மண்ணின் நண்பன் - மரவட்டை.

 மண்ணின் நண்பன் - மரவட்டை..!!காடுகள் அல்லது பல்லுயிர் பெருக்கம் அல்லது வன உயிர் என்றால் எல்லோரது நினைவிலும் யானை, புலி போன்ற பெரிய அல்லது கவர்ச்சி மிக்க விலங்குகள்தான் தோன்றும். ஆனால், சிறிய நுண்ணுயிர்களின் நினைவு வராது. 


ஆயினும் அவை இயற்கைக்கு ஆற்றும் உதவி இந்தப் பெரிய விலங்குகளைக் காட்டிலும் அதிகம் மற்றும் மிகத் தேவையும் கூட. நாம் சாதாரணமாக எண்ணும் மரவட்டை இனம் இதைப்போல முக்கியமான ஒரு உயிரினம்.


சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கணுக்காலிகள் இனத்தைச் சார்ந்தது, மரவட்டை. இறந்த அல்லது கழிவுகளை மக்கும் உரமாகவும் மண்ணாகவும் ஆக்கும் வல்லமை கொண்டவை. இது ஆயிரம்காலி என்று தவறாகவும் சொல்லப்படும். ஒவ்வொரு கணுவிலும் (segment) கால்கள் இருப்பதால் அவ்வாறு பெயர் வந்திருக்கலாம்.


உண்மையில் 22 லிருந்து 750 வரை (அதாவது 11 லிருந்து 375 ஜதை) கால்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் காட்டின் இலைச் சருகுகள் நிறைந்த தரையிலும், மேல் மண்ணின் சற்று கீழே உள்ள இடங்களிலும், காட்டுக் கழிவுகளின் அடியிலும் காணப்படும்.


இதன் வாழிடம் இவ்வாறான இடங்களாக இருப்பதால், ஆயுட்காலம் முழுவதும் குறுகிய இடத்தைச் சுற்றியே அமைகிறது. சிறிய அளவில் காடுகள் அழிந்தாலும் இவை பெருமளவில் அழிந்து விடுகின்றன. கிட்டத்தட்ட 80,000 வகை மரவட்டைகள் உலகில் இருக்கின்றன. அவற்றில் 10,000 வகை இந்தியாவில் உள்ளன. இவற்றில் 93 இனம் தமிழ்நாட்டில் இருக்கின்றன.


மண் வளமாக இருப்பதற்கு முக்கியமான பணிகளை மரவட்டைகள் செய்கின்றன. இவை, தாவரக் கழிவுகளை மிகத் திறமையாக (பட்டுப்போன மரம், சருகுகள், பட்டைகள், மற்றும் மட்கும் தாவரங்கள்) மண்ணிற்கு நல்ல உரமாகவோ அல்லது தாவரங்களுக்கு உரமாகவோ திருப்பித் தருகின்றன. சற்றே ஈரப்பதம் கொண்ட சூழலில் இவை வாழ்வதால், பெரும்பாலும் வெப்பமண்டலப் பிரதேசங்களிலேயே காணப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,