கண்நீர் அழுத்த நோய் தினம்
World Glaucoma Day
கண்நீர் அழுத்த நோய் தினம்
கிளாகோமா என்றால் என்ன?
கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாவதால், அது பார்வை நரம்பை (optic nerve) கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துக் கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் எந்தவித முன் அறிகுறிகள் தென்படாமல் நம் பார்வை முழுவதையும் ரகசியமாகத் திருடிவிடும் கண்ணின் நீர் அழுத்த நோயே கிளாகோமா என்று அழைக்கப்படுகிறது.
கொஞ்சம் விரிவாக சொல்வதானால் கண் நீர்அழுத்த நோய்க்கு ‘ஓசையின்றிப் பார்வையைத் திருடும் நோய்’என்று ஒரு பெயரும் இருக்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும். பொதுவாகவே 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொண்டால் இந்த நோய் இருப்பது தெரிந்துவிடும்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி யாருக்காவது கண் நீர்அழுத்த நோய் இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு இரண்டு முறை கண் நீர்அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
இந்த நோயின் தொடக்கத்தில் எந்தவொரு அறிகுறியும் வெளியில் தெரியாது. திடீரெனக் கண்பார்வை குறைவது, இதன் முதல் அறிகுறி. இந்த நிலைமையில் டாக்டரிடம் வரும்போது, நோயாளிக்குப் பார்வை நரம்பில் 30 முதல் 50 சதவீதம்வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது.
இதைத் தொடர்ந்து, இன்னும் சில அறிகுறிகள் ஏற்படும். எரியும் மின்விளக்கைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வட்டவட்டமாக வண்ண வளையங்கள் அல்லது புள்ளிகள் தெரியும். இவர்கள் அடிக்கடிக் கண்ணாடியின் 'பவரை' மாற்றுவார்கள். தியேட்டர்களில் சினிமா பார்த்துவிட்டு இருட்டிலிருந்து வெளியே வரும்போது கண்களைச் சுற்றிக் கனமாகத் தெரியும்.
இரவில் பார்வை மங்கலாக இருக்கும். இருட்டுக்குக் கண்கள் பழகத் தாமதமாகும். பகலில் ஒரு பொருளைப் பார்த்தால், அந்தப் பொருளின் நடுப்பகுதி நன்றாகத் தெரியும். ஆனால், பக்கப்பார்வை இருக்காது. நடுப்பார்வை நன்றாகத் தெரிவதால், தங்களுக்கு உள்ள நோயை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள இவர்கள் தவறிவிடுகின்றனர். ஆனால், நாளாக ஆக நடுப்பகுதிப் பார்வையும் குறைந்துவிடும். கண்ணைச் சுற்றி ஒரு மந்தமான வலி, எப்போதும் இருக்கும்.
இரண்டாம் வகை கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்களுக்குத் திடீரென்று கடுமையான கண்வலியும் தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும். வாந்தி வரும். கண்கள் சிவந்துபோகும். கண்களில் நீர் வழியும். பார்வை மங்கும். கண்கள் கூசும். விளக்கைச் சுற்றி வளையங்கள் தெரியும்.
மூன்றாவது வகை பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவது. இதுதான் கொடூரமானது. குழந்தையின் கண் மாட்டுக்கண் போல, பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கண்கள் கூசும். பார்வை குறைந்திருக்கும்.
Comments