காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு
பிப்.1ம் தேதி உயர்த்தாமல் இன்று உயர்த்தினர்: காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு
சேலம்: மாதந்தோறும் 1ம் தேதி மாற்றம் பெறும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை, நடப்பு மாதம் 1ம் தேதி உயர்த்தப்படாமல் இன்று (4ம் தேதி) திடீரென ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.735, சேலத்தில் ரூ.753 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, விலையை குறைந்தனர். ஜூன், ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்கவும், காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன.
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், டிசம்பர் மாதத்தில் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா ₹50 வீதம் ரூ.100 விலையேற்றம் செய்யப்பட்டது. இதனால், சமையல் காஸ் சிலிண்டர் விலை பெரிதும் உயர்வடைந்தது. அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியநிலையில், கடந்த மாதம் (ஜனவரி) வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மாற்றவில்லை.
இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (பிப்ரவரி) புதிய விலை 1ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யவில்லை. மாறாக 19 கிலோ எடைக்கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.191 அதிகரித்தனர். இதனால், இதன்விலை டெல்லியில் ரூ.1533 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,598.50 ஆகவும், மும்பையில் ரூ.1,482.50 ஆகவும், சென்னையில் ரூ.1,649 ஆகவும், சேலத்தில் ரூ.1,610 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயராமல், பழைய விலையில் நீடித்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், இன்று (4ம் தேதி) திடீரென நாடு முழுவதும் 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை ரூ.25 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இவ்விலையேற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதனால், சென்னையில் ரூ.710க்கு விற்கப்பட்ட மானியமில்லா சிலிண்டர், ரூ.25 அதிகரித்து ரூ.735 ஆகவும், சேலத்தில் ரூ.728ல் இருந்து ரூ.753 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லி, மும்பையில் ரூ.719, கொல்கத்தாவில் ரூ.745.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், அன்றைய தினம் சிலிண்டர் விலையை உயர்த்தாமல் இருந்துவிட்டு, தற்போது உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் விலையேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது,’’ என்றனர்....
Comments