நாகதோஷம் போக்கும் அருகம்புல் வழிபாடு

 ஆன்மீக தேடல்


நாகதோஷம் போக்கும் அருகம்புல் வழிபாடு மனத்துக்குள் சஞ்சலமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி... அருகே உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஒரு நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். அங்கே, இறைவனுக்காக செய்யப்படும் வழிபாடுகளில் ஆனந்தித்துப் போவோம். அந்த வழிபாட்டைச் செய்ய நமக்கும் ஆசை இருக்கும். ஆனால், கோயிலில் நாமாக இறைவனை பூஜித்து வழிபட முடியாது அல்லவா? அதேநேரம், வீட்டிலேயே நமது இஷ்ட தெய்வத்துக்குச் செய்யக்கூடிய எளிய வழிபாடுகள் நிறைய உள்ளன. 


 முதலாவதாக, முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானை வணங்கி, அவரை அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபடும் முறையைப் பார்ப்போம். அதற்கு முன்பாக, அருகம்புல்லின் சிறப்பைப் பார்க்கலாமா?

ஒருமுறை கவுண்டின்ய மகரிஷியின் தர்ம பத்தினி அவரைப் பார்த்து, 'சதாசர்வ காலமும் அருகம்புல்லால் விநாயகரைப் பூஜை செய்து வருகிறீர்கள். ஆனாலும், நமது கஷ்டம் தீர்ந்த பாடில்லையே..?' என்று கேட்டாள். அதற்கு கவுண்டின்யர் ஓர் அருகம்புல்லை அவளிடம் தந்து, ''இதை தேவேந்திரனிடம் கொடுத்து, இதற்குச் சமமான பொன்னை வாங்கி வா!'' என்றார். அவளும் தேவேந்திரனிடம் சென்று, அருகம்புல்லுக்குச் சமமான பொன் கேட்டாள். தேவேந்திரன், அவளை குபேரனின் அளகாபுரிக்கு அனுப்பிவைத்தான். குபேரனிடம் வந்து, விஷயத்தைச் சொன்னாள். ''உங்களுக்குத் தேவைப்படும் பொன்னை நீங்களே எடுத்துச் செல்லலாம்!'' என்றார் குபேரன்.

ரிஷி பத்தினியோ, தான் கொண்டு வந்த அருகம்புல்லுக்குச் சமமான பொன் தந்தாலே போதும் என்றாள். உடனே, தராசின் ஒரு தட்டில் அருகம்புல்லை வைத்தார் குபேரன். மறு தட்டில் பொன் ஆபரணங்கள் நிறைய வைக்கப்பட்டன. ஆனாலும், தராசு சமமாகவில்லை. எல்லோரும் அருகம்புல்லின் அருமையைப் புரிந்து கொண்டார்கள். நாமும் அருகம்புல்லின் மகத்துவத்தை உணர்ந்து, அதைக்கொண்டு ஆனைமுகனை வழிபட்டால், நெருங்கும் வினைகள் யாவும் நில்லாது ஓடிவிடும்.

தொடர்புடைய படம்

அருகம்புல் வழிபாட்டுக்கு, மிகச் சுத்தமான இடத்தில் முளைத்திருக்கும் அருகம்புல்லையே பயன்படுத்த வேண்டும். அருகம்புல் மீது சிறிது மஞ்சள் நீரைத் தெளித்து, குறைந்தது மூன்று இன்ச் அளவுள்ள அருகம்புல்லைத் தேர்வு செய்து பறிக்க வேண்டும். வீட்டுக்கு வந்ததும், அதில் சிறிது பன்னீர் தெளித்து, சதுர வடிவ மணைப் பலகையில் விசிறி போல் அதைப் பரப்ப வேண்டும். நடுவில் சிறிய தலைவாழை இலை போட்டு, அதில் பச்சரிசி வைத்து, மோதிர விரலால் ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும். அடுத்ததாக, ஒரு பித்தளைச் சொம்பில் மஞ்சள்நிற நூலைச் சுற்றி, சொம்பினுள் பச்சைக்கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு பொடி கலந்த நீர் ஊற்ற வேண்டும். தொடர்ந்து, சொம்பு மீது மாவிலைக் கொத்து வைத்து, அதன்மேல் தேங்காய் வைக்க வேண்டும். அதன் பிறகு கதம்ப சரம், சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

இரண்டு தீபங்களை ஏற்றி, பக்கத்தில் நிறுத்தி, கலசம் முன்பு விநாயகரை வைக்கவும். பூஜைக்குத் தேவையான 21 அருகம்புல்லைத் தனியாக வைத்திருக்கவும். மூன்று வகை மலர்களோடு கொழுக்கட்டை, தேங்காய், தாம்பூலம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணியையும் முடிந்த அளவு அதிகமான பழ வகைகளையும் பூஜையில் வைக்கலாம்.

முதலில் அன்றைய நாள், நட்சத்திரம் சொல்லி, மஞ்சள் விநாயகரை பூஜை செய்யுங்கள். கைகளில் மலர் எடுத்து கண்கள் மூடி மனமுருகி... 'விநாயகனே... இங்கே பிரசன்னமாக வேண்டும்’ என்று வேண்டுதல் செய்யுங்கள். பிறகு அர்ச்சனை செய்யவும்.

பிறகு, இரு பழங்கள், வெற்றிலைப் பாக்கை வைத்து தூப தீபம் காட்டி, மங்கல ஆரத்தி செய்ய வேண்டும்.

தொடர்ந்து, கை கூப்பியபடி...

'அருகில் மகிழும் ஆனந்த கணபதியே

உருகுவோர் மனதில் ஒளிதரும் வேந்தே

தொடரும் வினைகள் அறவே காப்பாய்

இடர் களைந்து இன்பம் ஈவாய் எம்மானே!'

என மூன்று முறை சொல்லி, கையில் வைத்திருக்கும் மலர்களைக் கலசத்தின் மேல் போட்டு வணங்க வேண்டும்.  

பிறகு, ஒரு பஞ்ச பாத்திரத்தில் துளசி, மஞ்சள் தூள் சிறிது இட்டு, கை மூடியபடி ''கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி, சிந்து, காவிரி ஆகிய நதிகள் இதனுள் வந்து இறங்குக'' என மூன்று முறை சொல்லி, அவற்றை கலசம், பூஜை திரவியங்களில் தெளிக்க வேண்டும். பிறகு, முக்கியமான அருகம்புல் அர்ச்சனையை அதன் நாமாவளியால் செய்ய வேண்டும். விசேஷமான அருகு பூஜைக்கான 21 நாமாவளிகள்:


 1. ஓம் பாசாங்குச தராய நம: 2. ஓம் கணாத்யாய நம: 3. ஓம் ஆகு வாகனாய நம: 4. ஓம் விநாயகாய நம: 5. ஓம் ஈச புத்ராய நம: 6. ஓம் சர்வ ஸித்திப்ரதாய நம: 7. ஓம் ஏக தந்தாய நம: 8. ஓம் இலவக்த்ராய நம: 9. ஓம் மூஷிக வாகனாய நம: 10. ஓம் குமார குரவே நம: 11. ஓம் கபில வர்ணாய நம: 12. ஓம் ப்ரும்மசாரிணே நம: 13. ஓம் மோதக ஹஸ்தாய நம: 14. ஓம் சுர ஸ்ரேஷ்டாய நம: 15. ஓம் கஜ நாசிகாய நம: 16. ஓம் கபித்த பலப்ரியாய நம: 17. ஓம் கஜமுகாய நம: 18. ஓம் சுப்ரசன்னாய நம: 19. ஓம் சுராஸ்ரயாய நம: 20. ஓம் உமா புத்ராய நம: 21. ஓம் ஸ்கந்த ப்ரியாய நம:


 இந்த 21 நாமாவளிகளைச் சொல்லி முடித்ததும், தேங்காய் உடைத்து, அதைக் கலசம் முன்பு வைக்கவும். பிறகு ஊதுவத்தி, தீபம் காட்டி, நிவேதனப் பொருட்களைப் படைக்கவும். கைகளில் மலர் எடுத்து, தன்னையே மும்முறை சுற்றி ஆத்ம பிரதட்சிணம் செய்துகொண்டு, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும். தொடர்ந்து, பூஜைக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நிவேதனப் பொருட்களைப் பிரசாதமாகக் கொடுத்துவிட்டு, நீங்களும் எடுத்துக் கொள்ளவும்.

பூஜையின் பலன்: ராகு-கேது தோஷம், காரியத்தடைகள்  நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,