சைனஸ் தலைவலி" -

 சைனஸ் தலைவலி" - 




மழைக்காலம் தொடங்கி விட்டால் போதும்... ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா, சளி, இளைப்பு என்று ஆரோக்கியப் பிரச்னைகள் வரிசை கட்டி வந்து விடும். அதிலும் மூக்கில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்னையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும்.


‘சைனஸ்’ என்றால் என்ன?


நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப்பைகள் (Para Nasal Sinuses) உள்ளன. இதற்குப் பெயர் தான் சைனஸ். மூக்கின் உட்புறமாக புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ், ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் கன்னத்தில் உள்ள சைனஸ், மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது, எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ள சைனஸ், பீனாய்டு சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரச்னை தான்.


நாம் சுவாசிக்கும் காற்றை தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப்பைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்கு திரவம் தேங்கும் போது, அங்கு அழற்சி உண்டாகும். இதன் விளைவால் சைனஸ் பிரச்னை (Sinusitis) ஏற்படுகிறது.


சைனஸ் பாதிப்பு ஏன்?


ஆரோக்கியக் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும் தான் சைனஸ் பிரச்னைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும் போது சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ என அழைக்கப்படுகிற மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்னையைத் தூண்டுகின்றன.


அழற்சியே அடிப்படை மாசடைந்த காற்றில் கலந்து வரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்து விடும் போது, அங்குள்ள ‘சளிச் சவ்வு’ வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும்.


ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை, வாசனை திரவியம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதை சாப்பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நனைந்தால் இதே நிலைமை தான். சைனஸ் அறையில் அழற்சி அதிகமானாலும், மூக்கில் சதை வளரும் போதும் இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை மோசமடையும்.


அறிகுறிகள் என்னென்ன?


அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். முகம் கனமாகத் தெரியும். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். பற்கள் கூட வலிக்கலாம். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியான மூக்குச் சளி வெளியேறும். சைனஸ் பாதிப்பு நீடித்தால், சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது... ருசியை உணர முடியாது.


நோயின் வகைகள்


1. திடீர் சைனஸ் அழற்சி (Acute sinusitis). இது திடீரெனத் தாக்கும்.

2 வாரங்கள் இதன் பாதிப்பு இருக்கும். ஒரு சிலருக்கு அதிகபட்சமாக 4 வாரங்கள் வரை பாதிப்பு நீடிக்கும்.

2. மிதமான சைனஸ் அழற்சி (Subacute sinusitis). திடீரெனத் தாக்கும் இதன் பாதிப்பு 8 வாரங்கள் இருக்கும்.

3. நீடித்த சைனஸ் அழற்சி (Chronic sinusitis). இதன் பாதிப்பு 8 வாரங்களுக்கு மேல் நீடிக்கும்.

4. தொடரும் சைனஸ்அழற்சி (Recurrent sinusitis). ஒரு வருடத்தில் 3முறைக்கு மேல் சைனஸ் தொல்லை வந்தால் அதை ‘தொடரும் சைனஸ் அழற்சி’ என்கிறோம்.


பரிசோதனைகள் என்னென்ன?


சைனஸ் தொல்லையைக் கண்டறிய முகத்தை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது வழக்கம். இதில் சந்தேகம் வரும்போது சி.டி. ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். இப்போது மூக்கு எண்டோஸ்கோப்பி (Nasal endoscopy) பரிசோதனை மூலமும் சைனஸ் பாதிப்பைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. இவற்றுடன் வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமையைக் கண்டறியும் பரிசோதனைகள், சளிப் பரிசோதனைகள் ஆகியவையும் மேற்கொள்ளப் படுவதுண்டு.


என்னென்ன சிகிச்சை?


ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த ஆன்ட்டிஹிஸ்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது அவசரத்துக்கு உதவும். சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது. இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயர்களை பயன்படுத்தலாம். இவற்றால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது.


மூக்கின் வெளிப்புறத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்துவதால், ரத்தத்தில் ஸ்டீராய்டு மருந்து கலப்பதற்கு வாய்ப்பில்லை. மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இந்த மூக்கு ஸ்பிரேயர்களை பயன்படுத்த வேண்டியது முக்கியம். மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்தி காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகி சுலபமாக வெளியேறிவிடும்.


தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம். இவற்றை மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டும். நோயாளி சுயமாக அடிக்கடி இந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. எண்டோஸ்கோப்பி உதவும்!முன்பெல்லாம் சைனஸ் திரவத்தை வெளியேற்ற மூக்கினுள் துளை போடுவார்கள். இப்போது எண்டோஸ்கோப்பி உதவியுடன், ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன சிகிச்சை முறையில், வலி இல்லாமல் மிகத் துல்லியமாக சிகிச்சை அளித்து முழு நிவாரணம் அளிக்கமுடியும். மூக்கின் நடுஎலும்பு வளைவு, சதை வளர்ச்சி போன்றவற்றுக்கும் இந்தக் கருவி மூலம் சிகிச்சை தர முடியும்.


தீய விளைவுகள் என்னென்ன?


சைனஸ் பாதிப்பு மிகவும் மோசமானால், சில நேரங்களில் அங்குள்ள நோய்த்தொற்று மூளைக்கும் பரவி மூளையில் அழற்சி ஏற்பட்டு, மூளைக் காய்ச்சல், மூளை உறைக் காய்ச்சல், மூளையில் சீழ் கட்டுவது போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவிடும்.


தடுப்பது எப்படி?


சுயசுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் பேணுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஜலதோஷம் உள்ளவர்களின் அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமைப் பொருளைத் தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தினமும் அரை மணி நேரம் பிராணாயாமம் செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.செய்யக்கூடாதவை


குளிர்பானங்கள் கூடாது, பனியில் அலையக் கூடாது, புகைபிடிக்கக் கூடாது, புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது, மூக்கை பலமாக சிந்தக் கூடாது, விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது, மூக்கடைப்பைப் போக்கும் இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது, இது போல் ‘வேப்பரப்’ களிம்பை அளவுக்கு மேல் மூக்கின் மீது தடவினால் மூக்கில் உள்ள ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மூக்கு புண்ணாகிவிடும்.


==


- டாக்டர் கு.கணேசன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,