மகா சிவராத்திரி /அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 மகா சிவராத்திரி

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய

                 விருத்தம்



1.சூல  மேந்தும் நாயகன்

     சூழ்ச்சி மாற்றும் காவலன்

ஆல முண்ட தேவதன்

    ஆத்தி சூடும் ஆண்டவன்

கால தூதர் செய்கையின்

   கார ணங்கள்  ஆனவன்

கால பாசம் நீக்கிடும்

   கால காலன் ஈசனே.


2.மூல மான மூத்தவன்

      மூடத் தன்மை மூடுவன்

மூல நாடி ஏற்றியே

     மூரி சேர்க்கும் மூலவன்

மூலக் கூறு ஆகியே

    மூகன் பேச வைத்தவன்

மூலர் பாடல் பாடவே

    மூர்த்தி யான ஈசனே.


3.ஆதி அந்தம் அற்றவன்

      ஆடும் கோல ஆதியன்

பாதி யாகும் பாகமே

      பார்வ திக்குத் தந்தவன்

சோதி ரூப சுந்தரன்

   சோத னைகள் வெல்பவன்

ஓதி நாமும் கூறுவோம்

   ஓய்வி லான்நம் ஈசனே.


4.அண்டம் எங்கும் சூழ்பவன்

     ஆக்கி னைகள் ஆள்பவன்

கண்டம் நஞ்சு ஏற்றவன்

    காமன் தோற்ற மோகனன்

தண்ட  பாணித் தாதையன்

    தந்தை யான தாயவன்

பண்டர் ஓடச் செய்தவன்

    பண்பு யர்ந்த ஈசனே.


5.நெஞ்சில் வைத்துப் 

                            போற்றுவோர்

      நேச னாகும் நேர்மையன்

அஞ்சு வோரின் ஆபதம்

     ஆசு வாக  மாற்றுவன்

அஞ்ஞை போல நம்மையும்

 அன்பில் மூழ்கச் செய்பவன்

எஞ்சம் செய்யும் வேளையில்

   ஏகன் எங்கள் ஈசனே.


6.நான்கு வேதம் தானவன்

   நாதம் போற்றும் நல்லவன்

நான்று மாற நித்தமும்

   நாத னாக நிற்பவன்

சான்று என்ன வேண்டுமா

  சாட்சி சொல்ல வந்தவன்

மான்றல் நீக்கும் மன்னவன்

 மாற்ற லர்க்கும் ஈசனே.


7.உற்று நோக்கிப்

                      பார்க்கையில்

ஊக்க மாக்கும் ஊற்றவன்

கற்ற வித்தை யாவிலும்

   காட்சி யாகும் காரணன்

நற்ற வத்தை நோற்கவே

  நாடி வந்து சேர்பவன்

பற்று விட்டுப் போகவே

   பாதை காட்டும் ஈசனே.


8.ஆடும் அண்டன் பாதமே

   ஆண வங்கள் தீர்த்திடும்

தேடும் நெஞ்சம் கோவிலாய்

  தேடி வந்து சேர்ந்திடும்

ஓடும் துன்பம் தூரமே

   ஓய்த லாகப் போயிடும்

ஏடும் போற்றிப் பாடிடும்

  ஏந்தல் எங்கள் ஈசனே.


9.சென்ம பாவம் தீருமே

     நன்மை வந்து சேருமே

அன்பு கொண்டு தேடினால்

  ஆண்டு கொள்ள நேருமே

தென்பு லத்துத் தேவதன்

   தேவர் துன்பம் தூர்த்தவன்

முன்பி ழைத்த தீமைகள்

   மூழ்க டிக்கும் ஈசனே.


10.வேண்டு கின்ற

                             வேளையில்

    வேத னைகள் நீக்குவான்

தூண்டு கோலாய் நின்றுமே

    தூத னாக மாறுவான்

ஆண்டு கோடி கோடியாய்

    ஆகி விட்ட  போதிலும்

ஈண்டு வந்து நம்மையும்

    ஈர்க்கும் தெய்வம் ஈசனே



ச.பொன்மணி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,