ஒட்டுப் பதிவு மெஷின்-ஐ கண்டுபிடித்த ஜி.டி.நாயுடு
அன்றே தேர்தலில் ஒட்டுப் பதிவு மெஷின்-ஐ கண்டுபிடித்த ஜி.டி.நாயுடு
இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்பு, நமது நாடு மக்களாட்சி நாடாக 1952-ஆம் ஆண்டு மாறியது. இந்திய நாடாளு மன்றத்திற்கும், மற்ற மாநில அரசுகளுக்குமுரிய சட்டமன்றத் தேர்தல்கள் 1952-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தல் முறைகளில் எல்லாம், வாக்குச சீட்டுகளில் அவரவர் சின்னங்களுக்கு எதிரே முத்திரை குத்தப்பட்டு, அவற்றை மடித்து வாக்குப் பெட்டிகளில் போடப்படுகின்றன.
பின்பு அவை, அரசு அலுவலர்களால், பெட்டிகளில் உள்ள சீல்களை உடைத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேசைகள் மீது வாக்குச் சீட்டுக்களைக் கொட்டி, அவற்றைச் சின்னங்கள் வாரியாக அடுக்கி, அதிகாரிகளால் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகளில் அதிகமான வாக்குகள் பெற்றவர்களை வெற்றி பெற்றவர்களாகத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுகிறார்கள்.
ஆட்களைக் கொண்டு வாக்குகளை எண்ணும் தேர்தல் முறை இன்று வரையிலும் இந்தியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தேர்தல்களில் இவ்வாறு வாக்குகள் எண்ணப்படும் போது, மோசடிகள் நடப்பதாகக் கூறப்பட்டு, அந்த மோசடிகள் நீதிமன்றங்களுக்கும் சென்று கொண்டிருக்கின்றதை நாம் இன்றும் பார்க்கிறோம்.
இத்தகையத் தேர்தல் மோசடிகள் ஒரு மக்களாட்சியின் ஜனநாயகத்தில் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தைப் பற்றி ஜி.டி. நாடு தனது வாழ்நாள் காலத்திலேயே சிந்தித்து, தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது, அந்த வாக்குகளைப் பதிவு செய்யும் இந்திரம் ஒன்றை , Vote Recording Machine-ஐ கண்டுபிடித்தார்.
அந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை மக்கள் வாக்களிக்கும் போது பயன்படுத்தினால், தேர்தலில் நடக்கும் மோசடிகளைத் தவிர்க்கலாம் என்பதே ஜி.டி. நாயுடு அவர்களுடைய தேர்தல் முறை நோக்கமாகும்.
எடிசன் கை விட்டார் நாயுடு கண்டு பிடித்தார்!
அமெரிக்கத் தேர்தல்களில் இப்படிப்பட்ட ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திட, விஞ்ஞானி தாமஸ் ஆல்வாய் எடிசன் அரும்பாடுபட்டு முயற்சிகளைச் செய்தார்.
ஆனால், அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் சிலர், அவரை அப்போது பகிரங்கமாகவே கேலியும் - கிண்டலும் செய்தார்கள். அதனால், அந்தத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரக் கண்டுபிடிப்பு முறையை, முயற்சியை அந்த விஞ்ஞானி கைவிட்டு விட்டார்.
அமெரிக்க நாட்டிற்கு மும்முறை பயணம் செய்த ஜி.டி. நாயுடு, எடிசனால் கைவிடப்பட்ட அந்த வாக்குப் பதிவு இயந்திர முயற்சியைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
அவர் இந்தியா திரும்பியதும், தமிழ்நாட்டில் அந்த இயந்திரத்தைத் தனது அனுபவத்தாலும், கேள்வி முறையாலும் உணர்ந்து அதற்கான விஞ்ஞான முயற்சியில் ஈடுபட்டார்.
வாக்கு அளிக்கும்போது, மக்களே தங்களது வாக்குகளை, அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் சின்னத்தில் வாக்குகளைப் பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
அந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை ஜி.டி.நாயுடு அவர்கள், சென்னையிலுள்ள பூங்கா நகரில் நடந்த பொருட்காட்சி அரங்குக் குள்ளே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அந்த இயந்திரத்தை இயக்கிக் காட்டினார். அதைக் கண்ட அதிகாரிகள், அறிஞர்கள், மக்கள், ஜி.டி.நாயுடுவை வியந்து பாராட்டி மகிழ்ந்தார்கள்.
அத்தகைய வாக்குப் பதிவு இயந்திரத்தை இந்திய நாட்டின் மத்திய ஆட்சியோ, தமிழ்நாட்டை ஆளும் அரசோ இன்று வரைப் பயன்படுத்த வில்லை. என்ன காரணமாக இருக்கும்? தமிழின் அறிவை தமிழனே அவமதிக்கும், அலட்சியப்படுத்தும் காலமாக இருந்ததே அதற்குரிய காரணமாகும். அந் நிலை இல்லையென்றால் ஜி.டி.நாயுடுவின் இயந்திரம் மக்கள் நன்மைக்காக, சிக்கன செலவுக்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அல்லவா?
தேர்தல் மோசடிகள் என்ற பெயரில் வேட்பாளர்களது வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் சென்றிடும் நிலை உருவாகி இருக்காது தானே! அதனால் பல கோடி பணம் அவரவர்களுக்கு வீண் செலவு ஏற்பட வேண்டிய அவசியம் இராமலிருந்திருக்கலாம் இல்லையா?
என்ன காரணத்தாலோ ஜி.டி. நாயுடு அவர்களின் வாக்குப் பதிவு இயந்திரம், அப்போதைய இந்திய அரசுகளாலும், தேர்தல் ஆணையத்தாலும் பயன்படுத்தப் படாமல் போய்விட்டது. அது நாட்டின் துர்வினைப் பலனாகவே அமைந்து விட்டது.
தேர்தல் அதிகாரியாவது
நாயுடு பெயரை வைத்தாரா?
ஆனால், இந்த 2004-ஆம் ஆண்டின்போது, ஜி.டி. நாயுடுவுடைய வாக்குப் பதிவு இயந்திரம், அவருடைய பெயரைக் கூறாமலேயே தானாகவே தேர்தலில் நுழைந்து வருவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம், குறிப்பாக பெரிய தேர்தல் அதிகாரியாக இருக்கும் லிங்டோ அவர்கள், அந்த அரிய செயலிலே ஈடுபட்டு வெற்றியும் பெற்று வருவதை நாடு அதிசயமாகப் பார்த்து வருகின்றது. வாழ்க ஜி.டி. நாயுடு அவர்களுடைய வாக்குப் பதிவு இயந்திரத்தின் அவதாரம் என்று வாழ்த்துவோமாக!
நன்றி: நொய்யல் மீடியா
Comments