தேக்கம்பட்டி சுந்தரராஜன் பாடலை வைத்து பலர் லாபம்

 தங்களது தந்தை தேக்கம்பட்டி சுந்தரராஜன் பாடலை வைத்து பலர் லாபம் ஈட்டி வருவதாக அவரது குடும்ப வாரிசுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் எழுதி, இசையமைத்த ’கண்டா வர சொல்லுங்க. மணிகண்டனை கண்டா வர சொல்லுங்க’ என்ற பாடலின் மெட்டை அப்படியே பயன்படுத்தியுள்ளதோடு, வரிகளை சற்று மாற்றியும் தனுஷின் ’கர்ணன்’ திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் வாரிசுகள்.

திரைக்கு வருவதற்கு முன்பே பலரது மனதையும் கொள்ளையடித்து டிரெண்டிங்கில் உள்ள இந்த பாடல்தான் தற்போது எழுந்துள்ள பல சர்ச்சைக்கும் காரணமாகியுள்ளது. தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மண்ணின் மைந்தனான சுந்தரராஜன் 13 வயதில் இருந்தே நாட்டுப்புற பாடல்களை இயற்றி இசையமைத்து பாடும் திறன் பெற்றிருந்தார். 1970களில் மதுரை ஆல் இந்தியா ரேடியோவில் ‘அங்கே இடி முழங்குது’ என்ற பாடலை பாடியதின் மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றார்.

அவரது பாடல்கள் கேசட் வடிவில் வெளிவர, சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தன. உளவாளி படத்தில் பாடிய “மொச்ச கொட்ட பல்லழகி” என்ற பாடல் தேக்கம்பட்டி சுந்தரராஜனின் இசை மகுடத்தில் வைரமாய் பதிந்தது. சொற்ப வருமானமாக இருந்தாலும், மக்களின் கைத்தட்டலும் பாராட்டுதலும் மட்டுமே தனக்கான அங்கீகாரம் என கருதியதால் கடைசி வரை வறுமையிலேயே உழன்றார் தேக்கம்பட்டி சுந்தரராஜன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் 2002ல் உயிரிழக்க அவரது குடும்பத்தினர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் இயற்றி, இசையமைத்த பாடல்களை தமிழ் சினிமாவில் பயன்படுத்தி பலர் லாபமடைவதாக ஆதங்கப்படுகின்றனர் அவரது வாரிசுகள்.



பெற்றாள் பிராமணத்தி, வருவாளா வரமாட்டாளா, மொச்ச கொட்ட பல்லழகி என 500க்கும் அதிகமான நாட்டுப்புற பாடல்கள் சுந்தரராஜனின் இசைக்கு சான்றாய் இன்றும் உள்ளன. எட்டுப்பட்டி ராசா, பருத்திவீரன், கண்ணே கலைமானே என வசூலை வாரிகுவித்த திரைப்படங்கள் பலவற்றிலும் தேக்கம்பட்டி சுந்தரராஜனின் பாடல் இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் கூட நாட்டுப்புறக்கலைஞர்கள் பலர் தேக்கம்பட்டி சுந்தரராஜனின் பாடலை பாடி பரிசுகளை வென்றுள்ளனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்கள் தந்தையின் பாடல்களை பயன்படுத்துவோர் அதற்கான அங்கீகாரத்தையும், தொகையையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள் தேக்கம்பட்டி சுந்தரராஜனின் வாரிசுகள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,