எஸ். என். லட்சுமி


எஸ். என். லட்சுமி (1927 – பெப்ரவரி 20, 2012) (வயது 85) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. 1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர்.

விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை வட்டம் சென்னல்குடி அருகே உள்ள பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். சர்வர் சுந்தரம், துலாபாரம், மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது “தென்றல்” , சரவணன் மீனாட்சி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
இளமையும் வாழ்க்கையும்
லட்சுமியின் தாய் பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி விருதுநகரில் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னைக்குப் பயணமானார். அங்கு மிகுந்த முயற்சிகளிடையே சந்திரலேகா திரைப்படத்தில் குழு நடனமொன்றில் பங்கேற்றார். அங்கிருந்து எஸ். வி. சகஸ்ரநாமம் வழிகாட்டுதலில் சேவா ஸ்டேஜ் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் கே. பாலச்சந்தரின் ராகினி ரிக்கிரியேசன்ஸ் நாடகக்குழுவில் இணைந்தார். 1959 ஆம் ஆண்டில் வெளிவந்த தாமரைக்குளம் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரையுலகில் நுழைந்தார். பாக்தாத் திருடன் திரைப்படத்தில் புலியுடனான சண்டைக் காட்சியில் நடித்து துணிகரமானப் பெண்மணி என்ற பெயர் பெற்றார்.
தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
திருமணம் ஆகாத லட்சுமி பல இடங்களுக்கும் தானே தனது சிற்றுந்தியை ஓட்டிக்கொண்டுச் செல்வார். சென்னையில் சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.
நன்றி:-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவர் எஸ்.என்.லட்சுமி. பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி.

தமிழ்த் திரையுலகம் கண்ட சிறப்பான நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயது குடு குடு பாட்டியானாலும் கூட தனது நடிப்பை விடாமல், தொடர்ந்து வந்தவர் லட்சுமி. அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே அம்மாகவாக நடித்து அசத்தியவர். இந்தக் காலத்து நடிகர்களுடனும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். துலாபாரம் படத்தில் இவரது கேரக்டர் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1000. ஆனால் அதில் இவரது நடிப்பு பல ஆயிரம் படங்களுக்குச் சமமானது. சமீப காலமாக டிவி தொடர்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, ஒரு படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது முதுக் தண்டுவடத்தில் அடிபட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்போடு வாழ்ந்து வந்தவர் லட்சுமி. தனது சாலிகிராமம் வீட்டில் அண்ணன் பேத்திகளோடு வசித்து வந்தார்.
நாடகங்களிலேயே அசத்தியவர் ஆரம்ப காலத்தில் இவர் நாடக நடிகையாக இருந்தார். என்.எஸ்.கேவின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார். பின்னர் கே.பாலச்சந்திரன் ராகினி ரீக்ரியேஷன்ஸ் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்று நடித்தார். நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் ஸ்டண்ட் காட்சிகளிலும், பல்டி அடிக்கும் காட்சிகளிலும் நடித்து அசத்தினாராம். சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கத்திச் சண்டை பிரமாதமாகப் போடுவாராம்.
எம்.ஜி.ஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர் நடித்த முதல் படம் எது என்றால் அது நல்ல தங்காள். ஆனால் சர்வர் சுந்தரம்தான் இவருக்குப் பிரேக் கொடுத்த படமாகும். சர்வர் சுந்தரத்தில் இவரது பாத்திரத்தை யாரும் மறக்க முடியாது. பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார். அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னிநட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,