ரமணமகரிஷி (55)

 ரமணமகரிஷி (55)


பகவான் ஸ்ரீ ரமணர்  தொடர்: 55

ஏப்ரல் 14, அன்று வெள்ளிக்கிழமை.





 காலை முதல் பக்தர்கள் அமைதியாக வந்து தரிசித்தார்கள்.  பகவான் ஸ்ரீ ரமணரைச் சுற்றி மருத்துவர்களும், பணியாட்களும் இருந்தார்கள்.


 பகலில் திரவ  உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதனை குடித்தார். இப்போது மணி என்ன?  எப்போதும்  போல் கேட்டார்.  பிறகு ஏதோ நினைத்து கொண்டவராய் இனிமே நேரமே முக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டார் பகவான் ஸ்ரீரமணர்.


 பணியாட்களின் நெடுநாளைய சேவைகளை எண்ணி "சந்தோசம்" என்றார்.


 மாலையிலும் பக்தர்கள் அமைதியாக தரிசித்தார்கள்.  அந்த அமைதியில் வருத்தமும் கவலையும் இருந்தது.  நோயில் சித்திரவதைப்பட்ட உடம்பு சுருங்கிக் கிடந்தும் விலா எலும்புகள் தெரிந்ததையும், சருமம் கருத்திருந்ததையும் அவர்கள் கண்டார்கள். அது உபாதைகளின் அடிச்சுவடாயிருந்தது.


 மாலை தரிசனம் முடிந்த பக்தர்கள் யாரும் அங்கிருந்து கலையவில்லை. அந்தி சாயும் நேரம் பகவான் தனது பணியாளர்களிடம் தன்னை உட்கார்த்தி வைக்குமாறு சொன்னார். அவர்கள் அறிவார்கள் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு தீண்டலும் எத்தனை வலியானது என்று. பகவான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.


 பணியாளர்களில் ஒருவர் சிரசைத் தாங்கி கொள்ள அவர் அமர்ந்து கொண்டார் இரண்டு பேர் விசிறிக் கொண்டு நின்றார்கள்.


 டாக்டர் ஒருவர் ஆக்ஸிஜன் கொடுக்க முனைந்தார். பகவான் தனது வல க்கையால் அவரை நகர்த்தி விட்டார். அந்த சிறிய அறையில் டாக்டர்களும்,பணி யாளர்களும் 12 பேர் இருந்தார்கள். அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஒருவரும், பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்றின் புகைப்படக்காரரும் அமைதியற்றவராய் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.


 வெளித் தாழ்வாரத்தில் பக்தர்கள்  குழுவொன்று "அருணாச்சல சிவ" என்று பாடத் தொடங்கினார்கள். அதைக் கேட்டதும் பகவானின் விழிகள் பளிச்சென்று மலர்ந்தன.அவர் சின்னதாய் புன்னகைத்தார்.  அதில் விவரிக்க முடியாத அன்பு இருந்தது.விழியோ ரங்களில் ஆனந்தக்கண்ணீர் ஒரு ஆழ்ந்த மூச்சோடு சரி. எந்தவொரு  போராட்டமோ, வலிப்போ இல்லை. மரணத்தின் அறிகுறியே இல்லை. அடுத்த ஒரு மூச்சு வெளிப்படவில்லை அவ்வளவுதான்.


 மக்கள் சில கணங்களுக்கு பிரமித்தபடி நின்றார்கள். பாடுவது தொடர்ந்தது.


 பிரெஞ்சு புகைப்படக்காரர் அருகில் நின்ற ஆஸ் பர்னிடம் சரியா எந்தக் கணத்தில் அது நிகழ்ந்தது என்று கேட்டார்.


 "8.47" என்றார் ஆஸ்பர்ன்.


 அந்த நேரம் வானில் ஒரு ஜோதி தோன்றி மெதுவாய் கடந்து போனதை நான் பார்த்தேன் என்றார் அந்தப் புகைப்படக்காரர் வியப்புடன்.  அவர் மட்டுமா தொலைவில் சென்னையில் இருந்த பலரும் அந்த ஒளிக்காட்சியை கண்டிருக்கிறார்கள். அந்த ஒளிப்பிழம்பு வடகிழக்காக நகர்ந்தது அருணாச்சலம் சிகரம் நோக்கி.


" எட்டு நாற்

        பத்தேழு

                ஏப்ரல்            

                   பதினாலில்


     விட்டுடல்

            ஜோதி

                 விரைவாக

                     முட்டிட


        கருத்த

           இவ்வானை

                எரித்த

                   விண்மீனாய்


        பரத்திட

               முக்தி

                   பரப்பு"


பகவான் ஸ்ரீரமணருக்கு  கிரேசி மோகன் மனமுருகி எழுதியது இந்த வெண்பா.


 கூட்டத்தினரின் துயரம் விம்மலாய் வெடித்து கிளம்பியது. பெண்களில் சிலர் மயங்கி வந்தார்கள். மற்றும் சிலர் வாய்விட்டு அழுதார்கள்.


 பகவான் எப்போதும் அமர்கிற இருக்கையில் உடலை வைத்து மாலை அணிவித்தார்கள். இரவு முழுவதும் நகரத்து மக்கள் அச்சம் கலந்த மௌனத்துடன் அமர்ந்திருந்தார்கள். வீதிகளிலும், மக்கள் அலையலையாய் வந்தனர். "அருணாச்சல சிவா" பாடல் எங்கும் ஒலித்தது


 அன்றைய இரவிலேயே  உடலை எப்படி அடக்கம் செய்வது என தீர்மானனிக்கப்பட்டதுஅதன்படி மறுநாள் காலையில் பழைய கூடத்துக்கும், ஆலயத்திற்கும் இடையில் பள்ளம் தோண்டப்பட்டது. தெய்வீக மரியாதையுடன் உடல் அதில் இறக்கப்பட்டது.

 சுற்றி  நின்றக் கூட்டம் மௌனமாய் காணப்பட்டது.


 "அன்புருவான அந்த முகம் இனி இல்லை. அந்த இனிய குரல் கேட்பதற்கில்லை" அவர்கள் மனம் இப்படித்தான் நினைத்தது.


 பகவானின் சமாதியின் மீது, "பாலீஷ்"செய்யப்பட்ட கருங்கல்லிலான லிங்கம் வெளிப்படையான அடையாளமாகத் திகழ்கிறது. உள்ளுக்குள் அவருடைய காலடிகள்.


 திருச்சுழியிலிருந்து வேங்கடராமனாக பரம்பொருளைத் தேடி வந்தவர்

 திருவண்ணாமலையில் பகவான் ஸ்ரீ ரமணராய்  எல்லோர்க்கும் அருளாசி தந்து தரிசனம் கொடுத்தவர்.


 அனைத்தையும் துறந்தார்  தன் வாழ்நாளில்  அருணாச்சலத்தின் மீது பற்று வைத்ததை தவிர


 விருபாட்சி குகை அவர்  விரும்பி ஏற்றுக் கொண்டயிடம் 


 மௌனப் புன்னகையாலே அடுத்தவரின் மனநிலையின் கேள்விக்கு நல்ல பதில் தந்து தெளிய வைத்தவர்.


 அடுத்தவர் நலனுக்காக அனுமாஷ்ய சக்தியால் அதிசயக்க வைத்தவர்.


 மக்களிடம் மட்டும் தானா விலங்குகளிடமும் பேரன்பு கொண்டு, தன் பார்வையிலே ஒளிரும் தன்மைகொண்டே வாழ்ந்தவர்.


 பகவான் ஸ்ரீ ரமணரின் அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள், 

 அகிலத்தில் அனைத்து கண்டங்களிலும் இன்றும் வாழ்கின்றனர், அவர் காட்டிய வழிதனில் 


 நாமும் பயணித்தோம், 55 நாட்களாக பகவான் ஸ்ரீ ரமணரின் நினைவோடு.

 முருக.சண்முகம் சென்னை :56



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,