இரவு நேரத்தில் மட்டும் 'நெஞ்செரிச்சல்' அதிகமா இருக்க காரணம்
இரவு நேரத்தில் மட்டும் 'நெஞ்செரிச்சல்' அதிகமா இருக்குன்னு தெரியுமா?
நெஞ்செரிச்சல் என்பது ஒரு பொதுவான நிலை. இதனால் தினந்தோறும் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்த நிலையை இதய நோயுடன் தொடர்புடையதாக நினைத்து குழப்பமடைகிறார்கள். ஆனால் இது ஒரு இரைப்பை குடல் பிரச்சனை தான். வயிற்றில் உள்ள அமிலமும், உணவும் மேல் நோக்கி (உணவுக்குழாய்) பயணிக்கும் போது இது நிகழ்கிறது. இதனால் உணவுக்குழாயின் சுவர்களில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இது இதயத்திற்கு அருகாமையில் நிகழ்வதால், இது நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நெஞ்செரிச்சலால் நீங்கள் மட்டும் தான் அவதிப்படுகிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். அமெரிக்கன் காஸ்ட்ரோஎன்டாலஜி கல்லூரியின் கூற்றுப்படி, 60 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறையாவது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் அதை அனுபவிக்கின்றனர். மேலும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நெஞ்செரிச்சல் அறிகுறிகளை அதிகம் அனுபவிக்கின்றனர்.
நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஒருவர் காரமான உணவை உண்ட பின் அல்லது இறுக்கமான பேண்ட் அணியும் போது சந்திக்கலாம். ஆனால் சிலர் தங்களின் வாழ்க்கை முறை பழக்கங்கள் அல்லது மருந்துகளால் அன்றாடம் இந்த பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.
பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் நெஞ்செரிச்சலை அநேக மக்கள் அனுபவிக்கின்றனர். இதற்கு காரணம் ஈர்ப்புவிசை. நின்று கொண்டிருக்கும் போது அல்லது நடக்கும் போது, ஈர்ப்பு விசையால் உணவானது உணவுக் குழாய் வழியே வயிற்றை அடைந்து, செரிமான செயல்பாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால் படுக்கும் போது, ஈர்ப்பு விசையை இழப்பதால், செரிமான மண்டலத்தில் இருக்கும் உணவு மற்றும் அமிலங்கள் உணவுக்குழாய் நோக்கி பயணித்து, நெஞ்செரிச்சலை உண்டாக்குகின்றன. அதனால் தான் இரவு நேரத்தில் நெஞ்செரிச்சலை பலரும் சந்திக்கின்றனர்.
குறிப்பிட்ட மருந்துகள், சிகரெட் மற்றும் மதுபானம் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களை விட அதிகமாக இரவு நேரத்தில் நெஞ்செரிச்சலை சந்திப்பார்கள். ஆனால் இரவு நேரத்தில் அனுபவிக்கும் நெஞ்செரிச்சலைக் குறைக்க சில வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் தூக்கத்தைக் கெடுக்கும் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.
முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடல் பருமனுடன் இருப்பவர்கள் தான் இரவு நேரத்தில் நெஞ்செரிச்சலை சந்திக்கிறார்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல் இருந்தால் அல்லது பெரிய தொப்பையைக் கொண்டிருந்தால், இரவு தூங்கும் போது வயிற்றில் அதிகளவு அழுத்தம் கொடுக்கப்பட்டு, வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயை நோக்கி சென்று, நெஞ்செரிச்சலை உண்டாக்கும். இதைத் தடுக்க ஒரே வழி உடல் எடையைக் குறைப்பது தான்.
GERD நோயாளிகள் புகைப்பிடிப்பதை நிறுத்திய பின் 40 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு முன்னேற்றம் இருப்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே ஆய்வில், புகைப்பிடிப்பதை கைவிடாத நோயாளிகள் 20 சதவீதத்திற்கும் குறைவான முன்னேற்றத்தையே கண்டனர். எனவே GERD அறிகுறிகளை மேம்படுத்துவதற்கான மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று புகைப்பிடிப்பதை நிறுத்துவது. இதனால் இரவு நேர நெஞ்செரிச்சல் குறைவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
நாள்பட்ட நெஞ்செரிச்சல் பிரச்சனையை சந்திப்பவர்கள், இதிலிருந்து நிவாரணம் பெற கொழுப்பு குறைவான உணவை சாப்பிட வேண்டும். சொல்லப்போனால், இவர்களது உணவில் கொழுப்பு 20 கிராமும், கலோரிகளானது 500-க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். அதோடு இரவு உணவு உண்ட பின், மூன்று மணிநேரம் கழித்து தான் படுக்கைக்கு செல்ல வேண்டும். பொதுவாக உணவானது முழுமையாக செரிமானமாவதற்கு 4-5 மணிநேரம் ஆகும். ஆனால் மூன்று மணிநேரத்தில் ஓரளவு உணவு ஜீரணிக்கப்பட்டு, ஒருவித சௌகரியத்தை அளிக்கும். எனவே தான் இரவு உணவை படுக்கைக்கு மூன்று மணிநேரத்திற்கு முன் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.
இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், இரவு உணவானது சிம்பிளாகவும், லைட்டாகவும் இருக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலத்தால் எளிதில் ஜீரணிக்க முடியும். மேலும் நெஞ்செரிச்சல் பிரச்சனையும் தடுக்கப்படும்.
உங்களுக்கு நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏற்படுமானால், இரவு நேரத்தில் கொழுப்பு நிறைந்த மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். அதோடு இரவு மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அமில சுரப்பைத் தூண்டிவிடும்.
எப்போதும் தூங்கும் போது இடது பக்கமாக திரும்பி தூங்க வேண்டும். ஏனெனில் இடது பக்கத்தில் தூங்கும் போது, இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய்க்கு செல்லும் வாய்ப்பு குறைவாக இருக்கும். அதோடு தலையை சற்று உயரமாக வைத்து தூங்குங்கள். ஏனென்றால் இந்த நிலை ஈர்ப்பு விசை வேலை செய்ய அனுமதிக்கும்.
Comments