ஊக்கம் தரும் கவிஞாயிறு தாராபாரதி

 ஊக்கம் தரும் கவிஞாயிறு தாராபாரதி




உட்கார் நண்பா, நலந்தானா? – நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டு விரல்நீ சுருங்குவதா? – உன்
சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
‘புல்லாய்ப் பிறந்தேன் நானென்று’ – நீ
புலம்ப வேண்டாம்; நெல்கூட
புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் – அது
பூமியின் பசியைப் போக்கவில்லை?
‘கடலில் நான்ஒரு துளி’யென்று – நீ
கரைந்து போவதில் பயனென்ன?
‘கடலில் நான்ஒரு முத்தெ’ன்று – நீ
காட்டு; உந்தன் தலைதூக்கு!
வந்தது யாருக்கும் தெரியாது – நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது;
சந்ததி கூட மறந்துவிடும் – உன்
சரித்திரம் யாருக்கு நினைவுவரும்?
திண்ணை தானா உன்தேசம்? – உன்
தெருவொன் றேயா உன்னுலகம்,
திண்ணையை இடித்துத் தெருவாக்கு – உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை! – அதில்
இன்னொரு சிகரம் உனதுதலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்னதடை?
பூமிப் பந்து என்னவிலை? – உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம் – வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!
இக்கவிதை கவிஞர் தாராபாரதியின் ‘திண்ணையை இடித்துத் தெருவாக்கு!’ எனும் கவிதையாகும். இவர் எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். தம்முடைய வரிகளால் சோர்வடைந்த இதயங்களைக்கூட தட்டி எழுப்பும் ஆற்றல் படைத்தவர்.
தமிழுக்காக சிறந்த தொண்டாற்றிய பெருமகனார்.
இவர் 26 பிப்ரவரி 1947 இல் திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி, புஷ்பம் அம்மாள். இவரது துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். தனது ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
” கவிஞாயிறு” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர். தமிழ்நாடு அரசு 2010 – 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
இவருக்கு இரு புதல்வர்கள், விவேகானந்தன் மற்றும் முனைவர் லோகுதுரை.
இவர் தனது பெயர்க்காரணம் குறித்து கூறுகையில், தாராபாரதி என்பது என் எழுதுகோலின் சுட்டுப்பெயர். தாயின் மடியில் சூட்டிய பெயர் இராதாகிருட்டினன். தமிழின் மடியில் சூட்டிய பெயர் தாராபாரதி. எனது இயற்பெயரில் முன்பாதியை (ராதா) முன்பின்னாகத் திருப்பிப் போட்டு, என்னுடைய கவிதை ஆசான் பாரதியின் பெயரை இணைத்துக் கொண்டேன்.
முன்னோடிக் கவிஞர்களாக எத்தனையோ கவிஞர்கள் இருக்க, எனது ஆசானாகப் பாரதியை ஏற்றுக் கொண்ட காரணம் என்னவெனில், பாரதி – அந்தத் தலைப்பாகைக் கவிஞனின் தமிழ் படித்துக் கவிஞனானவன் நான். அந்த மகாகவியின் தமிழ்ச்சுவடி எனது அரிச்சுவடி. பாமரக் காதுகளும் தேமதுரத் தமிழோசை பருகச் செய்தவன். அந்தப்புரத்துத் தாதிகளுக்கும் அந்தாதி பாடிக் கொண்டிருந்த புலவர்களைவிட்டு விலகி வந்தவன். கொலுமண்டபத்துக் கவிதைகளைக் குப்பத்துத் திண்ணைகளுக்கும் கொண்டு போனவன்.
அவனது கவிதைகள் அலங்காரச் சொற்களின் ஊர்வலம் அல்ல; அகராதி வார்த்தைகளின் அணிவகுப்பு அல்ல. எளிய பதங்கள், இனிய தமிழ்நடை, மக்கள் மொழியில் மடைதிறந்த கவிப்பெருக்கு; இலக்கிய வரலாற்றில் நீண் இடைவெளிக்குப் பிறகு கவிதையை நிமிர்த்திய நெம்புகோல்’ என்று பாரதியை தனது குருவாக ஏற்றுக்கொண்டதற்கு சிறு குறிப்பு வரைகிறார்.
கவிதை படைப்பது, மொழி அறிந்த எல்லோராலும் முடியாத காரியம். மொழி ஆளுமை, கற்பனைத் திறன் பெற்ற சிலரால் மட்டுமே கவிதை படைக்க சாத்தியம். பாரதியைப் படித்தாலே கவிதை பிறக்கும். பாரதி வழியில் வந்த இவரது மறைவு தினம் 13 மே 2000. இந்நாளில் இவரது படைப்புகளைக் குறித்தும் இவரைக் குறித்தும் அறிவோம். அறிந்ததை பிறருக்கு சொல்வோம்.
நன்றி: கோவை மெயில்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,