மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி பிறந்த நாள் இன்று
கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது. அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது -
“என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அந்த இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதை அவர் தனது மனைவியிடமும் நண்பர்களிடம் மட்டும் பிற்காலத்தில் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதய வலிபற்றித் தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்து விட்டான் என்று அவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது உண்டு. அதற்காக அவர் வேதனைப்பட்டதில்லை. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து கார்க்கி நுகர வேண்டியிருந்தது. வெளியில் மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவித்தனர். வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையில் இருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.
நன்றி: கீற்று.காம்
Comments