ரஷிய பெண் புரட்சியாளரின் காதல் கதை!

 காதலர் தினம்'உன் பழுப்புக் கண்களை முத்தமிடுகிறேன்' - ரஷிய பெண் புரட்சியாளரின் காதல் கதை!

காதல் என்பது நம்பிக்கை. மனிதநேயம். மனங்களின் ஒருமித்த அன்பு. பிப்ரவரி 14 ஆம் தேதி, ரோஜாக்கள், இதய வடிவப் படங்களால் முடிந்துவிடுவதில்லை. கி.பி. 270-களில் ரோமானியப் பேரரசு மக்களை எவ்வாறு நடத்தியது?
மன்னர் கிளாடியஸ் ஆட்சியில், காதல் திருமணங்கள் தடை செய்யப்பட்டன. பாதிரியார் வேலண்டைன் ஏன் கல்லால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டார்? அவருக்கும் பார்வையற்ற அஸ்டோரியசுக்குமான காதல் துயரம் என்னவாக இருந்தது? முதலில் இவற்றுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
காதலர் தினம் என்பது உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவைப்பதற்கும், கேளிக்கைக்குரிய, உடல் தேவையைத் தீர்த்துக்கொள்ளுகிற ஒரு நாளாக மட்டுமே பார்ப்பது அபத்தம். சமூகப் பிளவுகளுக்கான காரணங்களான சாதி, மதம், வயது, வர்க்கம், காழ்ப்புணர்வு, கழிவிரக்கம், தற்பெருமை, அகங்காரம் எல்லாவற்றையும் நீர்க்கச் செய்து, மனிதத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது காதல். ஒருவரின் மரணத்துக்கு விழா எடுக்கிறோம் என்றால் அதைக் கொண்டாடுகிறவர்களின் காதல் எத்தகைய வலுவாக, உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
ஜின்னா, ருட்டியின் காதல் இன்றைக்கும் பேசப்படுகிறதென்றால் சாதியக் கட்டுடைப்புதான் காரணம். ஆணும் பெண்ணும் அன்பு எனும் பெயரில் சுயநலத்தோடு வாழ்ந்து முடிவதால் எந்த நன்மையும் இல்லை. ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு தம்பதியராக இணைந்து சமூக விடுதலைக்காகப் போராடுகிற சிவப்புக் காதல் என்றைக்கும் போற்றுதலுக்குரியது. கார்ல் மார்க்ஸ், ஜென்னியின் காதல் மகத்தான முன்மாதிரி என்பேன். அந்த வரிசையில், அதிகம் பேசப்படாத, பேசப்பட வேண்டிய ஒரு புரட்சிகரப் பெண்ணின் உன்னதமான காதலை நாம் அறியலாம்.
அவர்தான் ரஷியப் பெண் புரட்சியாளர், முதல் பெண் அரசுத் தூதர், இரும்புப் பெண்மணி, தோழர் லெனின் தலைமையில் சோவியத் ஒன்றிய அமைச்சரவையின் முதல் பெண் சமூக நலத்துறை அமைச்சராகச் செயலாற்றிய கம்யூனிஸ்ட் அலெக்சாண்டிரா கொலன்தாய்.
குடும்பத்தினரின் முழுச் சம்மதத்தோடு பணக்காரர் ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும். மரபைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறிதளவும் மீறக்கூடாதென்பதில் கண்டிப்புடன் இருந்தவர் அலெக்சாண்டிராவின் தந்தை. ஆனால், மரபை உடைத்துத் தந்தையின் எதிர்ப்புடன் தனக்குப் பிடித்த ஏழ்மையான விளாடிமிர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் அலெக்சாண்டிரா. இவர்களுடைய வாழ்க்கை முழுமையும் சமூகவயப்பட்டது. விளாடிமிர் ஒரு பொறியாளர். ராணுவத்திலும் அரசியலிலும் செயல்பட்டார். சோவியத்தில் மென்ஷ்விக்குகளுக்கு எதிராக நின்று வெற்றி பெற்றவர்.
போல்ஷ்விக் கட்சியில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தார் அலெக்சாண்டிரா. இருவருக்குமே பணிகள் சார்ந்த நெருக்கடிகள், அலைச்சல்கள் இருந்தன. பாட்டாளி வர்க்கத்திற்காக உழைத்த அலெக்சாண்டிராவின் நோக்கம் சமூகக் குடியிருப்பை உருவாக்குவது. அதற்கான முயற்சியில் தனியாளாக நின்று போராடிக் கொண்டிருந்தார். மனிதர்களின் மனங்கள் ஒன்றுபோல் இருப்பதில்லையே. சரிசெய்துகொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் வெற்றியும் பெற்றார்.
அலெக்சாண்டிரா நல்ல எழுத்தாளர். அவர் எழுதிய “சிவப்புக் காதல்” நாவலில் வாசிலிசா, வோலோடியா என்கிற இரண்டு தலைமைக் கதாபாத்திரங்கள்.
வாசிலிசா எப்போதும் பாட்டாளி மக்களின் வாழ்க்கை குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். கடுமையான மன நெருக்கடிகள், அவமானங்கள் நேர்கின்றன. வோலோடியாவை நினைத்து அவன் அனுப்புகிற கடிதங்களை மடியில் கிடத்தி வேதனைப்படுகிறாள். அரசியல் பணிக்காக ஜெர்மனி, மாஸ்கோ, நார்வே என அலைகிறாள். அவன் போரில் காயம்பட்டு விடுமுறைக்கு வந்தபோதும்கூட கட்சி வேலைகளால் அவனைச் சரியாக கவனிக்க முடியவில்லை. தவிக்கிறாள். அவள் தலைமையிலான மாநாடு ஒன்றில் அவளுக்காக அனைத்து வேலைகளையும் தானே முன்னெடுத்து திறம்பட முடித்துக் கொடுக்கிறான். கடும் சுரம் தாக்கி அவள் நலிவுற்ற நேரத்தில் வோலோடியா அவளை விட்டு நகரவேயில்லை. பணிவிடை செய்து வாசிலிசாவைத் தேற்றுகிறான்.
“நீ சாதாரணப் பெண்ணா? எனது சாகசப் பெண். நீ எப்போவாவது யாருக்காவது பயந்திருக்கிறாயா? எல்லோரையும் எதிர்கொண்டு, எதற்கும் விட்டுக்கொடுக்காத உறுதியான பெண் அல்லவா நீ என்று மிருதுவாக அணைத்து, அனுசரணையாக வைத்திருந்திருப்பான்” என நினைக்கிறாள்.
அதேபோல் வோலோடியாவிற்கு நெருக்கடி ஏற்படுகிறது. அவன் மீது பழி சுமத்திப் பணியிலிருந்து வெளியேற்ற நினைக்கிறார்கள். அவனால் சமாளிக்க இயலாமல், மனதில் உள்ளதைச் சொல்லவும் ஆறுதலுக்கும் அன்பான மனைவி, தோழி வாசிலிசாவைத் தேடுகிறான். அவளுக்காகக் கடிதம் எழுதி அனுப்புகிறான்.
“உன்னைப் பற்றி செய்திகள் செய்தித்தாளில் வந்திருப்பதாக இங்கேயுள்ள தோழர்கள்கூட பேசிக் கொள்கிறார்கள். நீ உனது செயலில் சாதித்துவிட்டாய், நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், ஒரு தடவை வந்து உன் பாசத்துக்குரிய வோலோடியாவைப் பார்த்துச் செல்லலாம் அல்லவா?
நான் உன்னை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். நீதான் வந்து சரிப்படுத்த வேண்டும். இந்த குழப்பத்தால் நான் பெருமளவு தெளிவில்லாமல் இருக்கிறேன். எனக்கு எதிராய் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன்.
நான் உனது பழுப்பு கண்களுக்கு முத்தமிடுகிறேன்... என்றும் உனது வோலோடியா" என முடிகிறது அந்தக் கடிதம்.
அதற்குப் பிறகான வாசிலிசாவின் முயற்சி கடுமையானது. வோலோடியா என் கணவன் மட்டுமல்ல. என் உற்ற தோழன். எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்கிற அவளின் உறுதிப்பாடு நெகிழ்ச்சியானது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டங்கள் அவர்களின் அற்புதமான காதலின் ஆழத்தில் இருந்து வெற்றியடைகிறது என்றே சொல்லலாம். சிந்தன் புக்ஸ் வெளியீட்டில் சொ. பிரபாகரன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்த நாவல் கொலன்தாய் அவர்களின் வாழ்க்கையிலிருந்தே பதிவு செய்யப்பட்டதாக உணர்கிறேன்.
பெண்ணுக்கு அடுக்களை, ஆணுக்கு அலுவலகம் எனப் பிரித்து வைத்திருக்கிறோம். அடுக்களைக்கும் அலுவலகத்திற்குமாக ஓடிக் களைத்து காதல் எங்கே எனத் தேட வேண்டி இருக்கிறது. சுயமரியாதைக்கும் நியாயமான உணர்வுகளுக்கும் வழிவிட்டு ஊக்கப்படுத்துவது காதலின் வெளிப்பாடெனக் கருதுகிறேன். இவற்றின் நீட்சியாகக் கேரள இடதுசாரி இயக்கத்தின் தோழமைகள் சைமன் பிரிட்டோ, ஷீனா இவர்களின் வாழ்க்கை, வரிகளுக்குள் அடங்காதது. இவர்களையெல்லாம் தேடிப்பிடித்துப் பற்றிக்கொள்ள வேண்டும்.
பெண் காதலித்தால் மிகப் பெரிய குற்றம். ஆண் காதலித்தால் சமூக இயல்பு. சாதி என்று வருகிறபோது அனைத்துமே குற்றமாகிறது. இவைகளை உடைத்து, பாலினபேதமின்றி மனிதர்கள் உள்ளன்புடன் சமூகத்தை நேசிக்கத் தொடங்கினால் வெளிச்சம் உண்டாகும். அப்படி உணர்கிற அந்த நாளை நீங்கள் நிச்சயம் கொண்டாடலாம்.
நன்றி: தினமணி
May be an image of 1 person
4

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,