.கவிதைப் பொருளாய் கந்தன்./.உலகக் கவிதை தினம்

 

உலகக் கவிதை தினம்

[ஏழுசீர் காழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]1.கருத்தில் முருகன் கவினாய் இருந்தே

                   காட்சி கொடுத்த  தினமிதுவே

          திருத்தம் நிகழாத்  திருப்பம் வரவே

                   தினமும் உதவும் நலம்வரவே

          வருத்தம் தவிர்த்த வாழ்க்கை அமைக்க

                   வடிவேல் துணையாய் வரும்நிதமே

          எருக்கம் மலராய் இருந்த எனக்குள்       

                   எழிலாய் அமர்ந்தான் முருகோனே.

 

2.திருவாய் மலர்ந்தே தெளிவாய் குமரன்

திருத்தம் உரைத்த தினமிதுவே

          அருவாய் இருந்தும் அகத்தின்  அகமாய் 

                   அகந்தை அழித்த தினமிதுவே

          மருவாய் மிகுந்த மணத்தைப் படைப்பில் 

                   மகிழ்ந்தே கொடுத்த தினமிதுவே

          கருவாய் எனக்குள்  கருத்தை விதைத்தே

                   களிப்பாய்  சிரித்த தினமிதுவே

 

3.கவிதைப் பொருளாய் கந்தன் இருந்தால்

கரங்கள் படைக்கும் கவிபெருகும்

          அவியாய்* கவிதை அளவைக் கடந்தே            [அவி-யாகப்பொருள்]

                   அமுதாய் அவரின் செவிசேரும்

          அவிதா* எனவே அழுதே அழைத்தால்    [அவிதா-உதவ கூறும் குரல் ]

                   அழுக்கம்* விலக்கும் அமரோனாய்                  [அழுக்கம்-கவலை ]

          கவியம்* அனையக் காவல் இருந்தே                [கவியம்-கடிவாளம்]

                   காப்பான் காப்பான்  முருகோனே .

 

4.விபரம் அறியா வினைகள் புரிந்த

விசதம்* விளக்கி எனக்குள்ளே    [விசதம்-வெளிப்படையானது]

          அபயம் கொடுக்க அருகில் அவனும்

                   அழகாய் அமர்ந்த நாளிதுவே

          அபர* மாக அமரர் வாழ                       [அபரம்-கவசம்]

                   அமைதல் செய்த முருகோனென்

          அபலம்* தெரிந்தும் அடியேன் கரத்தில்   [அபலம்-பலவீனம்]

                   அசல* லானான்  முருகோனே    [அசலன்-கடவுள்]

 

 5.பன்னிரு விழியின் பார்வை பட்டால்

பார்ப்ப தெல்லாம் கவியாகும்

          பன்மம்* தரித்தே பாடல் புனைந்தால்     [பன்மம்-விபூதி]

                   பாரும்* உனக்கே வசமாகும்                  [பார்-உலகம்]

          பன்னீர் மணக்கும் பரமன் மேனி

                   பார்க்க பார்க்க விதிமாறும்

          பன்னும்* உடையாய் பழுத்தாற்  போலே                   [பன்-பருத்தி]

                   பலவாய் அருளும் நிறைந்ததுவே .

 

6.முருகன் முன்னே முகவரி தேடி

முழுதாய் பலவாய் கவிவருமே

          குருவாய் குகரம்* உறையும் குகனின்               [குகரம்-மலைக்குகை]

                   குணங்கள் சொன்னால் கவிவருமே

          குருகைத் * தனக்கே கொடியாய் கொண்டான்   [குருகு-சேவல்]

                   குருமை * கூறக் கவிவருமே                            [குருமை-பெருமை]

          பருகும் தமிழின் பதமாம் அவனின்

                   படைப்பு யாவும் கவிமயமே . .. கவிஞர் ச. பொன்மணி   


 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,