சினிமாவைப் பற்றி எஸ். பி.ஜனநாதன்
கே: சினிமாவைப் பற்றி பொதுவாக உங்கள் அறிதல்கள் என்னவாக இருக்கிறது?
ப: கேமிராவை பொறுத்த வரைக்கும் ARRI 2C, போய் இப்போது 435, D 21 என்ற வகை வந்திருக்கிறது. லைட்டிங்கை பொருத்தவரைக்கும் மினிபுரூட் என்பது வந்திருக்கிறது. என்னுடைய முதல் படமே சினிமாஸ்கோப்தான். முன்பு டிஜிட்டல் எடிட்டிங் என்பது கிடையாது. மூவியாலா என்றொரு எடிட்டிங் மிஷின் இருந்தது. இது ஒரு அமெரிக்க கம்பெனியின் பெயர். இந்த மெசின்தான் பாசமலர், பாவமன்னிப்பு எல்லாம் எடிட் பண்ணிய மிஷின். இந்த மிஷினில் நானும் வேலை செய்து இருக்கிறேன். இதற்கு அடுத்ததாக ‘steenbeck’ என்ற மிஷின் வந்தது. இது ரொம்ப அட்வான்ஸானது. அதை எப்படியாவது வாங்கவேண்டும் என்று முயற்சி செய்து எடிட்டர் லெனின் சார் ரூமுக்கு வந்தது. இந்த மிஷின் வந்த போது பெரிய திருவிழா மாதிரி இருந்தது. கொஞ்ச நாள் கழித்து டிஜிட்டல் தொழில் நுட்பம் வந்த பிறகு நிறைய இடங்களில் ‘steenbeck’ மிஷின் தூங்கிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் நிறைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நான் அருகே இருந்து பார்த்திருக்கிறேன்.
முன்பு நெகட்டிவில் படம் பிடித்து, டெவலப் செய்து, தியேட்டரில் ரஷ் போட்டுப்பார்த்து, பிறகு மூவியாலாவில் எடிட் பண்ணுவார்கள். இப்போது டெலி சினி என்று புது தொழில் நுட்பம் வந்திருக்கிறது. இதில் நெகட்டிவில் படம் எடுத்ததை டெலிசினி செய்து டிஜிட்டலில் எடிட் பண்ணுகிறார்கள். முன்பு ஒரு லட்சம் அடி சூட் பண்ணும் போது ஒரு எடிட்டிங் அசிஸ்டெண்ட் ரிப்போர்டிங் எழுதிக் கொண்டே இருப்பார். அந்த ரிப்போர்ட்டில் ஒ.கே. ஷாட்டை குறித்து தருவார். அந்த ஷாட்டை மட்டுமே ரஷ் பிரிண்ட் போடுவோம். மற்ற ஷாட் எப்படி இருக்கும் என்றே தெரியாமல் போய்விடும். அந்த பிலிம்கள் கேனில் போட்டு மலை மலையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதை எடிட்டிங் பண்ணும்போது கிரியேட்டிவ்க்கு சிக்கலாக இருக்கிறது. எப்படி என்றால் ஒரு தடவை வெட்டி ஒட்டிவிட்டு திரும்பவும் கரெக்ஷன் பண்ணும்போது கிரியேட்டிவ்விட்டியை இடிக்கிறது. இந்த எடிட்டிங்கில் ஒரு நெகிழ்வு தன்மை இல்லாமல் இருக்கிறது. இந்தக் கஷ்டங்களை எல்லாம் பார்த்து நான் இயற்கை படத்தை கிஸ்வீபீ டெக்னலாஜியில் பண்ணினேன். இந்தத் தொழில் நுட்பத்தில் சூட் பண்ணியவுடனே டெலி சினிக்கு வந்து விடும். ஒரு படத்தை 20 முறைகளில் எடிட் செய்து, எது திருப்தியாக இருக்கிறதோ அதை நீங்கள் வெளியிடலாம்.
அடுத்ததாக, நான் வேலை செய்த படங்கள் ரிலீசாகும் போது முதல் நாள் தியேட்டருக்கு போய் விடுவேன். அந்தப் படத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? எப்படி சிரிக்கிறார்கள்? பிடிக்காமல் எப்போது கத்துகிறார்கள்? எப்போது போர் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்கள்? இடைவேளையின் போது என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்று பார்ப்பேன். மக்களின் உளவியலை கணக்கில் எடுக்காமல் படத்தை எடுப்பது என்பது தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது பேராண்மை படத்தில் இடைவேளைக்குப் பிறகு தியேட்டரை விட்டு யாரும் எழுந்து போகவில்லை என்பது எனக்குப் பெரிய செய்தி. இதற்கு காரணம் தொழில் நுட்பத்தையும், மக்களின் உளவியலையும் ஓரளவிற்கு கற்றதுதான் என்று நினைக்கிறேன். எனக்கு அடுத்த தலைமுறையினர் இன்னும் ஆழமாக கற்க வேண்டும்.
நாம் நினைத்த கதையை எடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி, படம் பார்க்கும் ரசிகனின் மனநிலை என்பது பல்வேறு சூழ்நிலைகளால் வருகிற மனிதர்கள்தான். அவர்கள் சில பேர் வீட்டில் தகராறு செய்துவிட்டு வருவார்கள். சில பேர் வகுப்பை கட் அடித்துவிட்டு வந்திருப்பார்கள். இன்னும் சில பேர் கஷ்டப்பட்டு உழைத்து விட்டு ரிலாக்ஸாக இருப்போம் என்று வந்திருப்பார்கள். சிலபோர் அப்பாவிடம் திட்டு வாங்கி தியேட்டருக்கு வந்திருப்பார்கள், குடித்துவிட்டு சில பேர் படம் பார்க்க வருவார்கள். சிலபேர் ஏ.சி.யில் ஜாலியாக தூங்குவதற்கென்றே வருவார்கள். ஹீரோவை பிடிக்காதவர்களும் வருவார்கள். குடும்பத்தோடு ஒரு பொழுதுபோக்கிற்காக வருவார்கள், ஆக இத்தனை மனநிலையில் வருபவர்களை ஒரே கயிற்றில் கட்டி இழுத்து உட்கார வைப்பது கடுமையான வேலை. இதனால்தான் இன்னமும் சினிமா கிரேஸாகவும் எளிதில் கைப்பற்ற முடியாததாகவும் இருக்கிறது.
எஸ். பி.ஜனநாதன் பேட்டி
Comments