இன்று திருநெல்வேலி எழுச்சி தினம்

 இன்று திருநெல்வேலி எழுச்சி தினம்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி எழுச்சி தினம் பலரால் நினைக்கப்படாமலே கடந்து போகிறது. இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்து இளைய தலைமுறையினருக்கு உணர்த்தப்படாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையும் வெட்கமும் பட வேண்டும்
அதாவது சுதந்திரப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியை, `சுயராஜ்ய நாளாக’ சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றங்கரையில் தடையை மீறி இந்த விடுதலை விழா நடந்தது. இதுபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு திருநெல்வேலிக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர், 1908-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
நெல்லை கிளர்ச்சி
இதன் எதிரொலியாக திருநெல்வேலியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாள் (மார்ச் 13) அடித்தட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சியில் திருநெல் வேலி சந்திப்பில் தற்போதுள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்து கலாசாலை மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர். இந்த கிளர்ச்சியில் பொதுச்சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. நிலமையை கட்டுக்குள் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அடக்கு முறையைக் கையாண்டனர். திருநெல்வேலியில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்த இச்சம்பவம்தான் வரலாற்றில் `திருநெல்வேலி எழுச்சி நாளாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்த கிளர்ச்சியை குறித்து, இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு ஆண்டிலும் மறக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களுக்கு தெரிவிக்காமல், தங்கள் கடமையிலிருந்து பல்வேறு சமூக அமைப்புகளும், இலக்கிய அமைப்புகளும் தவறி வருவது சுட்டிக்காட்டப்பட வேண்டும்
May be an image of text

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,