விலாசம் தெரியாத மேகங்கள்/மகளிர் தின மலர் 2021,

 விலாசம் தெரியாத மேகங்கள்

மகளிர் தின மலர் 2021,







கண்ணதாசன்
கல்கியில் கடைசிப்பக்கம் என்ற தலைப்பில் 1980 களில் வெளியான ஒரு கட்டுரை இது.

சில பாக்கியசாலிகள் தியாகம் செய்யாமலேயே பெயர் வாங்கிவிடுகிறார்கள்.
சில துர்பாக்கியசாலிகள் கடுமையான தியாகத்துக்கும் விளம்பரமில்லால்
மறைந்துவிடுகிறார்கள். அவர்களை மன்னர்களும் மறக்கிறார்கள் .
கவிஞர்களும் மறக்கிறார்கள். உறவினர்களும் மறக்கிறார்கள்.
இராமகாதை முழுவதிலும் யார் யாருடைய பெருமைகளோ பேசப்படுகின்றன. கணவனோடு காட்டுக்குச்சென்ற சீதாவைப்பற்றி கம்பன் உருகுகிறான்.
கம்பனை படித்த ரசிகன் உருகுகிறான்.
கம்பனது சிருஷ்டியில் ராமனும் உருகுகிறான்.
ஆனால் பதினான்கு ஆண்டுகள் கணவனைப்பிரிந்து கைம்பெண் போலவே வாழ்ந்த இலக்குவன் மனைவி ஊர்மிளாவுக்காக யார் கண்ணீர் வடித்தார்கள்?
கம்பனுக்கும் கூட கருணை இல்லாமல் போனதே.!
கணவனோடு காட்டுக்குச்செல்வது மட்டும் தியாகமல்ல.
கணவனைப்பிரிந்து நோன்பு ஏற்பதே அதைவிடப்பெரிய தியாகமாகும்.!
கொஞ்சகாலமாவது ஆரண்யத்தில் சீதா வாழ்ந்திருந்து கணவனுடைய காதலைப்பெற்றிருந்தாள். ஊர்மிளாவுக்கு !
சீதா அசோகவனத்திலிருந்ததது பெரியதாகப்பேசப்படுகிறதே.
ஊர்மிளா அயோத்தியில் கணவனைப்பிரிந்து பட்ட அவதியை யார் எண்ணு கிறார்கள்.?
உலகம் இதுதான்.
காதலிப்பதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வாங்கும் நடிகனுக்கு தரப்படுகிற
விளம்பரம் காதலையே கருவறுத்துவிட்ட தியாகிகளுக்கு இல்லையே.!
தன்னை வருத்திக்கொள்ளும் உத்தமர்கள் பூமாதேவியைப்போல வதைப்பட்டு
மாண்டுபோகிறார்கள்.
ஊர்மிளா ஒரு தேவமகள்.
மாமியார் சுமத்திரையைவிடப் பவித்திரமானவள்.
சொல்லபோனால் சீதாவைவிடவும் ஊர்மிளா உயர்ந்தவள்.
காட்டுக்குப்போகிறான் கணவன் என்றதும் நானும் வருகிறேன்
என்று அடம் பிடித்து சீதா சென்றுவிட்டாள்.
வாயைக்கூட திறக்காமல் ஒருமூலையில் நின்றுவிட்டாளே ஊர்மிளா
‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு ‘என்று அவளொன்றும் தத்துவம் பேசவில்லையே.!
சீதையின் உணர்வுகள் ஊர்மிளாவுக்கு இல்லை என்று அர்த்தமா?
அவள் கணவனை நேசிக்கவில்லை என்று பொருளா?
ஊர்மிளா லட்சிய மனைவி அவள் பாடியது ஒரு தலை ராகம்.
கணவன் என்ன சொல்லுகிறானோ அதுவே நியாளம்.!
அங்கே கேள்விக்கே இடம் இல்லை.
எண்ணிப்பார்த்தால் பெருமைக்கணக்கில் ஊர்மிளாவுக்கெ முதலிடம்.!
சீதாவுக்கு இரண்டாவது இடம்தான்.
இன்னொரு துர்பாக்கியசாலி சிலப்பதிகாரத்து மாதவி.
கண்ணகி கற்போடு வாழ்ந்ததது மரபு.
அது குல ஒழுக்கம்.
குடிப்பழக்கம்.
மாதவிக்கு என்ன தேவை.
ஆயினும் அவள் வாழ்ந்தாள்.
தனது மகள் மணிமேகலையை தன் மகள் அல்ல என்றும்
‘மாபெரும் பத்தினி மகள்’ என்றும் வாழ்த்தினாள்.
‘கற்புடையோர் மறைவதுபோல் நான் மறையவில்லையெ’
என்று கலங்கினாள்.
தன் மகளையும் துறவியாக்கினாள்.
பேசப்படவேண்டியது கண்ணகியா மாதவியா.?
கண்ணகி கடைப்பிடித்தது ஒரு நீதிபதி கடைபிடிக்கும் சட்ட நெறிகளே!
மாதவி அனுசரித்தது குற்றத்தில் பிறந்து நியாயத்தில் வளர்ந்த
சந்திரோதயம்.
எவ்வகையானும் களங்கமில்லதாவள் மாதவி.
அவளுக்குத்தரப்படவேண்டிய நியாயமான இடம் தரப்படவில்லையே.!
கண்ணகிக்கு கடற்கரையில் சிலை என்றால் மாதவிக்கு நதிகரையிலாவது வேண்டாமா.!
வேண்டாம், உயர்ந்த மனிதர்களுக்கு இந்த விளம்பரங்கள் தேவையில்லை!
மேகங்கள் வைரங்களைச்சிந்துவதில்லை.
ஆனால் அவை இல்லை என்றால் நீங்களுமில்லை
நானுமில்லை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,