உலக மகளிர் தினம்
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1 . மகளிர் மாண்பை மனத்தில் ஏற்று
மகிமை கொண்டு வாழுவோம்
இகழும் தீயர் எதிரே வரினும்
எதிர்த்து நின்று ஓட்டுவோம்
புகழும் சேரும் புவியும் மீளும்
புதுமைப் பெண்கள் செய்கையால்
அகில உலகம் அனைத்தும் வாழும்
அருமை மகளிர் வாழ்கவே.
2.உலகம் யாவும் ஒருமைப் படவே
உலக மகளிர் தினத்திலே
நிலவுகின்ற நிசத்தை எல்லாம்
நேர்மை யாகப் பேசுவோம்
உலவும் தென்றல் உலகம் எங்கும்
ஒன்று என்ற உணர்வினால்
பலரும் அறிய பாதை அமைய
பாட்டில் அவரைப் போற்றுவோம்.
3.பெண்மை போற்றி பெருமை பேசி
பேதம் மாற்றி வாழுவோம்
உண்மையாக உணரும் வகையில்
உணர்ந்த தெல்லாம் உணர்த்துவோம்
கண்ணை மூடிக் காவல் செய்யும்
கள்ளத் தனத்தை நீக்கவே
அண்டம் எங்கும் அவரை வாழ்த்த
ஆற்றல் இன்று கூட்டுவோம்.
4 .நாட்டில் நன்மை நாளும் சேர
நலிவு நீங்கி வாழவே
வீட்டில் பெண்ணை வீழ்த்தி டாமல்
விதண்டை வாதம் விலக்குவோம்
காட்டில் மதியாய் காய்ந்தி டாமல்
கசடு மாற்ற விளையுவோம்
ஓட்டுக் காக உயர்த்தி டாமல்
உணர்வில் அவரை உயர்த்துவோம்.
5 அனைத்துத் துறையும் அழியாப் புகழை
அறிந்து கொள்ள வைக்குமே
நினைத்துப் பார்த்தால் நிதமும் நிகழும்
நிதர்ச னங்கள் நிமிர்த்துமே
மனத்தில் எண்ணி மகிமை ஆற்றும்
மாதர் செய்கை சிறக்குமே
குணத்தில் மிளிரும் குடும்ப விளக்காய்
குலத்தை உயர்த்தும் உயர்த்துமே.
.. கவிஞர் ச. பொன்மணி
No comments:
Post a Comment