உலக வன நாள்
உலக வன நாள்

நவீனமயமாகி விட்ட இவ்வுலகில் நிலவும் வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, கடல்நீர் பெருக்கம் என்று தற்போது நாம் சந்தித்து வரும் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணம் காடுகள் அழிக்கப்பட்டது தான். இத்தனைக்கும் உலகில் மனிதன் உட்பட பெரும்பாலான உயிரிகளின் வாழ்வாதாரம் காடு ஆகும்.
ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தாலும், நவீனமயமாதலாலும் இந்த காடுகள் படிப்படியாக அழிந்து வருகின்றன. இது நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, வருங்கால சந்ததியினருக்கும் பெரும் கேடாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்த காடுகளின் முக்கியத்துவத்தை அனைத்துலக மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காகவும், எஞ்சியிருக்கும் காடுகளை அழிவிலிருந்து காப்பதற்கும், புதிய காடுகளை உருவாக்குவதற்கும் வழிவகை செய்யும் என்ற நோக்கத்தோடு உலக வன தினம் அனுசரிக்கப்படுகிறது.
2012ஆம் ஆண்டு, நவம்பர் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொது அவை, மார்ச் 21ஆம் தேதி உலக வன தினமாக அறிவித்தது. தொடர்ந்து 2013ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி சர்வதேச வன தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவளித்துள்ளன. இத்தினத்தன்று அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து உலக நாடுகளின் பல பகுதிகளில், மரம் நடுதல், காடுகளை பேணிக் காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு நாடும் தனித்தனியே வன தினத்தையும் அனுசரித்து வருகின்றன
Comments