டே தப்பு என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு உள்ளார் இளையராஜா.
மணிரத்தினம்: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக திகழ்ந்த மணிரத்தினம் படத்திற்கு தொடர்ந்து இசையமைத்துள்ளார் இளையராஜா. அதனால் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தின் பாடல்களை இசையமைக்கும் போது, பாடல் கதைக்கு செட் ஆகவில்லை என சொன்னதற்கு மணிரத்னத்துடன் சண்டையிட்டு உள்ளார் இளையராஜா.
ஏஆர் ரகுமான்: அஞ்சலி படத்தில் மணிரத்தினத்திற்கு இளையராஜாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய படங்களில் ஏஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தியதால், ஏஆர் ரகுமானின் மீது இளையராஜா சண்டையிட்டுள்ளார். ஏ ஆர் ரகுமான் இளையராஜாவின் சிஷ்யன் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் இளையராஜாவின் ஆருயிர் நண்பனாக திகழ்ந்தவர் பாரதிராஜா.
எஸ்பி பாலசுப்ரமணியம்: முன்னணி பின்னணி பாடகரான எஸ்பிபி – இளையராஜாவிற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதன் பின்புதான் இளையராஜா எஸ்பிபி-யை புறக்கணித்துவிட்டு மலேசியா வாசுதேவனை அறிமுகப்படுத்தினார். அதன்பின் எஸ்பிபி-யை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான வாய்ப்புகளை மலேசியா வாசுதேவனுக்கே இளையராஜா கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இவர்கள் அனைவரும் இளையராஜாவிற்கு நெருங்கியவர்கள் என்றாலும் கருத்து வேறுபாட்டினால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் இளையராஜா ஈடுபட்டது உண்டு
PUBLISHED BY
ஹாஷினி
நன்றி: சினிமா பேட்டை

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விசாகப்பட்டணத்தில் அவர் ‘சங்கராபரணம்‘ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘மறுபடியும் கணேஷ்‘ படித்துவிட்டு, அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்டு அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.
பெங்களூருக்கு அவர் ‘கோகிலா‘ படம் எடுக்க வந்திருந்தபோது, கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார். மூவரும் நிறையப் பேசினோம்.
பின்னர், ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘வை பாலு மகேந்திரா எடுப்பதாக, நடராஜன் (பிற்பாடு பிரமிட்) தயாரிப்பதாக, காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது. திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார். ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை
பாலு அதற்குப் பதில் ‘மூடுபனி‘ எடுத்தார். பின்னர், பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை எழுத, அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம். அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது. ஓரளவுக்கு பாலு மகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள் பத்தையும், ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார். சற்றே சமாதானமானோம்.
எழுத்தாளர் சுஜாதா
இணையத்தில் இருந்து எடுத்தது
May be an image of 1 person and text
11
======================================================

சுருளிராஜனால் மறக்க முடியாத நூறு ரூபாய் நோட்டு
நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் போல மிகவும் வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர் நகைச்சுவை நடிகரான சுருளிராஜன். எந்த சினிமா பின்னணியும் இன்றி சினிமா உலகிற்குள் நுழைந்த சுருளிராஜன் 1980-ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். இந்தச் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாத ஒன்று.
மதுரையில் நடைபெற்ற அமெச்சூர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய சுருளிராஜனின் வசனம் பேசுகின்ற பாணியும், அவரது கீச்சுக் குரலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதைக் கண்ட அவரது நண்பர்கள் அனைவரும் “முயற்சி செய்தால் நீ நிச்சயம் சினிமாவில் பெரிய ஆளாக வரலாம்” என்று அவரிடம் கூறினார்கள்..
அதுக்கு பிறகும் மதுரையில் இருக்க சுருளிராஜனின் மனம் ஒப்புக் கொள்ளுமா..?
சினிமா வாய்ப்பு தேடி 1959-ம் ஆண்டு சென்னைக்கு வந்த சுருளிராஜன் ‘அய்யா தெரியாதய்யா’ ராமராவின் நாடகக் குழுவில் இணைந்தார் . “நான் ஒரு நகைச்சுவை நடிகனாக வெளியே தெரிந்ததற்கு முக்கிய காரணம் ராமாராவ் அவர்கள்தான். அவருடைய நாடகத்தில் நல்ல வாய்ப்பை வழங்கி எனது முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் அவர்தான் ” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் மனம் திறந்து ராமாராவ் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் சுருளிராஜன்.
சுருளிராஜனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் காரணமாக இருந்த இன்னொருவர் கதாசிரியரும் இயக்குநருமான டி.என்.பாலு.
சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோரது படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்குகின்ற வாய்ப்பை 1970-80-களில் பெற்ற டி.என்.பாலுதான் ஜெய்சங்கர் அறிமுகமான ஜோசப் தளியத்தின் ‘இரவும் பகலும்’ படத்தின் கதாசிரியர்.
தான் எழுதி இயக்கி, நடித்த ‘நினைக்கவே இல்லை’ எனற நாடகத்திற்கு இயக்குநர் ஜோசப் தளியத்தை அழைத்திருந்தார் டி.என்.பாலு. அந்த நாடகத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சுருளிராஜனின் நடிப்பும், அவர் வசனங்களைப் பேசியவிதமும்… ஜோசப் தளியத்துக்கு மிகவும் பிடித்து போனது.
சுருளிராஜனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகளைத் தரவேண்டும் என்று அன்றே முடிவு செய்து விட்டார் அவர். ஆனால் அவர் அப்போது இயக்கி கொண்டிருந்த ‘இரவும் பகலும்’ படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் நட்சத்திரத் தேர்வு முடிந்துவிட்டு இருந்ததால் அந்த படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில்தான் சுருளிராஜனை அவரால் பயன்படுத்த முடிந்தது.
1965-ம் ஆண்டு பொங்கலன்று வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் மட்டுமின்றி, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருந்தார் சுருளிராஜன்
‘எங்க வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் துணை நடிகர்கள் பட்டியலில் ‘சுருளி’ என்று அவர் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், ‘இரவும் பகலும்’ பட டைட்டிலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.
‘இரவும் பகலும்’ படத்தில் சரியான முறையில் சுருளிராஜனை பயன் படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் ஜோசப் தளியத்திற்கு இருந்ததால் தனது அடுத்த படமான ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சுருளிராஜனை நடிக்க வைத்தார்.
அந்தப் படத்தில் நடிக்க முன் பணமாக நூறு ரூபாய் நோட்டு ஒன்றை சுருளிராஜனிடம் கொடுத்தார் ஜோசப் தளியத். ஒரு நகைச்சுவை நடிகருக்கு முன் பணம் நூறு ரூபாய்தானா என்று நீங்கள் ஆச்சர்யப்பட ஆரம்பிப்பதற்கு முன்னால், சுருளிராஜனை அந்த நோட்டு படுத்திய பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அந்த நோட்டை கையில் வாங்கியவுடன் சுருளிராஜனுக்கு ஏற்பட்ட பிரமிப்பு அடங்க ரொம்ப நேரம் ஆனது. ஏனென்றால் நூறு ரூபாய் நோட்டு என்று ஒன்று இருக்கிறது என்று அவருக்குத் தெரியுமே… தவிர, நூறு ரூபாய் நோட்டை அதுவரை அவர் கண்ணால் பார்த்ததேயில்லை.
அதிசயமாக அந்த நோட்டையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் பய பக்தியோடு அந்த நோட்டை மடித்து தன பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். பின்னர் ஜோசப் தளியத்திற்கு மனதார நன்றி கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.
அந்த அலுவலகத்திலிருந்து அவரது வீட்டுக்கு செல்வதற்கு பஸ் டிக்கெட் எடுக்க அவரது கையில் சில்லறைக் காசு எதுவும் இல்லை. அந்த அலுவலகத்திற்கும் சுருளிராஜன் வீட்டுக்கும் இருந்த இடையில இருந்த தூரமோ பல மைல்கள்.
பையில் இருக்கிற நூறு ரூபாயை மாற்றினால் பஸ்ஸிலும் போகலாம், ஆட்டோவிலும் போகலாம். டாக்சியிலும் போகலாம். ஆனால், அதுக்கு நூறு ரூபாய் நோட்டை மாற்ற வேண்டும். அப்படி மாற்றிவிட்டால் யாரிடமும் அந்த நோட்டைக் காட்ட முடியாது என்பதால் அந்த நூறு ரூபாய் நோட்டை பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொட்டுப் பார்த்தபடியே பல மைல் நடந்து வீடு போய் சேர்ந்தாராம் அவர்.
அதற்குப் பிறகு லட்சக்கணக்கில் சுருளிராஜன் சம்பாதித்தார் என்றாலும் அந்த முதல் நூறு ரூபாய் நோட்டு அவரைப் பொறுத்தவரை மறக்க முடியாததாகிவிட்டது.
‘காதல் படுத்தும் பாடு’ படத்தைப் பொறுத்தவரையில் அது சுருளிராஜனுக்கு மட்டுமல்ல… பல பேருக்கு திரையுலகின் வாசல்களைத் திறந்து வைத்த படம்.
அந்தப் படத்தில்தான் கதாசிரியர் கலைஞானம் கதாசிரியராக அறிமுகமானார். வாணிஸ்ரீ தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். எஸ்.எஸ்.சந்திரன் நடிகராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய வெள்ளைச்சாமி படத் தொகுப்பாளராக அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான் .
‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் படத்தில் நடிப்பதற்கான அவரது ஊதியம் மொத்தத்தையும் வாங்கி செலவழித்துவிட்டார் சுருளிராஜன்.
கையில் சல்லிக்காசு இல்லாத நிலையில் நாடகம் நடத்தலாம் என்று அவர் வெளியூர் சென்றபோது, அங்கே ஒரு வாரம் கடுமையாக மழை பெய்தது. அதனால் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நாடகம் நடத்தப் போன அவரது எண்ணம் ஈடேறாதது மட்டுமல்ல… பொருளாதார ரீதியாக மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிய சூழலும் அவருக்கு ஏற்பட்டது.
சென்னைக்கு திரும்பவே பெரிதும் சிரமப்பட்டு ஒரு வழியாக சென்னை திரும்பிய சுருளிராஜனை அவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வாடகை பணத்தைக் கேட்டு விரட்டு விரட்டு என்று விரட்டினார். மதியம் சாப்பிடவே கையில் காசு இல்லை.. இந்த நிலையில் வாடகையை எங்கே கொடுப்பது..?
இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் பிரச்னைகள் சூழ்ந்ததால் விரக்தியின் எல்லைக்கே சென்றார் சுருளிராஜன். இனியும் சினிமா வாழ்க்கையை நினைத்துக் கொண்டு இங்கே இருக்க வேண்டுமா என்றெல்லாம் நினைக்க தொடங்கியது அவர் மனது.
அந்த நேரம் பார்த்து அவரது நண்பர் சிவராஜ் அவரைப் பார்க்க வர சோகத்தின் உச்சியில் இருந்த சுருளிராஜன் “இந்த வாழ்க்கை எனக்கு தேவைதானா?” என்று சலிப்போடு அவரிடம் கேட்டார். அவர் இப்படி கேட்டபோது அந்த சோகம் அந்த நண்பரை தொற்றிக் கொள்ளவில்லை. மாறாக அவரது முகத்தில் புன்னகை தோன்றியது
“நேராக ஜெமினி கார்னருக்கு ஒரு முறை போய் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை உனக்குத் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்” என்றார் நண்பர் சிவராஜ்.
“ஏன் அங்கே யாராவது ஜோசியம் சொல்றவங்க இருக்காங்களா?”
“அதெல்லாம் உனக்கு எதுக்கு? முதல்ல போய் பார்த்துட்டு வா.. அப்புறம் பேசு” என்றார் எந்த நண்பர்.
ஜெமினி கார்னருக்கும், தனது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாவிட்டாலும் நண்பர் சொல்கிறாரே என்பதற்காக ஜெமினி பகுதிக்கு நடந்தே சென்றார் சுருளிராஜன்.
அங்கு போய் பார்த்தவுடன் அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. தான் காண்கின்ற காட்சி நிஜம்தானா என்று கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தார். அது போதாதென்று தன் கையையும் ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டார். சுருளிராஜனை அப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளியது எது தெரியுமா..?
ஜெமினி கார்னரில் வைக்கப்பட்டிருந்த அவரது மிகப் பெரிய கட் அவுட்..
‘காதல் படுத்தும் பாடு’ படத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் அப்படி ஒரு முக்கியத்துவத்தை சுருளிராஜனுக்குத் தந்திருந்தார் ஜோசப் தளியத்.
அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் சுருளிராஜனின் கண்களில் இருந்து அவரையுமறியாமல் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. அவரது பசி பறந்து போனது. அதுவரை அவர் மனதில் இருந்த வேதனை எங்கே போனது என்று தெரியவில்லை.
சினிமாவில் இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்று அவநம்பிக்கையோடு இருந்த சுருளிராஜன், இனி சினிமாதான் தனது வாழ்க்கை என்று முடிவெடுத்ததிலே அந்த கட் அவுட்டுக்கு முக்கிய இடம் உண்டு. அதற்குப் பிறகு சுருளிராஜனின் வாழ்க்கையில் இறங்கு முகமே இல்லை.
நன்றி:டூரிங் டாக்கீஸ்
======================================================


நடிகர்கள் சிலர் கூடினால் அங்கு உற்சாகம் தாண்டவமாடும்.. அதுவே நகைச்சுவை மின்னல்கள் சந்தித்துக் கொண்டால்.. என்னாகும்.. அதேதான்!
நகைச்சுவை நடிகர் மனோபாலா, நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி.. இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அவதாரம் கொண்ட கங்கை அமரன் இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு பங்ஷனில் கூடிப் பேசியுள்ளனர்.
இவர்களோடு இணைந்தது இன்னொரு புயல்.. அதுதாங்க நம்ம வைகைப் புயல். வடிவேலுவும் இன்த சந்திப்பில் இணைய அந்த இடமே அல்லோகல்லப்பட்டுப் போய் விட்டதாம். பிறகென்ன மனோபலா டிவீட் போட்டு கொண்டாடி விட்டார்.
காத்திருக்காங்கண்ணே!
வடிவேலு நடிப்பைப் பார்க்க மக்கள் காய்ந்து போய்க் கிடக்கின்றனர். வாய்யா. வாய்யா என்று வாயார வரவேற்க அத்தனை பேரும் காத்திருந்தாலும் கூட மனுஷர் ஒரு படத்திலும் நடிக்காமல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியே இல்லாமல் இன்னும் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததைத்தான் ரசித்து வைக்க வேண்டியிருக்கிறது.
எப்பண்ணே வருவீங்க
மனோபாலாவும் வடிவேலுவும் இணைந்த படங்கள் எல்லாமே ஹிட்தான். இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. "உன்னையெல்லாம் போலீஸ் வேலைக்கு தப்பா எடுத்திட்டாய்ங்கே".. என்று மனோபாலா பாடியை தட்டி வடிவேலு சொன்ன வசனம் இன்னும் காதுக்குள் டொய்ங் டொய்ங்னு உலா போய்ட்டுதான் இருக்கு. இருவரும் இணையும் நாளை ரசிகர்களோடு சேர்ந்து மனோபாலாவும் எதிர்பார்த்திருக்கிறார் போல.. டிவீட்டில் தெறிக்கிறது அவரது உற்சாகம்.
யாரு வச்சிருக்கா!
கொரோனா காலத்துக் கொடுமைகளையெல்லாம் வடிவேலு பட காமெடிகளைப் பார்த்துதானே நாம கடந்து வந்திருக்கோம். இந்தப் போட்டோவைப் பார்த்ததும் பல மலரும் நினைவுகள்.. அவர்களிடமிருந்த அந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கான்னு கங்கை அமரன் ஸ்டைலில் கேட்டு பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடக்க வேண்டியதுதான்!
நன்றி: பிலிம் பீட் தமிழ்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


தெரு தெருவாக அலைந்தேன் - கவிஞர் தாமரை


வசீகரா’, ‘பார்த்த முதல் நாளே’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை’, ‘கண்கள் இரண்டால்’, ‘எங்கேயும் காதல்’ என இதமான மெட்டு களுக்குள் குளிர்காற்றாய்... கதகதப்பாய் வரிகளை ஏற்றும் கவிஞர் தாமரையை முதல் முயற்சிக்காக ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம்.
எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். சாதாரணக் குடும்பம். அரசுப் பள்ளிகளில்தான் தமிழ் வழிக் கல்வி படிச்சேன். அம்மா கண்ணம்மாள் தமிழாசிரியை. அப்பா சுப்பிரமணியன் கணித ஆசிரியர்.
சின்ன வயசுலயே பெற்றோர் நிறையப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அதிகம் விளையாடப் போக மாட்டேன். புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போ வானொலிதான் ஒரே பொழுது போக்கு. பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன்.
எட்டாம் வகுப்புல கவிதைகள் எழுத ஆரம்பிச்சிட்டேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சு பொறியியல் சேர்ந்தேன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் பத் திரிகைகளுக்கு கவிதை அனுப்ப ஆரம்பிச்சேன்.
அப்பவே படங்களுக்கு பாடல் எழுதணும்னு கொள்ளை ஆசை. ஆனால், அதற்கான முயற்சி செய்யலை. ஏனென்றால் நான், என் தங்கை, என் அண்ணன் எல்லாருமே பொறியியல் படித்துக் கொண்டிருந்தோம். என் பெற்றோர் ஒரு கட்டத்துல திணறிட்டாங்க. நான் உடனடியாக படிப்பை முடிச்சிட்டு வேலைக்குப் போக வேண்டியிருந்தது.
கல்லூரி இறுதித் தேர்வுக்கு முன்பே வேலை கிடைத்துவிட்டது. கொதிகலன்கள் செய்யக் கூடிய பெரிய தொழிற்சாலை அது.
இருபத்தியோரு வயசுல வேலைக்குச் சேர்ந்தேன். ஏழு ஆண்டுகளுக்கு அதே வேலைதான். அப்போதான் என் கதைகள்லாம் பிரசுரம் ஆச்சு.
இருபத்தியாறு வயசுல எனக்குத் திருமணம். என்னுடன் படித்தவர்தான். ரொம்ப சிக்கலான திருமணம்.
ஒரு சராசரி நடுத்தரவர்க்க இந்திய ஆண் எப்படி இருப்பாரோ அப்படித்தான் என் கணவரும். தான் தன் முன்னேற்றம் அவ்வளவுதான். மனைவி என்பவள் மனுசி இ ல்லை. காலையில் ஆறரை மணிக்கு நான் வேலைக்குக் கிளம்பணும். இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி மலுமிச்சம்பட்டிக்குப் போகணும். மாலை வீடு திரும்ப எட்டு, ஒன்பது மணி கூட ஆகும். கடுமையான வேலை. இத்தனை உழைச்சும் அதனால எனக்கு என்ன பயன்னே தெரியலை. கிட்டத்தட்ட சாவு வரைக்கும் என்னை இந்தத் திருமணம் கொண்டு போய் தள்ளிடுச்சு.
ஒரு கட்டத்துல இனி வாழ்க்கையில எனக்காக எதையாவது செய்தாகணும், அடுத்தவங்களை அனுசரிச்சு அனுசரிச்சு எல்லாத்தையும் இழந்துட்டோம்ன்னு முடிவு பண்ணி தைரியமா வேலையை உதறிட்டேன். பணம் எல்லாம் என் கணவரிடம். என் பெற்றோர் எனக்குக் கொடுத்த நிலத்தையும் கொடுக்கவில்லை. அந்த இடத்துல அவர் தொழிலகம் அமைச்சுக்கிட்டாரு. அவர் வாங்கின கடன்களுக்கு நான் கையெழுத்துப் போட்டிருக்கேன். இந்த சமயத்துல அவரு எனக்குத் தெரியாம இரண்டாவது கல் யாணம் பண்ணிக்கிட்டார். ரொம்ப ரகசியமா வைச்சிருந்தாங்க.
விவாகரத்து கேட்டாலும் கொடுக்க மாட்டேங்குறார். விவாகரத்து கொடுத்தால் என் இடத்தை திரும்பக் கொடுக்கணும், கடன்களை கட்டணும், எனக்குத் தீர்வு செய்யணும் இல்லையா....? என்ன ஒரு சுயநலம்...!
அந்த முதல் திருமண வாழ்க்கை நன்றாக அமைந்திருந்தால் நான் பாடலாசிரியர் ஆகியிருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்தத் திருமணப் பிரச்னைக்குப்பிறகு நான் மீண்டும் எழுதத் தொடங்கினேன். திரைப்பட பாடல் முயற்சிகளில் இறங்கினேன். 97-ல் சென்னைக்கு வந்தேன்.
இளையராஜா, தேவா, ஆதித்யன்னு இசையமைப்பாளர்களை தேடிப் போய் வாய்ப்புக் கேட்டேன். ஆதித்யன் ஒரு ஆங்கிலப் பாடல் கொடுத்து தமிழில் எழுத வைச்சார். என் எழுத்தைப் பார்த்த பிறகு ‘உங்கிட்ட ஏதோ விஷயம் இருக்கும்மா..’ன்னு பாராட்டினார். அப்போதான் மெட்டுக்கு பாட்டு எழுத முடியும்ன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்துல ஒரு வீட்டு மாடியில் தனியாக அறை எடுத்துத் தங்கினேன். சொற்ப சேமிப்பு பணம், படிப்பு, ‘பெண் என்றால் கிள்ளுக்கீரையா....’ என்ற கோப ஆவேசம். இவைதான் உடன் வந்தன. ஒரு டி.வி.எஸ். 50 வண்டியை வைத்துக் கொண்டு இயக்குநர்களின் அலுவலகங்கள், இசையமைப்பாளர்களின் ஒலிக் கூடங்கள்ன்னு வாய்ப்புத் தேட ஆரம்பிச்சேன். சலிக்காமல் தெருத் தெருவாக வெறியோடு அலைந்தேன்.
அந்த சமயம் கோவையிலிருந்து மனோகர்னு ஒரு நண்பர் தொலைபேசி செய்து அவருடைய நண்பரான மோகனை சந்திக்கச் சொன்னார். இரண்டு பேரையுமே நான் பார்த்தது கிடையாது. மோகன் என்னை இயக்குநர் சீமானிடம் அறிமுகம் செய்து வைத்தார். சீமான் அப்போது ‘இனியவளே...’ பட இயக்கத்திலிருந்தார். அந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்புத் தந்தார்.
‘தென்றல் எந்தன் நடையை கேட்டது...’ இதுதான் நான் சினிமாவுக்காக எழுதின முதல் பாடலின் முதல் வரிகள்.
இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சிலாகித்த சுசீந்தரன் ரவி என்ற உதவி இயக்குநர் மூலமாக இயக்குநர் விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் இரண்டாவது பாடல் வாய்ப்பு வந்தது. அடுத்த வாய்ப்புகள் உடனடியாக கிடைக்கவில்லை.
தொடர்ந்து போராட்டம்தான். அவமானம், எரிச்சல், கோபம் எல்லாமே இருக்கத்தான் செய்யும். ஆனாலும் தொடர்ந்து எல்லா இடங்களிலும் வாய்ப்புக் கேட்டு முயற்சி செய்து கொண்டேதான் இருந்தேன்.
1997-ல் முதல் வாய்ப்புக் கிடைத்தது துவங்கி 2002-ல் இயக்குநர் கௌதமின் ‘மின்னலே’ வுக்காக ‘வசீகரா...’ எழுதும் வரை பெரிய போராட்டம்தான். அதன்பின்தான் என் திரையுலகப் பாதையில் திருப்புமுனை ஏற்பட்டது.
இந்தப் பதின்மூன்று வருடங்களில் ஐநூறு பாடல்கள் எழுதியிருப்பேன். ‘மோசமான பாடல்கள், சமூகத்தைக் கெடுக்குற மாதிரி பாடல் எழுதமாட்டேன், அதில் சில ஆங்கில வார்த்தைகள் கலக்க மாட்டேன்’னு கொள்கைகளினால் நான் இழந்த பாடல்கள் ரொம்ப அதிகம். பல இடங்களில் பாட்டெழுதியதற்கு பணமே கொடுக்க மாட் டாங்க. அப்புறம் தருகிறேன் என அலைக்கழிப்பார்கள். என்னுடைய முதல் பாடலுக்கு கூட சம்பளம் கிடையாது. விக்ரமனின் இரண்டாவது பாடலுக்குத்தான் மூவாயிரம் சம்பளம் கிடைத்தது. பாட்டுக்கான என்னுடைய முதல் சம்பளம் அது.
திரைப்படம் பெரிய போதை. ஆனா, திரைப்படக் கவர்ச்சியில ஒரு போதும் நான் விழவில்லை. இதான் என் வெற்றிக்குக் காரணம். நான் இங்கே பணம் சம்பாதிப்பதற்காகவோ, புகழுக்காகவோ வரவில்லை. எனக்கு ஒரு வேலை வேணும். நியாயமான, நாகரிகமான, மனதுக்குப் பிடித்ததாக இருக்கணும், அதன் மூலம் சமூகச் சிக்கல்களில் என் குரல் ஓங்கி ஒலிக்கணும். தமிழினத்தின் உரிமைப் போராட்ட வரலாற்றில் என் பெயரும் இருக்கணும். அவ்வளவுதான்.’’ என்று முடிக்கிறார் தாமரை.
- குமுதம் ரிப்போட்டர்
இணையத்தில் இருந்து எடுத்ததுComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,