சுவாசம் காக்கும் நுரையீரல்கள்..!!

 சுவாசம் காக்கும் நுரையீரல்கள்..!!



நம் மார்புக்குள் வலது பக்கம் ஒன்றும் இடது பக்கம் ஒன்றுமாக இரண்டு நுரையீரல்கள் இருக்கின்றன. நுரையீரல் கூம்பு வடிவம் கொண்டது; ‘புளூரா’ எனும் இரட்டைச் சுவரால் மூடப்பட்டுள்ளது. இதன் கூர்முனை மார்பின் மேல் பகுதியில் இருக்கிறது; அகலமான அடிப்பகுதி உதரவிதானத்தில் அமர்ந்திருக்கிறது. தொட்டால் பஞ்சுபோல் மெத்தென்று இருக்கிறது. வெளிர் சிவப்பு நிறத்தில் உள்ளது.


நுரையீரலின் தொடக்கம் காற்றுக்குழாய் (Trachea). இது மார்புக்குள் வந்ததும், வலது மூச்சுக் குழாய், இடது மூச்சுக் குழாய் எனப் பிரிந்து, முறையே வலது, இடது நுரையீரல்களுக்குள் நுழைகிறது.


மரத்தின் பெரிய கிளையிலிருந்து சிறு சிறு கிளைகள் பிரிவதுபோல், மூச்சுக் குழாயிலிருந்து 23 மூச்சுச் சிறுகுழல்கள் (Bronchioles) பிரிந்து நுண்குழல்களாகின்றன. இவற்றின் முனைகளில் சிறிய காற்றுப் பைகள் (Air sacs) தொங்குகின்றன. இவற்றின் சுவர்கள் மிகவும் மெல்லியவை. எல்லாச் சுவர்களையும் விரித்தால், டென்னிஸ் மைதானத்தில் பாதி அளவு இருக்கும்!


ஒவ்வொரு காற்றுப் பையிலும் 20 வீதம் மொத்தம் 30 கோடி காற்றுக் கிடங்குகள் (Alveoli) உள்ளன. மூச்சுக் காற்றுக் குழாயில் நுழைந்து மூச்சுக் குழாய், மூச்சுச் சிறுகுழல்கள் வழியாகக் காற்றுப் பைகளுக்கு வருகிறது. இங்குதான் நுரையீரல் செய்யும் அற்புதப் பணியான ‘காற்றுப் பரிமாற்றம்’ நடைபெறுகிறது.


இதயத்தின் வலது வென்ட்ரிகிளிலிருந்து நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்கு ரத்தம் வருகிறது. நுரையீரல் தமனியும் பல கிளைகளாகப் பிரிந்து, காற்றுப் பைகளை அடையும்போது, மிகச் சிறிய தந்துகிக் குழாய்களாக (Capillaries) மாறிவிடுகிறது. இவற்றின் சுவர்களும் மெல்லியவை. காற்றுப்பைச் சுவரும் தந்துகிச் சுவரும் நெருக்கமாக ஒட்டிக்கொண்டிருப்பதால், ‘ஊடுபரவல்’ (Diffusion) முறையில் ‘காற்றுப் பரிமாற்றம்’ நிகழ்கிறது.


காற்றுக் கிடங்குகளில் உள்ள காற்றில் ஆக்ஸிஜன் மிகுந்திருக்கும். தந்துகிகளில் இருக்கும் ரத்தம் கார்பன் டை ஆக்ஸைடு மிகுந்த அசுத்த ரத்தமாக இருக்கும். காற்றுப் பையில் அடர்த்தியாக இருக்கும் ஆக்ஸிஜன் தந்துகிக்குப் பாயும். தந்துகியில் அடர்த்தியாக இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு காற்றுப் பைக்குப் பாயும். இதுதான் ‘காற்றுப் பரிமாற்றம்’. இதன் பலனால், அசுத்த ரத்தம் சுத்தமாகிறது. எனவே, இதை ‘ரத்தச் சுத்திகரிப்பு’ என்கிறோம்.


இப்படிச் சுத்தமான ரத்தம் நுரையீரல் சிரைகள் வழியாக இதயத்துக்குச் சென்று, அங்கிருந்து மகாதமனி வழியாக உடலின் பல பகுதிகளுக்கும் செல்கிறது. அப்போது, செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனைப் கொடுத்துவிட்டு, பதிலுக்கு அங்குள்ள கழிவுப்பொருளான கார்பன் டை ஆக்ஸைடைப் பெற்றுக்கொள்கிறது.


இப்படி அசுத்தமான ரத்தம் சிரைக்குழாய்கள் வழியாக இதயத்துக்கும், அங்கிருந்து நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்கும் வந்து மறுபடியும் சுத்தமாகிறது. இப்படி ரத்தம் சுத்தமாவதற்கும் செல்களின் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் நுரையீரலில் ‘காற்றுப் பரிமாற்றம்’ நிகழ வேண்டியது அவசியமாகிறது.


ஒருமுறை காற்றுப் பரிமாற்றம் நிகழ முக்கால் விநாடி ஆகிறது. மூச்சுக் காற்று நுரையீரலுக்குள் நுழைய ‘சுவாசம்’ எனும் செயல்பாடு நிகழ வேண்டும். பின்மூளையும் முகுளமும் இதைச் செயல்படுத்துகின்றன. சுவாசத்துக்கு மார்புக் கூட்டில் உள்ள விலாத் தசைகளும் உதரவிதானமும் உதவுகின்றன. சுவாசத்தில் உட்சுவாசம், வெளி சுவாசம் என இருவகை உண்டு.


சாதாரணமாக, உதரவிதானம் பலூன் மாதிரி மேலே எழும்பியிருக்கும். மூச்சை உள்ளிழுக்கும்போது, இது சுருங்கித் தட்டையாகிவிடும். அதேவேளையில் விலாத் தசைகளும் சுருங்கும். இவற்றின் பலனால், மார்புக் கூடு விரிந்து மேலெழும்பும். அப்போது நுரையீரலுக்குள் கொள்ளளவு அதிகரித்து, காற்றின் அழுத்தம் குறையும். எனவே, அழுத்தம் அதிகமாக இருக்கிற வளிமண்டலக் காற்று மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழையும். இதுதான் உட்சுவாசம்.


அடுத்த கட்டமாக, விலாத் தசைகள் விரியும். மார்புக் கூடு பழைய நிலைக்குத் திரும்பும். உதரவிதானம் மேலெழும்பும். இதனால் நுரையீரல் அழுத்தம் அதிகமாகும். அப்போது நுரையீரலிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடு மிகுந்த காற்று வெளியேறும். இதுதான் வெளிசுவாசம். வயதுவந்தவர்களுக்கு நிமிடத்துக்கு 14 முதல் 20 முறையும் சிறுவர்களுக்கு 18 – 30 வரை சுவாசம் நிகழ்கிறது.


ஒரு நுரையீரலுக்குள் 5 - 6 லிட்டர் காற்று கொள்ளும். மிகவும் இழுத்து மூச்சை வெளியில் விட்டால்கூட, ஒரு லிட்டர் காற்று நுரையீரலுக்குள் எப்போதும் இருக்கும். நாம் சாதாரணமாகச் சுவாசிக்கும்போது, அரை லிட்டர் காற்றையே உள்ளிழுக்கிறோம். அதே அளவில்தான் காற்றை வெளிவிடுகிறோம்.


மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளின் சுவாசத்துக்கு நுரையீரல்கள் உதவுகின்றன. பூச்சிகளுக்கு நுரையீரல் இல்லை. காற்றுக் குழாய்கள்தாம் உண்டு. பாம்பு போன்ற ஊர்வனவற்றுக்கு உதரவிதானம் இல்லை. மூச்சை உள்ளிழுப்பதற்குத் தங்கள் உடல் தசைகளையே உபயோகிக்கின்றன. தவளை உட்பட பெரும்பாலான நீரில் வாழும் உயிரினங்கள் வாய்த் தசைகளைப் பயன்படுத்தி மூச்சை உள்ளிழுக்கின்றன. தவளை தண்ணீருக்குள் இருக்கும்போது அதன் தோல் வழியாகவும் சுவாசிக்கும் திறனுள்ளது.


பறவைகள் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து முதலில் காற்றுப் பைகளுக்குள் தள்ளுகின்றன. அதன் பிறகே நுரையீரல்களுக்கு அனுப்புகின்றன. மீன்கள் செவுள்கள் வழியாகச் சுவாசிக்கின்றன. தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை இவை உறிஞ்சிக்கொள்கின்றன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,