Saturday, February 6, 2021

"டெட்டனஸ்" (TT - தடுப்பூசி) என்றால் என்ன? -

 "டெட்டனஸ்" (TT - தடுப்பூசி) என்றால் என்ன? - 

காயம் ஏற்பட்டால், ஊரில் பலர் உடனே சொல்லும் வாக்கியம் “ஒரு டி.டி. இன்ஜெக்ஷன் போடு” என்பது தான். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கவல்ல நோய், டெட்டனஸ் (Tetanus). இழுப்புநோய், வில்வாத ஜன்னி, வாய்ப்பூட்டு நோய், ரணவாத ஜன்னி, நரம்பிசிவு நோய் என்று இந்த நோய்க்குப் பல பெயர்கள் உள்ளன. ‘கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி’ (Clostridium tetani) என்ற பாக்டீரியா கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது. மனித மலம், விலங்குகளின் சாணம், துருப்பிடித்த உலோகப் பொருட்கள் போன்றவற்றில், இந்தக் கிருமி உயிர் வாழும். சூரிய ஒளி, அதிக வெப்பம், அதிகக் குளிர்ச்சி, பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் அழிந்து விடும் என்பதால், முழுக் கிருமியாக இதனால் வெகுகாலம் உயிர் வாழ முடியாது. எனவே, இவை எதுவும் தம்மை அழித்து விடாதபடி, தம் மேல் ஒரு பாதுகாப்பு உறையை உற்பத்தி செய்து ‘டெட்டனஸ் சிதில்களாக’ உருமாறிக் கொண்டு, இவை வெகுகாலம் உயிர் வாழ்கின்றன.


நோய் வரும் வழி..


காற்று மற்றும் ஈக்கள் மூலம் இந்தக் கிருமி பரவுகிறது. திறந்த காயத்தின் வழியே, இது உடலுக்குள் நுழைவது ஒரு பொதுவான வழி. தவிர, முள், துருப்பிடித்த ஆணி, கம்பி, ஊக்கு போன்றவை குத்தும் போது, அவற்றின் வழியாகவும் உடலுக்குள் நுழைந்து விடும். அடுத்து, தொற்று நீக்கம் செய்யப்படாமல் போடப்படும் ஊசிகள், சுத்தமற்ற கருச்சிதைவுகள், கவனக் குறைவாகச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றின் மூலமும் இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்து கொள்ளும். நகச்சுற்று, சொறிசிரங்கு, தீக்காயம், செவியில் சீழ் வடிதல், தொப்புள்கொடிப் புண், செருப்புக்கடி, சூடுபோடுதல், பச்சைகுத்துதல் போன்றவை இந்தக் கிருமியின் வேறு சில நுழைவாயில்கள்.


காயம் அல்லது புண்ணில் புகுந்து கொண்ட கிருமிகள் அங்குள்ள திசுக்களை அழிக்கும். சீழ்பிடிக்க வைக்கும். அப்போது புறநச்சுப் பொருள் (Exotoxin) ஒன்றை வெளி விடும். இது தான் ஆபத்தானது. இது மூளைக்குச் சென்று, நரம்புத் திசுக்களை அழிக்கும். இதனால் உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படும்.


அறிகுறிகள்..


வாயைத் திறக்க முடியாது. கழுத்தை அசைக்க முடியாது. திடீரென்று முதுகு வில் போல் வளையும். வயிறு மரப்பலகை போல் இறுகி விடும். கைகால் தசைகள் விறைத்துக் கொள்ளும். நோயாளியின் உடலில் வெளிச்சம் பட்டால், உடனே வலிப்பு வரும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உயிர் இழப்பும் ஏற்படலாம்.


டெட்டனஸ் தடுப்பூசி..


டெட்டனஸ் நோயால் ஏற்படுகிற மரணத்தைத் தவிர்க்க ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) என்ற தடுப்பூசி உள்ளது. வீரியம் குறைக்கப்பட்ட டெட்டனஸ் நச்சுப் பொருளிலிருந்து (Inactivated tetanus toxin) இது தயாரிக்கப் படுகிறது. காயம் அடைந்த அனைவருக்கும் இது போடப்படுகிறது. தவிர, டி.டி.டபிள்யூ.பி (DTwP), டி.டி.ஏ.பி (DTaP), டி.டி.ஏ.பி (Tdap), டி.டி (Td) தடுப்பூசிகளும் இந்த நோயைத் தடுக்க உதவுகின்றன.


தடுப்பூசி போடப்படும் முறை..


குழந்தைகளுக்கு ஒன்றரை, இரண்டரை மற்றும் மூன்றரை மாதங்கள், ஒன்றரை வயது, ஐந்து வயது முடிந்தவுடன் டி.டி.டபிள்யூ.பி (DTwP) அல்லது டி.டி.ஏ.பி (DTaP) தடுப்பூசியைப் போட்டிருந்து, அடுத்து 10 வயதில் டி.டி.ஏ.பி (Tdap) அல்லது டி.டி (Td) போட்டிருந்தால், அதற்குப் பிறகு 10 வருடங்களுக்கு ஒருமுறை டி.டி (Td) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு தவணையிலும் போடாதவர்களும், ஒன்றிரண்டு தவணைகளை மட்டுமே போட்டுக் கொண்டவர்களும், அடுத்து எப்போது போடுகிறார்களோ அப்போது டெட்டனஸ் டாக்சாய்டு அல்லது டி.டி. (Td) தடுப்பூசியை ஆரம்ப நாளில் முதல் தவணையும், ஒரு மாதம் இடைவெளி விட்டு இரண்டாம் தவணையும், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாம் தவணையும் போட்டுக் கொள்ள வேண்டும். இதன் அளவு அரை மில்லி. புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.


டெட்டனஸ் தடுப்புப் புரதம்..


டெட்டனஸ் நோயைத் தடுக்க ‘டெட்டனஸ் தடுப்புப் புரதம்’ (Tetanus immunoglobulin) ஒன்றும் உள்ளது. இது டெட்டனஸ் கிருமிகள் வெளிக் காயத்திலிருந்து உடலுக்குள் நுழைவதற்கு முன்பே அவற்றை அழித்து விடும் தன்மை உடையது. காயம் மிகப் பெரிதாக இருக்கும் போது, இதைப் போட வேண்டும். குழந்தைகளுக்கு 250 யூனிட் என்ற அளவிலும் பெரியவர்களுக்கு 500 யூனிட் என்ற அளவிலும் புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.


காயம் பட்டவுடன் செய்ய வேண்டியவை..


காயம்பட்ட இடத்தில் சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் குறைந்தது 10 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ஆன்டிசெப்டிக் மருந்தைத் தடவலாம். பெரிய காயமாக இருந்தால் காயத்துக்குக் கட்டுப் போடலாம். காயம் மிகப் பெரிதாக இருக்குமானால், டெட்டனஸ் தடுப்புப் புரதம் போடப்பட வேண்டும். காயம் குணமாக தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும். டெட்டனஸ் டாக்சாய்டு அல்லது டி.டி.ஏ.பி (Tdap) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.


கர்ப்பிணிகளுக்குப் போடப்படும் முறை..


பிரசவத்தின் போது ‘டெட்டனஸ் நோய்’ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதைத் தவிர்ப்பதற்காக டெட்டனஸ் டாக்சாய்டு அல்லது டி.டி.ஏ.பி (Tdap) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முதல் முறை கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் முதல் தவணையாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணையைப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி இரண்டாம் தவணையைப் போடத் தவறியவர்கள், பிரசவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாவது, இரண்டாம் தவணையைப் போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயம். இரண்டாம் முறை கர்ப்பம் தரிக்கும் போதும் இதே போல் இரண்டு தவணைகள் போட்டுக் கொள்ள வேண்டும்.


சிகிச்சை என்ன?


டெட்டனஸ் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும். வெளிச்சம் அதிகம் இல்லாத, அமைதியான தனி அறையில் இவர்களுக்குச் சிகிச்சை தரப்படும். ‘ஆன்டி டெட்டனஸ் சீரம்’ (Anti tetanus serum – ATS) என்ற நச்சு முறிவு ஊசி மருந்து செலுத்தப்படும். தசை இறுக்கத்தைக் குறைக்கவும், உறக்கத்துக்கும் மருந்துகள் தரப்படும். டெட்டனஸ் கிருமிகளை அழிப்பதற்கான பென்சிலின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தரப்படும்.


தேவை விழிப்புணர்வு..


பெரும்பாலும் கிராமப்புற மக்களையும் நகர்ப்புற சேரிவாழ் மக்களையும் தான் டெட்டனஸ் நோய் அதிகம் தாக்குகிறது. விவசாயக் கூலிகள், தோட்டத் தொழிலாளர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், நடைபாதைவாசிகள் பலரும் இந்த நோய்க்குப் பலியாகின்றனர். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிக முக்கியம். குறிப்பாக, சுத்தமாக இருப்பதின் அவசியத்தை உணர்த்த வேண்டும். காயம் பட்டவுடன் தடுப்பூசி போட வேண்டும் என்ற உணர்வை ஊட்ட வேண்டும். எந்த ஒரு காயத்தின் மீதும் சாம்பல், விபூதி, சாணம், சேறு, செம்மண், பேனா மை போன்றவற்றைப் பூசக்கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


No comments:

Featured Post

73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா.

  73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா. தாய்லாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், 3-0 என்ற க...