பயிரை மேயும் வேலிகள்

 வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள். இங்கு வேலி, வேலியையே மேய்ந்த அவலமாகியுள்ளது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல்துறை உயரதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது கொடுத்துள்ள புகார், காவல்துறை தாண்டியும் அரசியல் தளம் முதல், பொதுமக்கள் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில், மேலும் அதிர்ச்சி ஏற்படுத்துவது, புகார் கொடுக்கச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, ராஜேஷ் தாஸ் அழுத்தத்தின் காரணமாகக் காவல்துறை உயரதிகாரிகள் இருவரால் புகாரை தவிர்க்கும்படி அறிவுரை கூறப்பட்டிருக்கிறார், தடுக்கப்பட்டிருக்கிறார், மிரட்டப்பட்டிருக்கிறார், உடல் ரீதியான மல்லுக்கட்டு அளவுக்கு மரியாதையின்றி நடத்தப்பட்டிருக்கிறார்.
நடந்த சம்பவங்களின் கோவை, ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாமான்யப் பெண்களின் நிலை என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் முதலாவதாக இருக்கும் காவல்துறையிலேயே மலிந்துகிடக்கும் பாலியல் குற்றங்கள், அம்பலமாகியுள்ளன.
என்ன நடந்தது?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது பிப்ரவரி 21-ம் தேதியன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் அவருடைய பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். பணி முடிந்து சென்னைக்குத் திரும்பிய ராஜேஷ் தாஸ், தன் மாவட்டம் வழியாகச் சென்றபோது, மரியாதை நிமித்தமாகத் தன் மாவட்ட எல்லையில் நின்று அவரை வரவேற்றுள்ளார் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.
முக்கிய ஆலோசனை என்று கூறி பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொன்ன ராஜேஷ் தாஸ், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பெண் எஸ்.பி ராஜேஷ் தாஸை எச்சரித்துவிட்டு அங்கிருந்து விலகி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி திரிபாதி ஆகியோரிடம் இது குறித்துப் புகார் செய்தார். ராஜேஷ் தாஸ், ஏற்கெனவே இந்தப் பெண் எஸ்.பி-க்கு விரும்பத்தகாத பெர்சனல் மெசேஜ்கள் அனுப்பியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதையும் தன் புகாரில் ஆதாரங்களாகச் சேர்த்திருக்கிறார் அவர்.
தகவலறிந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி-யை சமாதானம் செய்ய அவரது அலைபேசி, அலுவலக எண் என்று அழைத்தும் பலனில்லை. அடுத்ததாக, பெண் அதிகாரியின் அலுவலகத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், ராஜேஷ் தாஸின் `அசைன்மென்ட்'டின்படி பெண் எஸ்.பி-யிடம் பேசினார். `இதெல்லாம் நடக்குறதுதான், பெரிது படுத்த வேண்டாம், அவரு பெரிய ஆளு, உங்களுக்குத்தான் பிரச்னை' என்ற ரீதியில் `பஞ்சாயத்து' செய்ய, எதற்கும் பணியாத பெண் எஸ்.பி அவர் பெயரையும் புகாரில் சேர்த்தார்.
தன் புகாரை நேரில் தெரிவிப்பதற்காக சென்னைக்குக் கிளம்பிய பெண் எஸ்.பி-யிடம் தனது அடுத்த 'மீடியேட்டர்' அம்பாக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-யான கண்ணனை அனுப்பினார் ராஜேஷ் தாஸ். சாலையில் பெண் எஸ்.பியின் கார் நிறுத்தப்பட்டு, சமாதானம், மிரட்டல், உடல் ரீதியான மறித்தல்வரை அதிகாரம் பாய்ந்துள்ளது. அனைத்தையும் மீறிச் சென்ற பெண் எஸ்.பி, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-யின் பெயரையும் தன் புகாரில் இணைத்தார்.
ஐ.பி.எஸ்ஸே ஆனாலும் பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்கள் ஆதரவற்ற நிலைக்கு ஆளாவார்கள் என்ற எச்சரிக்கையை அனுப்பும் விதமான காட்சிகள், அடுத்து அரங்கேறின. கொடுக்கப்பட்ட புகார், காவல்துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் அதிகாரத்தால் நகர்வின்றிக் கிடக்க, ஒரு சில மீடியா அதைக் கையில் எடுக்க, அடுத்து எதிர்க்கட்சி தலைவர்களும் குரல் கொடுக்க, அதன் பிறகே நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
தொடர்ந்து, ராஜேஷ் தாஸிடம் விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார் தமிழக உள்துறை செயலாளர். சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு `உதவி' செய்த இன்ஸ்பெக்டரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட, செங்கல்பட்டு எஸ்.பி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள், விசாரணைகள் எல்லாம் தேர்தல் நேர அச்சம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஸ்டன்ட்கள் என்பதையும் நாம் அறியாமல் இல்லை. இதற்கு முன் காவல்துறையைச் சேர்ந்த பெண்களால் தங்கள் துறை உயரதிகாரிகள் குறித்து கொடுக்கப்பட்ட பாலியல் புகார்கள் சீந்துவாரின்றிக் கிடப்பதே அதற்கு சாட்சி.
இதற்கு சமீபத்திய உதாரணம்... லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யான முருகன் மீது, அந்தத் துறையிலேயே பணியாற்றி வந்த ஒரு பெண் எஸ்.பி கொடுத்த புகார். ஓராண்டுக்கு மேலாகியும் இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை இல்லை. மாறாக, உயர்ந்த பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்படுகிறார்... முருகன். பிறகு, அந்தத் துறையிலிருப்பவர்ளுக்கு பயமா வரும்... துணிச்சல்தானே வரும்? அமைச்சர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் இருக்கும் எஜமானர்களின் காலில் விழுந்தால் காப்பாற்றிவிடப் போகிறார்கள் என்கிற தைரியத்தில் யாரை வேண்டுமானாலும் கைப்பிடித்து இழுக்கத்தானே செய்வார்கள்.
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் புகார்! - சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சிக்கியது எப்படி?
என்ன படித்து, பொறுப்பு வகித்தாலும் ஓர் ஆணின் மனதில் பெண் என்பவள் பாலியல் கருவி என்ற எண்ணம் மாறாதிருப்பது இன்னொரு முறை வெளிப்பட்டிருக்கிறது. இவர் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரியாக இருந்தால்கூட என்ன, இவரை `அணுகி' பார்க்கலாம்' என்ற ராஜேஷ் தாஸ்களின் தைரியத்துக்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் இதுவரை இவ்வாறு பாலியல் ஒடுக்குமுறை செய்த பெண்களின் கண்ணீர் மௌனங்கள். புகார் சொன்னவரையே குற்றவாளியாக்கும் சமூக மதிப்பீடுகள். ஒருவேளை மீறி இவர்களின் ஆண் அதிகாரத்தை எதிர்த்தாலும் அதற்கான எந்த ஆதரவும் எவரிடமும் இருந்து கிடைக்காத கைவிடப்பட்ட நிலை. இதுபோல இன்னும் பல தடைகள்.
ஆனால், இம்முறை இந்தத் தடைகளை எல்லாம் தளராமல் கடந்து துணிச்சலுடன் புகாரை பதிவு செய்திருக்கும் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரிக்கு... வணக்கங்கள்.
பாலியல் குற்றங்களுக்கு எந்தத் துறையும் விதிவிலக்கல்ல என்பதே துயரம். அதிலும், காவல்துறையில் அந்தக் குற்றம் வெளிப்படும்போது, அதற்கு எதிரான கண்டனங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டியிருக்கிறது. காரணம், நாட்டின் குற்றங்களை சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பில் முதல் வரிசையில், முதல் எண்ணில் நிற்கும் துறை இது. மேலும், இனி பாலியல் குற்ற நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளும்போது, `நீங்க மட்டும் ஒழுங்கா? எங்க மேல நடவடிக்கை எடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?' என்ற கேள்வி திருப்பப்பட்டால் தலைகுனிந்து நிற்க வேண்டும் காக்கித் தொப்பிகள்.
ஓர் உயரதிகாரி பாலியல் குற்றம் செய்கிறார். அடுத்தடுத்த அடுக்கில் உள்ள அதிகாரிகள் அவரை பாதுகாக்க ரௌடியிஸம் செய்கிறார்கள். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யின் கார் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறிக்கப்பட்ட காட்சிகள், ஒரு கேங்ஸ்டர் படத்துக்கான ஸ்கிரிப்ட் அளவுக்கு வன்முறையுடன் நடந்துள்ளன.
`ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரில் விசாரணை எப்படி இருக்கும்?' - முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி
`பாஸ்' ராஜேஷ் தாஸால் அனுப்பப்பட்ட `கூலிப்படை' ஐ.ஜி மற்றும் எஸ்.பி, அதிரடிப்படை காவலர்கள் மூலம் பெண் எஸ்.பியின் காரை வழிமறித்துள்ளனர். சமாதானம் முதல் பகிரங்க எச்சரிக்கைவரை மிரட்டியுள்ளனர். அவரை திரும்பிப் போகச் சொல்லியுள்ளனர். அவரது கார் சாவியை எடுத்துள்ளனர். மல்லுக்கட்டும் அளவுக்கு நிலைமை மீறியுள்ளது. எனில், இவர்கள் `போலீஸ் இல்ல பொறுக்கி' என்பதில் மாற்றுக் கருத்து என்ன இருக்க முடியும்?
மேலும், `சட்டம் ஒழுங்கு(!)' டிஜிபி பாலியல் புகாருக்கு ஆளாகிறார் எனில், காவல்துறையில் உள்ள பெண்களின் நிலைமை மேல் கவலை ஏற்படுகிறது. காவல்துறை வாட்ஸ்அப் குரூப் உரையாடல்களில்கூட, இந்தப் புகார் குறித்து காவல்துறை ஆண்கள் யாரும் கண்டனங்களைக்கூட பகிராமல் இருப்பதாகவும், அதைக் குறிப்பிட்டு அதே குரூப்பிலேயே தங்கள் வேதனை, ஆற்றாமை, கோபத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்த பெண்கள் என்றும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், இந்தச் செய்தி பொதுச்சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவு பற்றி யோசிக்கும்போதும் சோர்வு சேர்கிறது. வீட்டிலிருந்து பொதுவெளிவரை எந்தப் பெண்ணின் உடலையும் தங்கள் பாலியல் வேட்கைக்கான பொருளாகவே கருதிவந்த ஆண் மனதுக்கு, பாலியல் தொல்லை தண்டனைக்குரிய குற்றம் என்பதே இப்போதுதான் தீவிரமான சட்ட செயல்பாடுகளாலும், தண்டனைகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், `பெண்ணின் உடைகள்தான் பாலியல் குற்றங்களுக்கான காரணம் என்றீர்களே, காவல்துறை சீருடையிலும் இப்போது அதே காரணம் சொல்லப்படுமா?' என்ற கேள்வியை நாம் பொதுச் சமூகத்தை நோக்கி வீசும் வேகத்தில், இன்னொரு கவலையும் கூடுதலாகச் சேர்கிறது. `போலீஸ்லேயே இப்படித்தான் இருக்காங்களாம், நாம பண்ணினா என்ன தப்பு?' என்று, அவர்களின் குற்றவுணர்வற்ற மனநிலை இன்னும் கெட்டிப்படாதா?
பெண்களை இழிவுசெய்யும் இதிகாச உதாரணங்கள்... இன்னும் அவை தொடர வேண்டுமா அழகிரி?
இப்போது, சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க, விசாகா கமிட்டி குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை குறித்த புகாரை விசாரிக்க அமைக்கப்படும் இந்த விசாகா கமிட்டி குறித்த தரவுகள், இன்னொரு தேசிய அவலம். இந்தியாவில், பணியிடத்தில் பாலியல் தொல்லையைத் தடுப்பதற்கான வரையறைகள் உருவாக்கப்பட்டு 24 வருடங்கள் ஆகின்றன. அதைச் சட்டமாக்கி எட்டு வருடங்கள் ஆகின்றன. முறைசார்ந்த பணியிடங்களில் இவற்றின் செயல்பாடுகள் குறித்து சொற்பமான வெளிப்படை தரவுகளே உள்ளன. சொல்லப்போனால், பெண்கள் எதிர்கொள்ளும் பணியிட பாலியல் தொந்தரவு புகார்கள் குறித்து ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகள் எதுவும் அரசால் நிர்வகிக்கப்படவில்லை. இந்தப் பெண்களின் நிலை இப்படியிருக்க, இந்திய பெண் உழைப்பாளர்களில் 95% முறைசாரா பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை இன்னும் துயரம்.
இப்படி எல்லா வகையிலும் இது ராஜேஷ் தாஸ்களின் தேசமாகவே இருக்கிறது. என்றாலும், இப்படி ஒரு சூழலிலும், அதிகார அடுக்குகள் தாண்டி தன் புகாரை பதிவு செய்திருக்கும் பெண் எஸ்.பி-யின் தீர்க்கம், தொடர்ந்து கிழிக்கப்படவிருக்கும் முகமூடிகளுக்கான எச்சரிக்கை.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,