வேட்டையாட காத்திருக்கும் விராட் கோலி படை!

 இந்திய மண்ணில் இங்கிலாந்து ; வேட்டையாட காத்திருக்கும் விராட் கோலி படை! - ஓர் அலசல்



இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் முதல் நிலையில் உள்ள அணியாகும். அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை இந்தியா வீழ்த்தியது சரித்திர சாதனை. அந்த வெற்றி கோப்பையோடு தாயகம் திரும்பியுள்ள இந்திய அணி வரும் 5 ஆம் தேதியன்று கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.


இந்திய தட்பவெட்ப சூழல் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்றாலும் இங்கிலாந்து அணியை ஈசியாக எடைபோட்டு விடக்கூடாது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று மாஸ் காட்டி வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையை அந்த அணிகளின் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது ஸ்பெஷலான சம்பவம்தான்.


இங்கிலாந்து மற்றும் இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1932 முதல் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதுவரை இங்கிலாந்தும், இந்தியாவும் 33 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. இரு அணிகளும் ஒட்டுமொத்தமாக 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்தியா 26 போட்டிகளிலும், இங்கிலாந்து 47 போட்டிகளிலும் வென்றுள்ளன. 49 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.


இந்தியாவில் இங்கிலாந்து அணி 1951 - 52 வாக்கில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்தன. அதில் ஐந்தாவது போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 1952இல் பிப்ரவரி 6 முதல் 10 வரை நடந்த அந்த போட்டியில் இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை வென்றது. அதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற முதல் வெற்றியும் கூட. அந்த வெற்றிக்காக இந்திய அணி 20 வருடங்கள் காத்திருந்தது. இன்னிங்க்ஸ் மற்றும் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி கலக்கியிருந்தது.


இங்கிலாந்தும், இந்தியாவும் சேப்பாக்கம் மைதானத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 5 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், ஒரு போட்டி சமனிலும் முடிந்துள்ளது. கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. 2016இல் சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதுதான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் குவித்த அதிபட்ச ரன்களாகும்.


இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் டெஸ்ட் தொடர் Anthony de Mello கோப்பை என அழைக்கப்படுகிறது. இந்த தொடரில் இதுவரை 56 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இந்தியா 19 போட்டிகளிலும், இங்கிலாந்து 10 போட்டிகளிலும் வென்றுள்ளன. 13 தொடர்களில் இந்தியா ஏழு முறையும், இங்கிலாந்து மூன்று முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. கடைசியாக 2012 - 13 தொடரில் அலைஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என வென்றிருந்தது. அதன் பின்னர் 2016 - 17 தொடரை இங்கிலாந்து இழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


கேப்டன் ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பேர்ன்ஸ், சிப்லி மாதிரியானவர்கள் இங்கிலாந்தின் நம்பிக்கை. ஆண்டர்சன், வோக்ஸ், பிராட், மொயின் அலி இங்கிலாந்துக்கு பவுலிங்கில் பலம் சேர்க்கிறார்கள். இது தவிர பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டராக அந்த அணியில் வலு சேர்கிறார். இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி உள்ளது இந்த தொடரில் அவர்களுக்கு கைகொடுக்கலாம்.


அது தவிர இந்திய அணியின் தமிழகத்தை சேர்ந்த அஷ்வினும், வாஷிங்டன் சுந்தரும் முதல் போட்டியில் விளையாடுவது அணிக்கு சாதகமாக இருக்கலாம். இருவரும் சேப்பாக்கம் மைதானத்தில் தவமாய் தமிருந்து கிரிக்கெட் விளையாடியவர்கள். அதுமட்டுமல்லாது இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித், கில், கோலி, ரஹானே, புஜாரா, பண்ட், வாஷிங்டன் சுந்தர், பாண்ட்யா என படு ஸ்ட்ராங்காக உள்ளது.


சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளது. அதில் இரண்டாவது போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ரசிகர்கள் அனுமதித்திருப்பது நல்ல ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த தொடரை பொறுத்தவரை இங்கிலாந்து அணியை காட்டிலும் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர் விமர்சகர்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,