Monday, March 1, 2021

மேஜர் சுந்தரராஜன்

 மேஜர் சுந்தரராஜன் காலமான நாளின்று

😢
மேஜர் சுந்தர் ராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர்.
மேஜர் சந்திரகாந்த் என்ற மேடை நாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல் வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார். அவருடைய ஸ்பெஷாலிடி ஆங்கிலத்தில் பேசிவிட்டு அதையே மீண்டும் தமிழிலும் சொல்லும் வழக்கம், ரொமப நஆளாக கேலி செய்யப்பட்டு வந்தது.
மேஜ குறித்து கொஞ்சம் விரிவாக சொல்லும் படி கட்டிங் கண்ணையாவிடம் கேட்ட போது மெயிலில் அனுப்பிய சேதியிது:
கம்பீரமான அப்பா வேடத்துக்கு பெருமையைச் சேர்த்தவர் இந்த நடிகர்மேஜர் சுந்தரராஜன்.
இவரின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பெரியகுளம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே நாடகங்களில் நடிக்கலானார்.
தனது குரல் வளத்தையும், நடிப்பாற்றலையும் ஒருசேர பயன்படுத்தி மொனோ ஆக்டிங்கில் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு வேலை தேடி சென்னைக்கு வந்த மேஜர் சுந்தரராஜனுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிட்டியது. நாவலாசிரியர் அகிலன் எழுதிய ‘நெஞ்சின் அலைகள்’ நாடகத்தல் முக்கிய வேடத்தில் நடிச்சார்.இந்த நாடகத்தை பிரபல டைரக்டர் எல். வி. பிரசாத் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார். அவர் மூலம் சினிமாவில் நுழைய வாய்ப்பு வரும் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தார் சுந்தரராஜன்.
ஆனால் வாய்ப்பு வரவில்லை. பின்னர் ‘வைஜயந்திமாலா’ என்ற படத்தில் நடிக்கும் ‘சான்ஸ்’ கிடைத்தது. அவரது துரதிருஷ்டமோ என்னவோ படம் வெளிவரவில்லை.
1962ல் சுந்தரராஜன் அஃபீஷியலாக் சினிமாவில் அறிமுகமானார். ‘பட்டினத்தார்’ படம்தான் அவரது முதல் படமாகும். டைரக்டர் கே. சோமு இயக்கிய இந்தப் படத்தில் மேஜர் சுந்தரராஜனுக்கு சோழமன்னன் வேடம் கிடைத்தது. கதாநாயகன் பாடகர் டி. எம். செளந்தரராஜன். பிறகு கொஞ்ச காலம் ‘சான்ஸ்’ வரவில்லை. சில செய்திப் படங்களுக்குக் குரல் கொடுத்தார்.
அதே சமயம் டைரக்டர் கே. பாலசந்தரின் நாடகங்களில் நடித்தார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றினாலும், நாடக நடிப்பின் மூலமே புகழ்ப் பெற்றார். கே. பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் சுந்தரராஜனுக்குப் பெரும் புகழை தேடிக் கொடுத்தது. அவருக்கு கிடைத்த இந்த வேடப்பொருத்தம் பேசும் திறன், நடிப்பு ஆகியவை, திரை உலகினிரிடையே அவரைப்பற்றி பேச வைத்தது.
1965ல் கே. பாலசந்தர் டைரஷனில் ‘நாணல்’ என்ற படத்தில் மேஜர் சுந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்தார்.கதாநாயகி கே. ஆர். விஜயா. சரவணா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் நன்றாக ஓடியது. ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத்தினர் சினிமா படமாகத் தயாரித்தனர். கே. பாலசந்தர் டைரக்ட் செய்ய, மேஜர் சுந்தரராஜன், ஜெயலலிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இந்தப்படம் 1966ல் வெளிவந்தது.இந்தப் படத்துக்குப்பின் ‘மேஜர் சுந்தராஜன்’ என்று அழைக்கப்பட்டார்.
ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்த வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா அறிமுகமானார். அவருடைய தந்தை வேடம் மேஜர் சுந்தரராஜனுக்கு கொடுக்கப்பட்டது. சிறப்பாக நடித்து மேலும் புகழ்பெற்றார். இப்படி அப்பா வேடம் கிடைச்சது குறித்து ஒரு நிருபர் விசாரிச்சப்போது ‘அப்பா வேடத்தில் நடிப்பது பற்றி நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. கதாநாயகனாக நடிப்பதில் கிடைக்கும் புகழும் பெருமையும் அப்பா வேடத்திற்குக் கிடைக்காது என்ற அச்சம் எனக்கு இருந்தது. சர்வர் சுந்தரம் படத்தில் அப்பா வேடத்தில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. முன்னுக்கு வரத் துடித்த எனக்கு அப்பா வேடத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்ற நினைப்பு. அப்போது, டைரக்டர் கே.சி.கே., “அப்பா வேடம் ஏற்பதில் தயக்கம் காட்டாதே! இப்போதுள்ள நிலையில் இந்த வேடத்திற்குதான் அதிகம் போட்டியில்லை. கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால், நிறைய போட்டிகள் இருக்கிறது. அப்பா வேடத்திற்கு என்ன குறைச்சல்? உன் உடலமைப்புக்குப் பணக்கார அப்பா வேடம்தான் கிடைக்கும். அழகான டிரஸ் இருக்கும். ஏதாவது ஒரு காட்சியில் அழ வேண்டியிருக்கும். குறைந்த கால்ஷீட்தான். சண்டைக் காட்சிகள் இருக்காது. தயங்காமல் ஒப்புக் கொள்” என்றார்.
அன்று ஆரம்பித்த அப்பா வேடம்தான். கதாநாயகனாக நடிக்க வந்த எனக்கு அப்பா வேடம் கிடைத்ததும் ஒருவகை அனுபவம்தான்.
நான் நடித்த முதல் படம் பட்டினத்தார், அதில் எனக்கு ராஜா வேடம். படப்பிடிப்பின் போது ராஜாக்கள் போடும் செருப்பு இல்லாததால், எங்கெங்கோ தேடி செருப்பைக் கொண்டு வந்தார்கள். அது என் காலுக்குப் பெரிதாக இருந்தது. காலுக்குத் தகுந்தபடி செருப்பை வெட்டி, என்னை நடிக்கச் செய்தார்கள்.
என் முதல் படத்திலேயே ஒரு அனுபவத்தைத் தெரிந்து கொண்டேன். காட்சியில் எந்த ஒரு குறை வந்தாலும், ஆரம்ப நிலையிலுள்ள நடிகனைத்தான் வந்து சேரும் என்பதுதான் அது.
நாடகத்தில் எவ்வளவுதான் சிறந்த முறையில் முக பாவம் காட்டினாலும், சினிமாவில் பாராட்டுப் பெறுவது போல் நாடகத்தில் பெற முடியாது என்பதை நாணல் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். திரைப்படத்தில் ஒரு சிறிய கண்ணசைவைக் கூட குளோஸ் அப் மூலம் காட்டிப் பாராட்டுதலைப் பெற முடியும்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிப்பதற்காக வாசன் என்னை அழைத்திருந்தார். வேடத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். “என் பாத்திரம் மிகச் சிறியதாக இருக்கிறது. பல படங்களில் பெரிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.
அதற்கு வாசன், “மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் நடிக்க உன்னை நான் அழைக்கவில்லை. வாழ்க்கைப் படகு படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்தபோது உன் நடிப்பை எடை போட்டுவிட்டேன். இந்தப் படத்தில் நீ நடிப்பது சிறிய பாத்திரமானாலும் சிவாஜியுடன் நடிக்கப் போகிறாய். உனக்கு அது மேலும் பெயரைக் கொடுக்கும். பேசாமல் நடி!” என்றார். படம் முடிந்து திரையிடப்பட்டதும், ‘சிவாஜியுடன் சிறப்பாக நடித்த நடிகர் யார்?’ என்ற கேள்வி படம் பார்த்தவர்களின் மனதில் எழுந்தது. அப்பொழுது வாசன் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. என்னால் மறக்கமுடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.
நான் கதாநாயகனாக நடித்த படம் மேஜர் சந்திரகாந்த். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் என்னை “இன்னும் ஒரு படத்தில்கூட கதாநாயகனாக ஏன் நடிக்கவில்லை?” என்று கேட்கிறார்கள். தமிழ்த்திரை உலகத்தில் யார் கதாநாயகியுடன் டூயட் பாடி, கடைசியில் மணந்து கொள்கிறானோ, அவனே கதாநாயகன் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.
தெய்வ மகன் படத்தின் மூலம் நான் சிறந்த நடிகன் என்ற தமிழக அரசின் பரிசைப் பெற்றேன். அந்தப் படத்தில்தான் சிவாஜியோடு போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்தேன் என்ற ஏகோபித்த பாராட்டுதல் கிடைத்தது. என்னை ஊக்குவித்த அப்படத்தின் டைரக்டர் திரிலோகசந்தரை என்னால் மறக்க முடியாது.
நான்கு படங்களில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் ‘சுந்தர்ராஜனும் நடிக்கிறார்’ என்ற பாராட்டைப் பெற்றேன். இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதவற்றில் ஒன்று.’ அப்படீன்னு சொல்லி இருந்தார்
எம் ஜி ஆர், சிவாஜி. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று சகல நடிகர்களுடனும் நடித்தவர் மேஜர் சுந்தரராஜன். மொத்தத்தில் மேஜர் சுந்தரராஜன் 900 படங்கள் நடித்துள்ளார். இவற்றில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தது மட்டும் 200 படங்களுக்கு மேல் மேஜர் சுந்தரராஜன் படங்களில் நடித்ததுடன் ‘கல் தூண்’ “ஊரும் உறவும்” நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான், அந்த ஒரு நிமிடம் ஆகிய சினிமா படங்களை டைரக்ட் செய்தார். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார்.
இருதய நோயினால் அவதிப்பட்ட மேஜர் சுந்தரராஜன் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பிறகு வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த நிலையில். இதே நாளில் 2003 அன்று திடீரென்று மரணம் அடைந்தார்.

No comments:

Featured Post

73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா.

  73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா. தாய்லாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், 3-0 என்ற க...